Last Updated : 07 Mar, 2017 10:39 AM

 

Published : 07 Mar 2017 10:39 AM
Last Updated : 07 Mar 2017 10:39 AM

சேதி தெரியுமா? - சூரியனில் நாசா

அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பவுள்ளது. பூமியில் இருந்து 14.96 கோடி கி.மீ. தொலைவில் சூரியன் உள்ளது. இதன் வெப்பம் மற்றக் கிரகங்களைவிட அதிகமானது. அதனால் சூரியனில் ஆராய்ச்சியில் ஈடுபடுவது எளிதான காரியமல்ல. அதன் வெப்பத்தைத் தாங்குமளவுக்கு விசேஷ விண்கலம் தயாரிக்கும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகிறார்கள். இது ‘நாசா’ விஞ்ஞானிகளின் முதல் முயற்சி என கோட்டார்ட் விண்வெளி மைய விஞ்ஞானி எரிக் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். சூரியனின் உள்புற வெப்ப நிலை 20 லட்சம் டிகிரி செல்சியஸ்.

ஆனால் அதன் சுற்றுப்புற வெப்ப நிலை 5,500 டிகிரி செல்சியஸ். அதனால் சூரியனின் மேற்பரப்பில் ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். 11.4 சென்டி மீட்டர் கன அளவு உள்ள கார்பன் காம்போஸிட் தடுப்பால் விண்கலம் உருவாக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு 2018-ல் இந்தப் புதிய விண்கலம் சூரியனுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு இல்லாத ரயில்

முன்பதிவுசெய்யப்படாத பயணிகளுக்கான விசேஷ ரயில் சேவை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (Antyodaya Express) தனது சேவையைத் தொடங்கியுள்ளது. அலுமினியம் காம்போசிட்டில் அதன் உள்ளறை வடிவமைக்கப்பட்டுள்ளது. துருப்பிடிக்காத இரும்பால் கதவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நீர் சுத்திகரிப்பு சாதனங்கள், பசுமைக் கழிவறை, செல்ஃபோன் சார்ஜ் செய்யும் வசதி, எல்.இ.டி. விளக்கு, திருட்டைத் தடுக்கும் வசதி, தீ விபத்தைத் தடுக்கும் வசதி போன்ற பல வசதிகளுடன் நவீன முறையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெகுதூரம் செல்லும் ரயிலில் முதல்முறையாக இரு பக்கமும் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அந்த்யோதயா எக்ஸ்பிரஸில் முதல் ரயில் மும்பைக்கும் டாடா நகருக்கும் இடையிலும், இரண்டாம் ரயில் கொச்சிக்கும் ஹவுராவுக்கும் இடையிலும் இயக்கப்படுகிறது.

முதல் ஹெலிகாப்டர் நிலையம்

நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் நிலையம் டெல்லியில் ரோகிணி பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. ஹெலிகாப்டர்களைப் பழுது நீக்கும் வசதியும் இந்த நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 150 பயணிகளைக் கையாளக்கூடிய வசதியும் உள்ளது. பொதுத் துறை நிறுவனமான ‘பவன் ஹான்ஸ்' நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தை மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு திறந்து வைத்தார்.

7 புதிய தவளைகள்

கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 7 புதிய சிறு தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவை இரவுத் தவளைகள் ஆகும். இந்தத் தவளை இனங்கள் அனைத்தும் குழந்தைகளின் நகக் கண்களில் அமர்ந்துகொள்ளும் அளவில் மிகச் சிறியவை. சுமார் 0.7 அங்குலம் அளவு கொண்டவை.

அவற்றுள் நான்கு தவளைகள் 0.5 அங்குலம் அளவுக்கு மிகச் சிறியவை. உலகின் மிகச் சிறிய தவளை இனங்கள் இவை. பியர்ஜெ (PeerJ) என்னும் ஆராய்ச்சி இதழில் பிப்ரவரி 21-ல் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. கேரள மாநில வனத் துறையுடன் இணைந்து டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

சீமைக் கருவேலத்தை அழிக்க உத்தரவு

சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் குறைவதாலும் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாலும் அவற்றை அகற்றக் கோரி பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு மாதங்களுக்குள் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. சீமைக் கருவேலம் (prosopis juliflora) மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தாவர இனம். இது 1960-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு எரிபொருளுக்காகக் கொண்டுவரப்பட்டது.

துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை

டெல்லியில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் (International Shooting Sport Federation-ISSF) ஆண்கள் 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் ஜித்து ராய் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் அமன்பிரீத் சிங்கிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஜித்து ராய் மொத்தம் 230.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துப் புதிய உலகச் சாதனையும் படைத்துள்ளார்.

லக்னோவைச் சேர்ந்த ராய், இந்திய ராணுவத்தின் கூர்கா படைப் பிரிவில் (11-வது பட்டாலியன்) பணியாற்றி வருகிறார். 2014-ல் நடந்த இரண்டு உலகக் கோப்பை போட்டித் தொடர்களில் 2 வெள்ளி பதக்கங்களையும், ஒரு தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x