Last Updated : 29 Mar, 2016 12:55 PM

 

Published : 29 Mar 2016 12:55 PM
Last Updated : 29 Mar 2016 12:55 PM

ஆளுமை வெளிப்பாடு: ஆளுமைத் திறன் என்பது என்ன?

படித்து வாங்கிய பட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், தொழில்நுட்பம், கைவினைகள், கலை, பேச்சு, மொழி, விளையாட்டு முதலான திறமைகளும் முக்கியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இந்தத் திறமைகளுக்கு அப்பால் இன்னொரு வார்த்தையும் நம் காதுகளில் அடிக்கடி விழும். ஆளுமை என்ற சொல்தான் அது.

ஆளுமை என்பது நாம் யார் என்பதைப் பற்றிய சொல். தனித் திறமைகள் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக நம்மை அடையாளப்படுத்தக்கூடிய அம்சம். படிப்பும் பல்வகைத் திறன்களும் உள்ள ஒருவர் சிறந்த ஆளுமையாக விளங்குவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த ஆளுமைத் திறன்தான் சாதாரண மனிதர்களையும் தலைவர்களையும் பிரிக்கிறது. சாமானிய நபர்களையும் சமூகத்தையே மாற்றக்கூடிய வலிமை படைத்தவர்களையும் வேறுபடுத்துகிறது.

ஒருவர் வலுவான ஆளுமையாக விளங்க என்ன செய்ய வேண்டும்? இதைப் பல விதமாக விளக்கலாம். உதாரணத்துக்கு ஒரு கோணத்தை இங்கே எடுத்துக்கொள்ளலாம்.

எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்ளுதல்

அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு சூழல்களை எதிர்கொள்கிறோம். அதில் எதிர்பாராத சூழல் எழும்போது அதை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரது ஆளுமைத் திறனைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தக் குரலைக் கேளுங்கள்: “நானும் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் எதற்காகப் படிக்கிறோம் எனப் புரியாமல்தான் படித்துவந்தேன். அன்று சுடப்பட்டபோதுதான் கல்வியின் அர்த்தம் ஆணி அடித்தாற்போலப் புரிந்தது. பெண் கல்வி இத்தனை பேரைப் பதற்றம் கொள்ளச் செய்கிறது என்றால் அது எத்தகைய பலத்தைத் தர வல்லது என்பது புரிந்தது. ஆனால், அன்று என்னைச் சுட்டவர் ஒரு தவறு செய்துவிட்டார். என்னைச் சுட்டு, என்னுள் இருந்த பயத்தை முழுவதுமாகக் கொன்றுவிட்டார். இனி சாவைக் கண்டு எனக்கு பயம் இல்லை. இந்தப் போராட்டத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. ஒருநாள் வரும், அன்று அனைத்துக் குழந்தைகளும், ஆணோ பெண்ணோ கறுப்போ வெள்ளையோ கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ பள்ளிக்கு நிச்சயம் செல்வார்கள்.”

இன்னொரு குரலையும் கேளுங்கள்:

“இது ஜனநாயக நாடு. ஜனநாயகத்தில் சமத்துவத்துக்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு மாணவரோ ஒரு ஏழையோ ஒரு தொழிலாளியோ அம்பானியோ, அதானியோ யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. வன்முறைக்கான விளக்கம் இல்லாமல் வன்முறையை எப்படிப் புரிந்துகொள்வது? துப்பாக்கியால் சுட்டு மனிதர்களைக் கொல்வது மட்டும் வன்முறை அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் தந்திருக்கும் உரிமைகளை ஜே.என்.யூ. நிர்வாகம் தர மறுக்குமானால் அதற்குப் பெயரும் வன்முறைதான்.

இதைத்தான் அமைப்பு சார்ந்த வன்முறை என்கிறோம். இவர்களெல்லாம் நீதியைப் பற்றிப் பேசுகிறார்கள். எது நீதி என்பதை யார் தீர்மானிப்பது? ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அதுதான் நீதி நியாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உணவகங்களுக்குள் நாய்களும் இந்தியர்களும் நுழைய முடியாது. அப்போது அதுதான் நீதி. அந்த நீதிக்கு நாம் சவால் விட்டோம். இப்படித்தான் உங்களுடைய நீதி எங்களுடைய நீதிக்குப் புறம்பானதாக இருக்கும்போது அத்தகைய நீதியை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு உரிமைகள் கிடைக்கும்போதுதான் நீதி நிலவுவதாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.”

எங்கிருந்து வந்தார்கள்?

முதலாவது, பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடிவரும் பாகிஸ்தானி சிறுமி மலாலாவின் குரல். இரண்டாவது, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பின் தலைவர் கண்ணையா குமார் பேசியது.

மலாலா பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா யூசப் சாய் தலைமை ஆசிரியராக இருந்த பள்ளியிலேயே படித்துவந்தார். 2008-ல் ஸ்வாட் பகுதியை தலிபான் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தார்கள். பெண்கள் வெளியில் நடமாடக் கூடாது; பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது எனும் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

இந்தக் கொடுங்கோன்மைக்கு எதிராக வெகுண்டெழுந்தார் 11 வயது மலாலா. 2009-ல் பி.பி.சி. நிறுவனத்தின் உருது மொழி இணையதளத்தில் தலிபான் அத்துமீறலை உலகத்துக்கு அம்பலப்படுத்தினார். பெண் கல்வி வேண்டும், குழந்தைத் திருமணம் கொடுமையானது, பெண்களுக்கு உரிய சுகாதாரம் தேவை எனத் தொடர்ந்து வலைப்பதிவு இட்டார். பாகிஸ்தான் பெண்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கினார்கள்.

