Last Updated : 16 Jun, 2015 11:52 AM

 

Published : 16 Jun 2015 11:52 AM
Last Updated : 16 Jun 2015 11:52 AM

கண்கள் சொல்லும் பொய்கள்

“வெள்ளி நிலவே, வெள்ளி நிலவே" என்று நிலவின் நிறத்தை வெள்ளி நிறமாக வர்ணித்துச் சினிமா முதல் குழந்தை பாடல்கள் வரை பல நம்மிடையே உண்டு.

நமது கண் நமக்குக் காட்டுவதெல்லாம் உண்மை என்றுதான் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இயற்கையாக இருக்கும் விஷயங்களைப் பொறுத்தும்கூட, நமது கண் காட்டும் எல்லாமே உண்மையல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் பெரும்பாலும் வட்ட வடிவமாகத்தான் இருக்கின்றன. ஆனால், ஐந்து முனைகளைக்கொண்ட நட்சத்திரமாகவே நமக்கு அவை தெரிகின்றன. இப்படிப் பல விஷயங்களைச் சொல்லலாம்.

நிலவு வெள்ளி நிறத்திலும், சூரியன் மஞ்சள் நிறத்திலும் தோன்றுவது உண்மை தானா? கிழக்கே சூரியன் உதிக்கிறது என்று சொல்வது எப்படித் தவறோ, அதேபோலத்தான் சூரியன் மஞ்சள் நிறமாக இருக்கிறது என்பதும். சூரியனின் நிறம் வெள்ளை. அதன் ஒளியைப் பிரதிபலிக்கும் நிலவின் நிறம் கறுப்பு.

நம்ப முடியவில்லை, இல்லையா?

அட்டக்கறுப்பு

நிலக்கரி எந்த அளவு ஒளியை எதிரொளிக்குமோ, அதே அளவுதான் தன் மீது படும் ஒளியை நிலவு எதிரொளிக்கிறது. நமக்குப் பளிச்சென்று தெரியும், மனதைக் கொள்ளை கொள்ளும் முழுநிலவும்கூடச் சூரியனின் பிரகாசத்துடன் ஒப்பிடும்போது 4 லட்சம் மடங்கு பிரகாசம் குறைவானதுதான்.

பிறகு எப்படி நிலவு வெள்ளி நிறத்தில் தெரிகிறது? எல்லாம், நமது கண்கள் செய்யும் மாயம். நமது விழித்திரையில் கூம்பு, குச்சி வடிவ ரிசெப்டார்கள் இருக்கின்றன. கூம்பு வடிவங்கள்தான் நிறத்தைப் பிரித்தறிய உதவுகின்றன. ஆனால், அவை செயல்படுவதற்கு வலுவான ஒளி தேவை.

அதனால், நிலவில் இருந்து வரும் குறைந்தபட்ச ஒளியைக் கொண்டு நமது கண்களில் உள்ள குச்சி செல்கள் மட்டுமே செயல்பட முடியும். அதனால் நிலவின் உண்மையான நிறத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை. கறுப்பான வானத்தில் நிலவு சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கிறது. சுற்றிலும் கும்மிருட்டாக இருப்பதால், அது பளபளப்பாகத் தெரிவது போலிருக்கலாம்.

வண்ணஜாலம்

அதேநேரம், பகலில் நீல நிற வானத்தின் பின்னணியில் சூரியன் மஞ்சளாகத் தெரிவதற்கு என்ன காரணம்? அதுவும் தோற்ற மயக்கமே. சூரியனில் இருந்து வெளிப்படும் குறுகிய அலைவரிசை நீல நிற ஒளி வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படுவதால் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. அதேநேரம் அதற்கு எதிரான நீண்ட அலைவரிசை ஒளியான மஞ்சள்-சிவப்பாக சூரியன் தெரிகிறது.

உண்மையில் சூரியனின் நிறம் வெள்ளை, விண்வெளியில் இருந்து பார்க்கும்போது சூரியன் வெள்ளையாகத் தான் தெரிகிறது. அதேநேரம் ஒரு நாளின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு பருவ காலங்களில் சூரியன் வெவ்வேறு நிறத்தில் தெரிவதைப் பார்த்திருக்கலாம். இதற்குக் காரணம், அந்தச் சூழ்நிலையில் வானத்தில் எந்த ஒளி அலை சிதறடிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துச் சூரியனின் நிறம் அமைகிறது.

உச்சி வானில் இருக்கும்போது கொளுத்தும் வெயிலைப் பொறுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், அதிகாலையிலும் அந்தி மாலையிலும் சூரியன் வண்ண ஜாலங்களை நிகழ்த்தி, ரம்மியமாகவே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x