Last Updated : 18 Oct, 2016 11:55 AM

 

Published : 18 Oct 2016 11:55 AM
Last Updated : 18 Oct 2016 11:55 AM

உண்மையான ஒன்பதாவது கோள்?

நமது சூரியக் குடும்பத்தில் நெப்டியூனுக்கு அப்பால் பூமியை விடப் பத்து மடங்கு நிறை கொண்ட ஒரு புதிய கோள் இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகிறார்கள். நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பல வான்பொருட்களின் சுற்றுப் பாதையைக் கணினி மாதிரிகள் உருவகப்படுத்தும்போது, இப்படியொரு கோள் இருப்பது போல் தெரிந்தது என்று கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் கால்டெக் (Caltech) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை இந்தக் கோளை யாரும் தொலைநோக்கியில் பார்க்கவில்லை.

புதிய கோள்

இப்படி ஒரு கோள் இருக்குமா என்கிற சந்தேகம் முதலில் பலருக்கு எழுந்தது. ஆனால், தொடர்ந்து சூரியக் குடும்பத்தின் வெளிப் பகுதியை ஆராய்ந்தவர்கள் இந்தக் கோளின் இருப்பை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

தற்போது குள்ளக் கோள்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் சிரஸ் (Ceres), புளூட்டோ போன்றவை கண்டுபிடிக்கப்பட்டபோது ‘கோள்’ என்று வகைப்படுத்தப்பட்டிருந்தன. புதிதாக கண்டறியப் பட்டிருக்கும் கோள் புளூட்டோவைவிட 5,000 மடங்கு அதிக நிறை கொண்டது, தன்னுடைய சுற்றுப்பாதையில் அதிக ஈர்ப்பு விசை கொண்டதாக இருக்கும் என்று கால்டெக் ஆராய்ச்சியாளர் மைக் பிரவுன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுதான் உண்மையான ஒன்பதாவது கோளாக இருக்கப் போகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

புளூட்டோவின் இடம்

ஆராய்ச்சியாளர்கள் மைக் பிரவுனும் கான்ஸ்டன்டின் பாடிகின்னும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அந்தக் கோள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் கண்டறிய அவர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இது சூரியனை 10,000 20,000 வருடங்களுக்கு ஒரு முறை சுற்றிவரலாம் என்று கருதப்படுகிறது. இது சூரியக் குடும்பத்தின் 5-வது மிகப் பெரிய கோளாக இருக்கும் என்றும் ஊகிக்கப்படுகிறது.

1930-ல் புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதுவே சூரியக் குடும்பத்தின் 9-வது கோளாகக் கோலோச்சி வந்தது. 2006-ல் கோள்களுக்கென்ற சில அடிப்படை நியதிகளைச் சர்வதேச வானியலாளர்கள் அமைப்பு வரையறுத்தது. அதை நிறைவு செய்யாத புளூட்டோ, கோள் அந்தஸ்தை இழந்து குறுங்கோளானது. தற்போது அந்த இடத்தைப் புதுக் கோள் நிறைவு செய்யுமா, பார்ப்போம்!

மைக் பிரவுன், கான்ஸ்டன்டின் பாடிகின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x