Last Updated : 10 Nov, 2015 02:52 PM

 

Published : 10 Nov 2015 02:52 PM
Last Updated : 10 Nov 2015 02:52 PM

இப்படியும் பார்க்கலாம்: கி.மு. 5000-ல் செய்தித்தாள் படித்திருக்கிறீர்களா?

பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை வீசிச்சென்ற தாய்...கைக்குழந்தை கதறியழுத பரிதாபம்!

குடும்பப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த கும்பல்..! பட்டப்பகலில் வெறிச் செயல்!

இரு பிரிவினரிடையே தகராறு! குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் படுகொலை! ஊரடங்குச்சட்டம் அமல்!

செய்தித்தாளைப் புரட்டினால் பதற்றங்களுக்கும், பரிதாபங்களுக்கும் பஞ்சமில்லை.பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களை நடத்துபவர்கள் கஷ்டப்படக் கூடாதே என்பதற்காக ஒரு உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது...!

என்னதான் ஆயிற்று மக்களுக்கு..? ஒருத்தரும் விட்டுக் கொடுக்க மாட்டேங்கிறார்கள்...தப்புக்கு என்ன காரணம் என்றால் இன்னொருத்தரைக் கை காட்டுகிறார்கள். அவனை நிறுத்தச் சொல்;நான் நிறுத்தறேன்னு டயலாக் பேசுகிறார்கள். கோடி ரூபாய் வைத்திருப்பவரும் டீ குடிக்க லஞ்சம் வாங்கும்போது பிடிபடுகிறார்... காந்தி சிரிக்கும் காகிதங்களின் மீது ஆசை, 916 கேரட் ஆசை, ரியல் எஸ்டேட் ஆசை... என்று எங்கும் ஆசைகள் மயம். எங்கே போய்விட்டன சகிப்புத்தன்மையும் பொறுமையும் நேர்மையும்?

இப்படியெல்லாம் கிராம நடப்பை, நாட்டு நடப்பை அறிய நேரிடும்போது “அந்தக் காலம் போல் இல்லை...!” என்ற ஆதங்கம் வரத்தான் செய்கிறது. கூடவே அந்தக் காலத்து மனிதர்கள் இப்போதைய மனிதர்களைவிட நாணயமாகவும், நேர்மையாகவும் இருந்தனர்; மொத்தத்தில் அந்தக் காலத்தில் பொய் இல்லை! போன்ற துணை ஏக்கங்கள்.

இவற்றில் 2 உண்மைகள் இருக்கின்றன.ஒன்று நீங்கள் ஒரு கனவுலகச் சஞ்சாரி.இரண்டு நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள்!

நீங்கள் எப்போது போராடும் குணத்தை இழக்கிறீர்களோ,போராட அஞ்சிப் போராட்டக்களத்தில் ஓரமாய் அமர்ந்து சமாதானக் கொடியை நெய்யத் தொடங்குகிறீர்களோ அந்தக் கணத்தில்தான் அனைவரும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும்,விட்டுக்கொடுத்தும், உதவிகள் செய்தும் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பன போன்ற கருத்துகளுடன் சமாதானத் தூதுவராய் மாறுகிறீர்கள்.ஆனால்,கோழைத்தனத்தில் பிறப்பது அமைதி அல்ல. வீரர்கள்தான் அமைதியைப் பரிமாறிக்கொள்ள இயலும்.

இந்தக் கணம் கொடூரமாகப் படுகிறது. அதை உங்களால் மாற்ற முடியவில்லை; என்னதான் செய்ய முடியும்? கடந்தகால பொற்காலத்தைத்தான் நினைவுகூற முடியும்! உங்களின் தோல்வியைத்தான் “அந்தக் காலத்துல எல்லாம் கத்தியால குத்துனாக்கூட ரத்தம் வராதுங்க...”என்றும் “கற்காலத்தில் எல்லாம் உண்மையாவே தள்ளுபடி தருவாங்க...” என்றும் பேசித் திரிகிறீர்கள்!

எந்தக் காலத்தில் உண்மை பேசுகிற மனிதர்கள் மட்டும் இருந்தார்கள்? உதவுகிற கைகள் மட்டும் இருந்தன? எந்தக் காட்டில் மானிடம் புலி “நண்பா,மேய்ச்சலுக்குச் செல்லும் போது என்னையும் கூப்பிடு..!” என்றது?

நிகழ்காலத்தின் வெம்மை தாங்க முடியாது சூடு கொண்ட பாதங்கள்தான் “கிருதயுகத்தில் மவுண்ட் ரோட்டில் எல்லோருக்கும் ஒரு கிரவுண்ட் இடம் இலவசமாவே கொடுத்தாங்களாம்..அப்படி ஒரு காலம் வருமாங்க..?” என்றும் “யூட்டோப்பியாவில் எவ்வளவு பேசினாலும் ஃபோனுக்கு பில் வராதாமே..!” என்றும் கடந்தகால கற்பனைச் செருப்புகளைத் தேடுகின்றன. எல்லாமே இப்படி ஒரு பொற்காலம் இருந்தால் எப்படி இருக்கும்? இருந்திருக்கக் கூடாதா...? என்றெல்லாம் ஏங்குகிற பேராசைத்தனமான ஆதங்கம்..!