தலிபான்கள் கொதித்தெழுந்து மலாலாவைக் கொல்ல முயன்றார்கள். அக்டோபர் 9, 2012-ல் மலாலா சுடப்பட்டார். அந்தத் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த மலாலா, முன்பைவிடவும் தீவிரத்துடன் தன் பணிகளை மேற்கொண்டார். இவர் ஆற்றிய சேவைகள் உலகின் கவனத்தைக் கவர்ந்தன; அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தன.

தனக்கு ஏற்பட்ட அபாயத்தை மலாலா எப்படி எதிர்கொண்டார் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்த்தோம். இந்த அணுகுமுறைதான் ஆளுமைத் திறனின் முக்கியமான அம்சம். இதுதான் மலாலாவைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. இதுதான் அவருக்கு உலகின் மதிப்பு வாய்ந்த விருதைப் பெற்றுத்தருகிறது. தொடர்ந்து போராடுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

விடாமல் போராடும் குணம்

கண்ணையா குமாரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் பிஹாரில் பெஹாத் கிராமத்தில் பிறந்தார். அப்பா ஜெயசங்கர் விவசாயத் தொழிலாளி. அம்மா மீனாதேவி அங்கன்வாடி தொழிலாளி. அப்பா நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருக்கிறார். அம்மாவின் சொற்ப சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தப்படுகிறது. பள்ளி நாட்களிலிருந்தே இடதுசாரிகளின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் கண்ணையா.

2007-ல் புவியியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் (ஏ.ஐ.எஸ்.ஏ) உறுப்பினரானார். தற்போது இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜே.என்.யூ.வில் முனைவர் பட்ட ஆய்வாளர். 2015-ல் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காஷ்மீர் பிரச்சினை முதல் தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவிகள் தற்கொலை வரை விவாதிக்கும் களமாக ஜே.என்.யூ. இருந்துவருகிறது. அதில் இடைவிடாது குரல் எழுப்பிவருகிறார் கண்ணையா. அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தின்போது தேசத்துரோகி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

கொலைத் தாக்குதலைச் சந்தித்த மலாலா மனம் தளராமல் தொடர்ந்து போராடுவதைப் போலவே குமாரும் இத்தகைய குற்றச்சாட்டைக் கண்டு அசராமல் தொடர்ந்து போராடுகிறார்.

ஆளுமைத் திறனுக்கான வரையறை இங்கே விரிவடைகிறது. மதிப்பெண்களைக் குவிப்பது, கைநிறைய சம்பாதிக்கும் வேலையில் சேரத் தயார்படுத்திக்கொள்வது ஆகியவை மட்டும் போதுமா? பொது விவகாரங்களிலோ சமூகப் பிரச்சினைகளிலோ பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கி இருக்கலாமா? அப்படி இருப்பவர்களால் நெருக்கடியை எப்படி எதிர்கொள்ள முடியும்?

ஆளுமையை வளர்ப்பது எப்படி?

ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான புத்தகங்களும் சிறப்பு மையங்களும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. பேச்சாற்றல், நேர நிர்வாகம், உடல் மொழி, குரலில் ஏற்ற இறக்கம் இப்படிப் பல சூட்சுமங்களை இவை சொல்லித்தருகின்றன. ஆனால், பரீட்சை எழுதிவிட்டுத் தோழிகளோடு வீடு திரும்பும்போது, “யார் மலாலா? யார் மலாலா?” எனக் கேட்டு, சரசரவெனச் சுடப்படுகிறாள் ஒரு சிறுமி. மரணப் படுக்கைக்கு தள்ளப்படும் அவள் ஓராண்டு கழித்து நிமிர்ந்து நின்று உலக மக்களைப் பார்த்து உரையாடுகிறாள்.

அடித்தட்டில் இருந்து முன்னேறி, முனைவர் பட்டம் படிக்கும் வாய்ப்பைப் பெறும் சாமானிய இளைஞன் தனது அரசியல் பார்வைக்காக அரசின் வழக்கைச் சந்திக்கிறான். எனினும் தன் கொள்கையில், செயல்பாட்டில் கொண்ட உறுதி தளராமல் நிற்கிறான். கண்ணையாவின் கொள்கைகள் எத்தகையவை என்பது விவாதத்துக்குரியதாக இருக்கலாம். ஆனால் தன் கொள்கையில் அவருக்கு இருக்கும் உறுதியும் தெளிவும் நெருக்கடியைக் கண்டு அஞ்சாமல் போராடும் குணமும் முக்கியமானவை.

ஆளுமைத் திறன் என்பதற்கான பொருளை விரிவுபடுத்தும் செயலை மலாலாவும் கன்னையாவும் செய்திருக்கிறார்கள். இளைஞர்களின் மென்திறனை மேம்படுத்தக் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்திருக்கும் காலகட்டத்தில் இந்த இளைஞர்கள் ஆளுமைத் திறனுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x