Published : 02 Aug 2016 12:08 PM
Last Updated : 02 Aug 2016 12:08 PM

ஜெயித்துக்காட்டுமா ரியோ?

கடந்த இரண்டு மாதங்களாகவே அந்த வார்த்தை உலகெங்கும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்பட ஆரம்பித்துவிட்டது. உலக விருதுகளில் உச்சம் என்று நோபல் பரிசு கருதப்படுவதைப் போல, விளையாட்டுப் போட்டிகளின் உச்சம் என்று கருதப்படுவது அந்த வார்த்தை - ஒலிம்பிக்.

ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுப் பணம் கிடையாது. ஆனால் உலக விளையாட்டு வீரர்கள் மிகப் பெரிய கவுரவமாகக் கருதுவது ஒலிம்பிக் போட்டிகளைத்தான். அதற்குக் காரணம், உலகம் கொண்டாடும் அணி விளையாட்டான கால்பந்து முதல் உலகின் பிரபலத் தனிநபர் விளையாட்டான டென்னிஸ்வரை முக்கிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருப்பதும், போட்டிகளில் கடைப்பிடிக்கப்படும் தரக் கட்டுப்பாடு களும்தான்.

தென்னமெரிக்க மண்ணில்

பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவில், இந்த வாரம் தொடங்கவிருக்கிறது 31-வது ஒலிம்பிக் போட்டி. தென்னமெரிக்க மண்ணை ஒலிம்பிக் போட்டி மிதிப்பது இதுதான் முதன்முறை.

உலகின் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைக் கடும் போட்டிக்கு இடையே பிரேசில் பெற்றிருந்தாலும், அடிப்படையில் அது ஒரு மூன்றாம் உலக நாடு. அதிபர் தில்மா ரூசெஃப் மீதான வழக்கு விசாரணை, உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிநிலை, ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் ஒலிம்பிக் போட்டிகளை பிரேசில் நடத்தப் போகிறது. அதற்கு முன்னர் சின்ன ஃபிளாஷ்பேக்.

நவீன ஒலிம்பிக்

பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்ட, மிகப்பெரிய தத்துவஞானிகள் தோன்றிய பண்டைய கிரேக்கத்தில்தான் (இன்றைய கிரீஸ்) உலகின் மாபெரும் விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்கின் தொடக்கமும் அமைந்தது.

நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை, ஃபிரான்ஸைச் சேர்ந்த கல்வியாளர் பியர் தெ குபர்தென் (Pierre de Coubertin) பண்டைய ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலமாக உலக நாடுகளை ஒருங்கிணைக்க முடியும் என்று நம்பினார். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 1894-ல் அவருடைய தலைமையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கப்பட்டது. பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896-ல் நடைபெறத் தொடங்கின.

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தை அறிவிக்கும் ஒலிம்பிக் தீபம், இன்றளவும் கிரீஸில்தான் முதலில் ஏற்றப்படுகிறது. அதேபோல ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஒவ்வொரு நாடும் மைதானத்துக்குள் அறிமுகப்படுத்தப்படும் பேரணியில், எப்போதுமே கிரீஸ் அணிதான் முதலில் வரும். ஒலிம்பிக் விளையாட்டு அந்த நாட்டில் தோன்றியதால் இந்தச் சிறப்பு கவுரவம்.

அத்துடன் ஒலிம்பிக் போட்டி என்பது காலம்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் பல்வேறு முக்கிய நடைமுறைகளை, சின்னங்களை உள்ளடக்கியது. இவைதான் ஒலிம்பிக்கின் நோக்கத்தையும் பிரம்மாண்டத்தையும் ஒருசேரத் தூக்கிப் பிடிக்கின்றன. அவை:

குறிக்கோள்

ஒலிம்பிக்கின் குறிக்கோள், ‘இன்னும் வேகம், இன்னும் உயரம், இன்னும் வலிமை’

இந்த வாசகத்தை முன்வைத்தவர் பியர் தெ குபர்தெனின் நண்பர் பாதிரியார் ஹென்றி டிடான். 1894-ல் இந்தக் குறிக்கோள் முன்மொழியப் பட்டது.