செவ்விந்தியர்களை அழித்த நாகரிகவாசிகள், கறுப்பினர்களை அடிமை கொண்ட வெள்ளையர்கள், சாதியின் பெயரால் சுரண்டியவர்கள், ஆட்சியின் மூலம் கொடுமை செய்த அந்நியர்கள்...எனக் கசப்பான சம்பவங்களும் நிறைந்ததுதான் வரலாறு. இதில் எந்தக் காலம் SO CALLED “பொற்காலம்?”

எல்லா மத நூல்களும் ஒருவிதத்தில் நீதி இலக்கியங்கள்தான். அவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இம்மை, மறுமைக்கான சட்டப் புத்தகங்களாகவும் காட்சியளிக்கின்றன.

கிருமி போஜனம், கும்பி பாகம் போன்ற கருட புராணத் தண்டனைகளை ஏற்கெனவே இயக்குநர் ஷங்கர் நவீன உபன்யாசம் செய்துவிட்டார். நீண்ட அலகுள்ள கொடிய பறவை கண்களைக் கொத்தும் என்ற தண்டனை அடுத்த பெண்களைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பவருக்குப் புராணம் ஒன்றில் விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் ஈவ் டீஸிங் பிரச்சினையால் நொந்து போனவர்களுக்கான பரிகாரமாகத்தான் அது இருக்க முடியும்.

இப்படிப் பேராசை, துரோகம், எளியவரைத் துன்புறுத்துதல், நன்றி மறத்தல்,மேலதிகாரிகள் லீவ் தர மறுத்தல், மட்டகரமான சினிமா எடுத்து மக்களின் நேரத்தை வீணாக்குதல் இவற்றுக்கான தண்டனை விவரங்களைக் கேட்டால் மனித உரிமை மற்றும் மிருக உரிமை அமைப்புகளுக்கு 24 மணி நேரமும் வேலை இருக்கும் என்றுதான் படுகிறது.

இவற்றின் அடிப்படை என்ன...? அரசன் தண்டிக்காமல் விட்டாலும், தெய்வம் லேட்டஸ்ட்டான தண்டனைகளைக் கொடுத்தே தீரும் என்னும் ஆறுதலுக்கான தேவை இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?.

ஆரம்பத்தில் நான் சொன்ன பத்திரிகைச் செய்திகளைக் ‘குந்தி கர்ணனைக் குழந்தைப் பருவத்தில் விட்டுச் சென்றது, பாஞ்சாலியைக் கவுரவர்கள் துகிலுரிந்தது, சமணர்கள் கழுவேற்றப்பட்டது’ போன்ற கடந்த காலங்களைப் பொருத்திப் பாருங்கள்...! இன்றைய எந்தச் சம்பவங்கள் நேற்றைய செய்தித்தாளில் இல்லை? பின் எதை வைத்து “அந்தக் காலத்துல...” என்கிறோம்?

வரலாறு ஆகட்டும், வரலாற்றுக்கு முந்தைய காலம் ஆகட்டும் தப்பு செய்கிறவர்கள் அப்போதும் இருந்தார்கள். அற்புதமான மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அற்பர்கள் எதிர்காலத்திலும் இருப்பார்கள்.

ஒருவேளை, கடந்த பொற்காலங்கள் உண்மையாக இருந்தால்கூட இப்போது யதார்த்தம் சுடுகிறது. அதுதானே நிஜம்? நேற்று குப்பைகளே கிடையாது என்ற புலம்பல், இன்றைய குப்பைகளை எப்படிச் சுத்தம் செய்யும்?

நீங்கள் எதிர்காலத்தில் குப்பையில்லாத இடத்தை உருவாக்குவதாகச் சூளுரைத்தாலும் சரி, இப்போது சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி, எந்தக் குப்பையில் நின்றுகொண்டிருக்கிறீர்களோ அந்த இடத்திலிருந்துதான் தொடங்க முடியும்.

வாழ்க்கையில் தோற்பது பெரிய விஷயமல்ல. உங்களின் போர்க் குணம் காயமடைந்து காலாவதியாவதுதான் கவலைக்குரிய செய்தி. அப்போதுதான் “அமைதிப் புறா, ஆலீவ் இலை,வெள்ளைக்கொடியின் விற்பனை ஏன் டல்லாக உள்ளது?” போன்ற கருத்துகள் உங்களிடம் உருவாகும். இவை நீங்கள் எவ்வளவு அமைதிப் பிரியர் என்பதை மேம்போக்காக உணர்த்துவதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அவை கனவு நேரங்கள்; நொந்த உள்ளத்தின் பரிதாபப் புலம்பல்கள்!

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x