Last Updated : 22 Sep, 2014 01:19 PM

 

Published : 22 Sep 2014 01:19 PM
Last Updated : 22 Sep 2014 01:19 PM

உழைப்பால் உயர்ந்த கல்விப்பணியாளர்

“வேலை எதுவும் செய்யாமல் தூங்கிக் கொண்டிருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல. தனக்கு வசதி வாய்ப்புகள் இருந்தும், தன் நிலையில் இருந்து முன்னேற நினைக்காதவனும் சோம்பேறியே” வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் திரும்பிய திசையெல்லாம் காணப்படும் பொன்மொழி இது. சாக்ரடீஸின் இந்தப் பொன்மொழியைத் தன் அறையில் பொன் எழுத்துகளால் பொறித்து வைத்திருக்கிறார் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம்.

ஒரு மருத்துவக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரிகள், இருபதுக்கும் அதிகமான பள்ளிகள் என்று வெறும் 28 ஆண்டுகளில் 29 கல்வி நிறுவனங்களைத் தொடங்கி இருப்பவர் முத்துராமலிங்கம். மேலும் சில கல்வி நிறுவனங்களைத் தொடங்கும் முனைப்பில் இருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு...

உங்க குடும்பப் பின்னணியைப் பற்றி...

அப்பா வீரமாகாளி சாதாரண போலீஸ்காரர். அம்மா வேலம்மாள் பதிமூணு வயசுல கல்யாணமாகி, அடுத்த சில வருடங்களில் கணவரைப் பறிகொடுத்தவங்க.

இருபது இருபத்தஞ்சு வயசுக்குள் வாழ்க்கையை இழந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது கடுமையா உழைச்சாங்க அம்மா. அதிகாலையில இட்லி, இடியாப்பம் செய்து விற்பாங்க. பிறகு அரசாங்கப் பள்ளிக்கூடத்துல ஆயா வேலை. சாயந்திரம் சமையல், வீட்டு வேலை.

ராத்திரி எத்தனை மணியானாலும் மறுநாள் பலகாரத்திற்கு மாவு திரிச்சி வெச்சுட்டுத்தான் தூங்குவாங்க. அவங்க எனக்குக் கொடுத்த சொத்து தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கு. திட்டமிடலும், கடும் உழைப்பும் தான் அம்மா தந்த சொத்து.

கல்வித்துறையில் கால்பதிக்கணும் என்பது அம்மாவின் கனவா?

இல்லை. நான் டிப்ளமோ இன்ஜினீயரிங் -முடிச்சிட்டு, காண்ட்ராக்ட் தொழில் செய்தேன். தொழிலில் கடுமையான நஷ்டம். அதில் இருந்து எப்படி மீள்றதுன்னு யோசிச்சேன். 1986ல வீடு, கார் எல்லாத்தையும் வித்துட்டு நான் வசிச்ச சென்னை முகப்பேர் ஏரியாவுலேயே ஒரு பள்ளியைத் தொடங்கினேன்.

வாடகை வீட்ல இருந்துக்கிட்டு, வெற்றியை நோக்கி நான் எடுத்து வைத்த முதலடி என்பதால், பள்ளிக்கூட விஷயத்தில் ரொம்ப கவனமாக இருந்தேன். மதிப்பெண்ணைக் குவிப்பதைவிட, நல்ல குணநலன்களைச் சொல்லிக் கொடுத்தோம். யாரையும் ஏமாத்தல. இப்படிப் பெற்றோர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்ததால் தான் இத்தனை கல்வி நிறுவனங்கள் தொடங்க முடிந்திருக்கிறது.

நான் பட்ட அவமானங்கள் ரொம்ப அதிகம். ஆரம்பக் காலத்தில், என்னுடைய பள்ளிக்கூடத்தில் வேலைப் பார்த்த ஆசிரியர்கள் பலர், அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டார்கள். நெருங்கிய நண்பர்கள் பலர், வேறு யாருடைய குழந்தைகளுக்காவது சீட் கேட்டு என்னைச் சந்திப்பார்கள். உங்கள் குழந்தை எங்கே படிக்கிறது என்று கேட்டால், ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டே பிரபலப் பள்ளியின் பெயரைச் சொல்வார்கள்.

இதை எல்லாம் மாற்றிக் காட்டனும்ங்கிற வெறியோடு உழைச்சேன். செய்து முடிச்சேன். பள்ளிக்கூடத்துக்குக் கிடைச்ச வரவேற்பு, மரியாதையை எல்லாம் பார்த்ததும் அர்ப்பணிப்பு உணர்வோட முழுசா இறங்கிட்டேன். 180 மாணவர்கள், 13 ஆசிரியர்களோடு தொடங்கினோம். இன்று 85 ஆயிரம் பிள்ளைங்க படிக்கிறாங்க.

அடுத்த திட்டம்?

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குக் கொஞ்சமும் குறையாத அளவுக்கு வேலம்மாள் மருத்துவமனையை நிர்மாணித்துள்ளோம். விமான நிலையம் அருகே இருப்பதால், மெடிக்கல் டூரிஸம் பண்ணும் ஐடியாவும் இருக்கு.

கோவையின் கொடீசியா போல மிகப்பெரிய அரங்கம், சர்வதேசத் தரத்தில் ஒரு ஹோட்டல், ஷாப்பிங் மால் எல்லாம் வரப்போகுது. நர்ஸிங் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, மருந்தியல் கல்லூரிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x