Published : 28 Jul 2015 02:28 PM
Last Updated : 28 Jul 2015 02:28 PM

ஆங்கிலம் அறிவோமே 68- விசில் ஊதுபவரா நீங்கள்?

ஒரு வாசகர் “I gave you a good advice’’ என்பது சரியா? “I gave you good advice’’ என்பது சரியா - என்று கேட்டிருக்கிறார்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை advice என்பது எப்போதுமே பன்மைதான். எனவே முதல் வாக்கியம் தவறு.

இரண்டாவது வாக்கியமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. I gave you some good advice என்பது சரியான பயன்பாடு.

‘என்ன ஒரு சிறப்பான ஆலோசனை!’ எனும் வாக்கியத்தை What an advice it is என்று மொழி பெயர்க்கக் கூடாது. ‘What a word of advice’ எனலாம். அல்லது What a piece of advice என்றும் கூறலாம். அல்லது விசிலடித்தும் பாராட்டுதல்களைத் தெரிவிக்கலாம். ஆனால், இதன் காரணமாகவே நீங்கள் whistleblower ஆகிவிட மாட்டீர்கள்.

அப்படியானால் ‘Whistleblowers’ என்பவர்கள் யார்? விளையாட்டுப் பந்தயங்களை தொடங்கி வைப்பவர்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. (தொடக்கத்தில் விளையாட்டில் நடுவர்களைக் குறிக்க இந்த வார்த்தையை அமெரிக்காவில் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது அப்படிக் குறிப்பிடுவதில்லை). Whistleblower என்று அழைக்கப்படுபவர் போற்றுதலுக்கு உரியவர். பொது வாழ்க்கையில் ஒருவர் இழைத்த தவறையோ, ஊழலையோ அம்பலமாக்குபவர்தான் Whistleblower.

அமெரிக்காவில் நுகர்வோர் போராட்டங்களை முன்னிறுத்தியவர் ரால்ஃப் நடார் என்பவர். அவர்தான் Whistleblower என்ற வார்த்தையை இந்த அர்த்தத்தில் உருவாக்கி பிரபலமாக்கியவர். அதற்கு முன்னால் இதுபோன்றவர்களை Informers என்று அழைப்பார்கள். அந்த வார்த்தையில் (ஒற்றர், துரோகி என்பதுபோல) ஒருவித எதிர்மறை அர்த்தமும் வருவதால் ரால்ஃப் நடார் இந்தப் புதிய வார்த்தையை உருவாக்கினார்). Whistleblower rewarded (அல்லது whistleblower murdered!) என்பதுபோல் செய்தித் தலைப்பு இருந்தால் இப்போது மேலும் தெளிவாக இருப்பீர்கள் அல்லவா?

உண்மையா? நேர்மையா?

நம்பகமாக இருப்பதா, அல்லது உண்மையாக இருப்பதா அல்லது நேர்மையாக இருப்பதா என்பதில் நம்மில் பலருக்கும் சந்தேகம் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு. அதாவது, கடிதத்தில் முடிவில் Yours faithfully, Yours sincerely, Yours truly, Truly yours, Sincerely yours என்று குறிப்பிடுவோமே இவற்றில் எதை எங்கு குறிப்பிடுவது என்பதில் ஐயம் எழ வாய்ப்பு உண்டு.

மிகவும் அறிமுகமானவர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதும்போது Dear என்ற வார்த்தைக்குப் பிறகு அவரது பெயரையே குறிப்பிடுவோம். இப்படிப்பட்ட ‘நெருக்கமான’ கடிதத்தின் இறுதியில் Yours sincerely என்று குறிப்பிடுவது வழக்கம். (இது பிரிட்டிஷ் பாணி. இந்தியர்கள் Yours affectionately என்றும் குறிப்பிடுகிறார்கள்). அமெரிக்கர்கள் தங்கள் தனித்தன்மையைக் காட்டும் வகையில் இந்த வார்த்தைகளை மாற்றிப் போட்டு குறிப்பிடுகிறார்கள். அதாவது Sincerely yours என்று குறிப்பிடுகிறார்கள்.

நெருக்கம் அல்லாதவர்களுக்கு எழுதப்படும் formal கடிதத்தை Dear Sir அல்லது Dear Madam என்று தொடங்குவது வழக்கம். (Dear Madam என்று குறிப்பிட்டால் கடிதத்தைப் பெறும் பெண்மணி வெகுண்டெழுந்து கண்ணகியாய் மாறி கையில் சிலம்புக்குப் பதிலாக காலணியை எடுத்துக் கொள்ளக் கூடும் என்ற வேண்டாத பயம் காரணமாக Madam என்று மொட்டையாக ஆரம்பிக்கிறார்கள் பல இந்தியர்கள்). இதுபோன்ற கடிதங்களின் இறுதியில் Yours faithfully என்று குறிப்பிட வேண்டும். அமெரிக்கர்கள் “முடியாது Yours truly என்றுதான் குறிப்பிடுவோம்” என்கிறார்கள்.

