Published : 06 Jun 2017 10:48 AM
Last Updated : 06 Jun 2017 10:48 AM

சேதி தெரியுமா? - ஐ.ஐ.டி. சென்னை மாணவர் மீது தாக்குதல்

ஐ.ஐ.டி.-சென்னை வளாகத்தில் நடைபெற்ற மாட்டிறைச்சி விழாவில் கலந்துகொண்டதற்காக ஆர். சூரஜ் என்ற மாணவர், அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பினரால் கடந்த 30-ம் தேதி கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலால் சூரஜ்ஜின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஐ.ஐ.டி.-யில் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டம் படித்துக்கொண்டிருக்கும் இவர், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தில் உறுப்பினராக இருக்கிறார். சங்க பரிவார அமைப்பான ஏ.பி.வி.பி.-யைச் சேர்ந்த மாணவர் மனிஷ் குமார் சிங்கால் சூரஜ் தாக்கப்பட்டிருக்கிறார். இவர் கடல் பொறியியலில் முதுகலை படித்துக்கொண்டிருக்கிறார்.

மே 28 அன்று நடைபெற்ற மாட்டிறைச்சி விழாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்களால் மிரட்டப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், சூரஜ்ஜைத் தாக்கிய மனிஷ் குமாரும் தன்னுடைய கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையில் விசாரணை ஐ.ஐ.டி. நிர்வாகம். இந்திய மாணவர் சங்கம், தமிழக எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டவர்கள் மாணவர் சூரஜ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.



பின்வாங்கிய அமெரிக்கா, முன்னெடுத்துச் செல்லும் ஐரோப்பா

‘2015 பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை’யிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜூன் 1-ம் தேதி தெரிவித்தார். 190-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தக் காலநிலை உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் கடந்த டிசம்பர் 2015 மாநாட்டில் தெரிவித்தன. சராசரி உலக வெப்பநிலையை முன் தொழில்மய அளவிலான 1.5–2 செல்சியசாக வைத்திருப்பதற்கு அந்த நாடுகள் அனைத்தும் உறுதியளித்திருந்தன. இந்நிலையில் ட்ரம்ப், “இந்த உடன்படிக்கை காலநிலையைப் பற்றி குறைவாகப் பேசுகிறது. அமெரிக்காவைவிட மற்ற நாடுகள் பொருளாதார ஆதாயம் அடைவதைப் பற்றி நிறையப் பேசுகிறது. அதனால், அமெரிக்கா பாரிஸ் பருவநிலை மாநாட்டின் உறுதிமொழிகளைப் பின்பற்றாது” என்று சொல்லியிருக்கிறார்.

இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியதால், விதிகளின்படி அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும் நவம்பர் 2020-ல் தான் மீண்டும் புதிய உடன்படிக்கையில் பங்கேற்க முடியும். ஆனால், ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்துக்கான கட்டமைப்புப் பேரவையில் (UNFCCC) இன்னும் அமெரிக்கா உறுப்பினராகவே தொடர்கிறது. ‘1997 கியோட்டோ நெறிமுறை’யில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு. புஷ் இதே மாதிரிதான் பருவநிலை மாநாட்டிலிருந்து விலகினார். அதையே தற்போது டிரம்பும் செய்திருக்கிறார்.

பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபரின் முடிவுக்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். உலகின் பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் ஒன்றிணைந்து செயல்படப்போவதாகவும், பின்வாங்கப்போவதாக இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர். உலகில் பசுமை இல்ல வாயுவை அதிகமாக வெளியிடுவதில் தற்போது இரண்டாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது.



கர்நாடகத்தைச் சேர்ந்த நந்தினி முதலிடம்

2016-ம் ஆண்டு யூ.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் மே 31-ம் தேதி வெளியாகின. கர்நாடகத்தைச் சேர்ந்த நந்தினி கே.ஆர். யூ.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பெற்றிருக்கிறார். இவர் தற்போது ஃபரிதாபாதில் இந்திய வருவாய் துறை அதிகாரியாகப் பயிற்சி பெற்றுவருகிறார். இரண்டாவது இடத்தை அன்மோல் ஷேர் சிங் பிடித்திருக்கிறார். இவர் பிரபல பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் படித்த பொறியியல் பட்டதாரி. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ரோனாங்கி கோபால் கிருஷ்ணா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இந்தத் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் 18 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள். நான்காவது முயற்சியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றிருக்கும் நந்தினி, “என் கனவு நனவானதுபோல உணர்கிறேன். நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டுமென்றுதான் எப்போதும் ஆசைப்பட்டேன். அதற்காக நிறைய முயற்சிகள் செய்தேன். 2014-ல் இந்திய வருவாய் துறை அதிகாரியாகத் தேர்வானேன். 2015-ல் மீண்டும் தேர்வு எழுதினேன். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. மீண்டும் எழுதியபோது முதலிடம் பிடித்திருக்கிறேன். இது ஓர் அற்புதமான அனுபவம்” என்று சொல்லியிருக்கிறார். இந்தத் தேர்வு எழுதியவர்களில் 1,099 பேரை மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது யூ.பி.எஸ்.சி.



