Published : 14 Jul 2014 01:23 PM
Last Updated : 14 Jul 2014 01:23 PM

ஈ.சி.ஆர். ரோட்டில் காரோட்டுறீங்களா?

ஆங்கிலத்தில் கிட்டதட்ட ஒரே மாதிரி ஒலிக்கும் சொற்கள் பல உள்ளன. அவற்றைப் பயன்படுத்தும்போது பொருள் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது Decent, Descent, Dissent - ஆகிய வார்த்தைகள் ஒரு உதாரணம். இவற்றின் பொருள்களைப் பார்ப்பதற்கு முன்னதாக, இரு நண்பர்களின் உரையாடலைக் கேட்போம்.

‘அவன் ஒரு new world record set பண்ணப் போறான்’

‘அப்படியா? அவனுடைய past history-ஐப் பார்த்தா அப்படித் தெரியலையே!’

‘சந்தேகமே வேண்டாம். He can do it. But he should not repeat again the mistakes’.

‘விடுப்பா அவன் young lad-தானே. போகப்போகத் தன்னைச் சரிசெய்துப்பான்’.

மேற்படி உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எங்காவது நெருடல் தோன்றியதா? நன்றாகக் கவனித்துப் பாருங்கள். உரையாடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஓர் அபத்தம் இருக்கிறது.

அவன் செல்வது ‘straight நேர்வழி’ என்று சொல்வீர்களா? இதே தவறுதான் மேற்படி உரையாடலில் பல இடங்களில் நடந்திருக்கிறது.

World record போதுமே. எதற்காக அதற்கு முன்னால் new என்ற வார்த்தை?

History என்றாலே past-தானே? அப்படியிருக்க எதற்காக ‘past’ history?

Repeat என்பதிலேயே மீண்டும் என்பது அடங்கியிருக்க எதற்காக repeat again?

Lad என்றாலே இளைஞன்தான். பின் எதற்கு young என்ற வார்த்தை அதற்கு முன்னால்?

இப்படித்தான் சில விஷயங்களில் நாம் ‘மீண்டும் மீண்டும் repeat’ செய்தே பழகி விட்டோம். ‘நடு சென்டரிலே ஒரு துளை போடு என்பது போல’. ‘ஈ.சி.ஆர். ரோடி ல் அவன் காரோட்டிக் கொண்டிருந்தான்’ என்பதுபோல. ( - ஈ.சி.ஆர். என்பதிலேயே ரோடும் இருக்கிறதே. பிறகு எதற்கு இன்னொரு ரோடு?)

கணிசமானவர்கள் actually என்ற வார்த்தையைத் தேவையில்லாத போதெல்லாம் பயன்படுத்துவார்கள். அப்படியானால் actually என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் அவர் கூறும் தகவல்கள் எல்லாம் உண்மை இல்லையா?

உங்கள் வீட்டைக் குடித்தனக்காரர் காலி செய்ய நீங்கள் ‘நோட்டீஸ்’ கொடுத்தால் போதுமே. ‘Advance Notice’ என்று எதற்காகக் கூறியது கூறல்?

புரிகிறதல்லவா? ‘Yes. You are absolutely sure’ என்று பதிலளித்துவிட மாட்டீர்கள்தானே! Sure என்பதே சர்வநிச்சயம்தான்.

சரி விடுங்க, எதையுமே ஒரு முறைக்கு இரு முறை சொல்வதுதான் இங்கே usual custom என்று சமாளிக்க வேண்டாம். (யாரங்கே? Unusual custom ஒன்றைக் கூறுங்கள் பார்க்கலாம்).

Decent- Descent - Dissent

Decent என்றால் என்ன அர்த்தம்? பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மரியாதைக்குரிய, ஒழுங்குமுறையை அனுசரித்துப் போவது என்று அர்த்தம். அதனால்தான் He is a decent man எனும்போது அவரைப் பற்றிய ஆக்கபூர்வமான பிம்பம் கிடைக்கிறது. என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், அழுக்குத் துணிகளை உடுத்திக் கொண்டு அவ்வப்போது சாலை நடைபாதைகளில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் ஒருவரை decent ஆனவர் என்று சொல்வதில்லை. காரணம் பொதுவாக ஏற்கப்படும் எல்லையைத் தாண்டி அவர் நடந்து கொள்கிறார்.

Decent என்பதற்குத் திருப்திகரமான என்ற பொருளும் உண்டு. I need a decent home என்றால் அந்த வீடு என் எதிர்பார்ப்புக்கும், திருப்திக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

அதாவது decent ஆன எந்த விஷய மும், யாருக்கும் அதிர்ச்சியோ, சங்கடமோ தராது.

உணவு இடைவேளை வெறும் 20 நிமிடம்தான் என்றால் எப்படி? We should have a decent interval.

ஆக acceptable, sufficient, up to the mark, tolerable போன்ற வார்த்தைகளை decent என்பதன் மாற்றுச் சொற்களாக உரிய இடங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Descent என்று இன்னொரு வார்த்தை இருப்பது தெரியுமா? அதாவது முதலில் குறிப்பிட்ட டீஸென்ட்டோடு ஒரு ‘s’ அதிகமாகச் சேர்ந்திருக்கிறது.

கீழே இறங்கிக் கொண்டிருக்கும் ஒரு செயலை இது குறிக்கிறது. Descending the stairs எனலாம். The numbers 10, 8, 7, 4, 2, 1 are in the descending order என்று சொல்வோம்.

பரம்பரை, குடும்பப் பின்னணி போன்றவற்றை விவரிக்கும்போதும் Descent என்ற வார்த்தை பயன் படுத்தப் படுகிறது. They are of Indian descent என்றால் இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர்கள் என்று அர்த்தம். Ancestry என்பதை இந்த வார்த்தைக்குச் சமமானது என்று குறிப்பிடுவதில் தவறில்லை. இந்தக் கோணத்தில் Lineage, Bloodline போன்றவை கூட Descent என்பதற்குச் சமமான வார்த்தைகள்தான்.

Dissent என்ற வார்த்தைக்கு ‘ஒத்துக்கொள்ளாமை’ என்று அர்த்தம். இது கருத்து வேற்றுமையைக் குறிக்கிறது. Protest, Objection போன்றவற்றை இதற்கு ஈடாகச் சொல்லலாம்.

Two directors dissented from the majority என்றால் இயக்குநர் குழுவில் இருவர் மற்றவர்களின் கருத்துக்கு ஒத்துப்போகவில்லை என்று அர்த்தம்.

‘The player was sent off for dissent’ என்றால் அந்த விளையாட்டுவீரர் நடுவரின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தார் என்பது போன்ற காரணங்களால் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று அர்த்தம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x