ஐந்து வளையங்கள்

ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள், பூமியில் உள்ள ஐந்து கண்டங்களைக் குறிப்பதாக நவீன கால வரையறை சொல்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா-ஆசியா, இரண்டு அமெரிக்கக் கண்டங்கள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவையே அந்த ஐந்து கண்டங்கள். இருந்தபோதும் 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து வளையங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், அப்போது பங்கேற்ற நாடுகளின் கொடியில் இருந்த ஐந்து வண்ணங்கள் எடுக்கப்பட்டே இந்தச் சின்னம் உருவாக்கப்பட்டது.

கொடி

ஒலிம்பிக் கொடி என்பது வெள்ளை பின்னணியில் ஒன்றோடு மற்றொன்று பிணைந்த நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு வளையங்களைக் கொண்டது. உலக விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஓரிடத்தில் கூடுவதையும் மனிதர்கள் வாழும் ஐந்து கண்டங்களின் ஒருங்கிணைவையும் எடுத்துக்கூறும் ஒலிம்பிக்கின் சர்வதேசத் தத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது. 1920 ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக் போட்டிகளில்தான் ஒலிம்பிக் கொடி முதன்முதலில் பறக்க விடப்பட்டது.

தீபம்

1928, ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஒலிம்பிக் சின்னங்களில் ஒன்றாக ஒலிம்பிக் சுடர் கருதப்படுகிறது. இதற்கான தீப ஓட்டம் 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின்போது தொடங்கியது. ஒலிம்பிக் தீபம், பண்டைய ஒலிம்பியாவில் புறப்பட்டு உலகம் முழுவதும் வலம்வந்து கடைசியாகப் போட்டி நடைபெறும் நாட்டை அடைகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை அறிவிக்கும் முதல் அம்சம், ஒலிம்பிக் தீப ஓட்டம். இந்தத் தீபம் ஏற்றப்பட்டதுமுதல் போட்டிகள் முடியும்வரை எங்கும் தடைபடாமல், அணைக்கப்படாமல் வைக்கப்படுகிறது.

நல்லெண்ணச் சின்னம்

1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியில் ‘லிட்டில் வால்டி’ என்ற டாஷ்ஹண்டு வகை நாய்க்குட்டி போட்டிகளின் நல்லெண்ணச் சின்னமாக முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியை நடத்தும் நாட்டின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலும் விளையாட்டின் சாராம்சத்தைப் பிரபலப்படுத்தும் வகையிலும் இந்தச் சின்னங்கள் உருவாக்கப்படுகின்றன.

என்னதான் நடக்கும்?

மேற்கண்ட அனைத்தும் ஒலிம்பிக் போட்டிகளின் பிரிக்க முடியாத அம்சங்களாக இருக்கின்றன. அதேநேரம் என்னதான் நல்லிணக்கம், உலக ஒருங்கிணைப்புக்காக ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், சர்வதேச அளவில் அதிகாரப்போட்டியும் உள்நாட்டு அளவில் ஏற்றத்தாழ்வுகளும் பெரிதாகக் குறையவில்லை.

ஒலிம்பிக் போட்டிகளும் அதைப் பிரதிபலித்தே வந்துள்ளன. விளையாட்டு வீரர்-வீராங்கனைகளும் பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஒலிம்பிக்கில் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டியுள்ளனர். அந்த வகையில் போர், நிறவெறி, புறக்கணிப்பு, பயங்கரவாதச் செயல்பாடுகள் ஆகியவை ஒலிம்பிக் போட்டிகளில் இடையீடு செய்துள்ளன.

இவற்றைத் தாண்டி ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது என்பது, ஒரு நாடு தன்னுடைய பொருளாதார வலுவை நிரூபிக்கும் விஷயமாக இருந்துவருகிறது. ரியோ ஒலிம்பிக் போட்டிகளை பிரேசில் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x