உலகின் மிகப் பெரிய விமானம்

உலகின் மிகப் பெரிய விமானம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலனால் ஜூன் 1-ம் தேதி கலிபோர்னியா பாலைவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ஸ்ட்ராடோலாஞ்ச்’ (Stratolaunch) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானம் 385 அடி நீளமும் 580 டன் எடையும், ஆறு ஜெட் இஞ்ஜின்களையும் கொண்டது. ஆனால், இந்த விமானம் பயணிகளின் பயன்பாட்டுக்கானது கிடையாது.

ஏவுகணைகளை நேரடியாகக் காற்றின் வழியாக விண்வெளியில் ஏவுவதற்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தரைமட்டத்திலிருந்து ஏவுகணைகளை ஏவும்போது ஜெட் எரிவாயு அதிகமாகச் செலவாகும். அந்தச் செலவை இந்த விமானம் குறைக்கிறது. 50 அடி உயரமும் 28 சக்கரங்களையும் கொண்டிருக்கிறது. வணிக விமானங்களைப்போல 35,000 உயரத்தில் பறக்கும் திறனுடையது. இதன்மூலம் 1947-ல் வடிவமைக்கப்பட்ட ஹோவார்ட் ஹுக்ஸின் ‘ஸ்ப்ருஸ் கூஸ்’ (Spruce Goose) விமானத்தின் சாதனையை ‘ஸ்ட்ராடோலாஞ்ச்’ முறியடித்திருக்கிறது. 2019-லிருந்து இந்த விமானம் செயல்படத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அழிவின் விளிம்பில்



கண்ணாடித் தவளைகள்

புதிதாகக் கண்டறியப்பட்ட ஒளி ஊடுருவும் தோல்கொண்ட தவளைகள் அழிவின் விளிம்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் சூழல் விஞ்ஞானிகள். ‘Hyalinobatrachium yaku’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் தவளைகள் ஈக்வடார் அமேசானிய தாழ்வுப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வகைத் தவளையின் தோலின் வழியாக இதயம் துடிப்பதைப் பார்க்க முடியும். மற்ற வகை கண்ணாடித் தவளைகளில் இப்படி இதயத்தை வெளிப்படையாகப் பார்க்க முடியாது. “முட்டைகள் மரத்திலிருந்து பொரிந்து தண்ணீரில் விழும்வரை ஆண் தவளை பாதுகாக்கும். ஒருவேளை, இந்தத் தவளைகள் தங்கியிருக்கும் நீரோடை வற்றிவிட்டாலோ, மாசடைந்துவிட்டாலோ, இந்தத் தவளைகளால் உயிர்வாழ முடியாது” என்கிறார் பல்லுயிர் குழுவைச் சேர்ந்த பால் ஹாமில்டன்.



யு.ஜி.சி.யின் புதிய விதிகள்

பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழகங்களில் புதிய துறைகள், படிப்புகள், பள்ளிகள், படிப்பு மையங்கள் தொடங்குவதற்கான விதிகளைத் தளர்த்துவதாக அறிவித்திருக்கிறது. இதனால், மத்தியப் பல்கலைக்கழகங்களான டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்றவற்றில் புதிய துறைகளைத் தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. சில மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கும் இந்த வசதிகளை நீட்டித்திருக்கிறது யு.ஜி.சி. அத்துடன் ‘பிட்ஸ் பிலானி’ போன்ற தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் புதிய வளாகங்களைத் திறந்துகொள்ள அனுமதி அளித்திருக்கிறது.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் 20 சதவீதத்துக்கு சர்வதேச ஆசிரியர்களைப் பணியமர்த்தவும், 20 சதவீதத்துக்கு சர்வதேச மாணவர்களுக்குச் சேர்க்கை அளிக்கவும் அனுமதி வழங்கியிருக்கிறது. சுயநிதிப் படிப்புகளுக்கான கட்டணத்தையும் பல்கலைக்கழகங்களே நிர்ணயிக்கலாம் என்றும் யு.ஜி.சி. தெரிவித்திருக்கிறது. தேசிய மதிப்பீடு தரச்சான்று குழு (NAAC), தேசிய தரச்சான்று கட்டமைப்பு நிறுவனம் (NIRF) போன்றவற்றில் முதன்மை இடங்களில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு இந்தப் புதிய விதிகள் பொருந்தும் என்று தெரிவித்திருக்கிறது யு.ஜி.சி. இந்தப் புதிய விதிகளைப் பற்றிய கருத்துகளைப் பொதுமக்கள் ஜூன் 15 வரை யு.ஜி.சி-க்குத் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x