பலவிதங்களில் நல்லது

Good என்பது ஒரு பாராட்டு வார்த்தை. இப்படி தொடக்கப் பள்ளி மாணவர்கள் நினைத்துக் கொள்ளட்டும். மற்றவர்கள் good என்பதன் பல நுணுக்கமான வேறுபாடுகள் கொண்ட அர்த்தங்களை அறிய வேண்டும்.

It is a good idea என்றால் அது ஒரு பளிச்சென்ற ஐடியா என்று அர்த்தம். மூளைக்குள் பல்பு எரிந்திருக்கிறது.

It is a good fruit என்றால் அழகான பழம் என்பது அர்த்தமல்ல. சாப்பிடுவதற்குத் தகுந்த பழம் என்று அர்த்தம்.

He is a good person என்றால் அவருக்கு நன்கு நடந்து கொள்ளத் தெரிந்திருக்கிறது என்று பொருள். It is a good decision என்றால் அது ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம்.

We had a good vacation என்றால் ரசிக்கக்கூடிய விடுமுறையை அனுபவித்துள்ளோம் என்று பொருள்.

PERUSE PURSUE

Peruse என்றால் கவனத்துடன் ஒன்றைப் படிப்பது அல்லது பரிசோதிப்பது. The doctor perused the medical report. I am perusing my answer sheets.

Pursue என்றால் ஒரு குறிக்கோளுக்காக ஒரு விஷயத்தைத் தொடர்வது. He is pursuing his higher studies.

தொடர்வது , பின்பற்றுவது, தேடித் திரிவது என்ற அர்த்தத்திலும் pursue என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ‘மகிழ்ச்சியைத் தேடி ஒரு பயணம்’ என்ற அர்த்தத்தில் ‘In Pursuit of happiness’ என்ற பெயரில் ஒரு பிரபல ஆங்கிலத் திரைப்படம் வெளியானது நினைவிருக்கலாம்.

மறைந்திருந்தே பார்க்கும் மர்மம்

“bcc என்பதன் விரிவாக்கம் என்ன?’’. இது ஒரு வாசகரிடமிருந்து வந்திருக்கும் கேள்வி. மின்னஞ்சலில்தான் இந்த bcc பயன்படுத்தப்படுகிறது.

ராமன் என்பவருக்கு மின்னஞ்சலில் ஒரு கடிதம் அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். To என்ற வார்த்தைக்கு அருகில் உள்ள காலி இடத்தில் ராமனின் மின்னஞ்சல் முகவரியை நிரப்புவோம்.

நாம் ராமனுக்கு அனுப்பும் கடிதத்தை ஆறுமுகம் என்பவரும் படிக்க வேண்டுமென்று நினைத்தால் cc என்ற வார்த்தையைக் க்ளிக் செய்யும்போது உண்டாகும் காலி இடத்தில் ஆறுமுகத்தின் மின்னஞ்சல் முகவரியை நிரப்புவோம். Cc என்றால் carbon copy என்று பொருள்.

இந்தக் கடிதத்தை ராபர்ட் என்பவரும் படித்தால் நல்லது. அதே சமயம் இதை ராபர்ட்டுக்கும் அனுப்பியிருப்பது ராமனுக்கோ, ஆறுமுகத்துக்கோ தெரியக் கூடாது என்று நினைத்தால் bcc என்பதை க்ளிக் செய்து இதில் தோன்றும் காலியிடத்தில் ராபர்ட்டின் மின்னஞ்சல் முகவரியை நிரப்புவோம். Bcc என்றால் blind carbon copy என்று பொருள்.

“I have ordered for a cup of tea’’ என்று ஒருவர் கூறியதைக் கேட்க நேர்ந்தது. இதில் ordered என்ற வார்த்தையைத் தொடர்ந்து for என்ற preposition இடம் பெறக் கூடாது. அப்படியானால் to என்ற வார்த்தையைப் போடலாமா என்றால் அதுவும் கூடாது. அந்த இடத்தில் எந்தப் preposition- ம் தேவையில்லை. I have ordered a cup of tea என்று மட்டும் எழுதினால் போதும்.

வேண்டாத இடத்தில் பலரும் preposition-ஐ பயன்படுத்தும் வேறு சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

‘‘நான் சென்றிருந்தபோது அவன் தேர்வுக்குத் தயாராவதில் பிசியாக இருந்தான்’. இந்த வாக்கியத்தைச் சிலர் ஆங்கிலத்தில் இப்படி மொழி பெயர்ப்பார்கள். When I went there, he was busy with preparing for the examination. இது தவறான மொழி பெயர்ப்பு. With என்பதை அங்கிருந்து தூக்குங்கள். (தூக்கி அதைச் சுமந்து கொண்டிருக்காமல் தூரப் போடுங்கள்).

When I went there he was busy preparing for the examination. இதுவே சரி.

The conductor was busy issuing tickets. They were busy having the dinner.

எதிரொலி

கடந்த வாரத்தில் Forgive, Pardon, Sorry, Excuse எல்லாவற்றுக்கும் அர்த்தம் ஒன்றுதான் - மன்னித்துவிடு! என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், ‘sorry’ என்றால் வருந்துதல் என்று அர்த்தம். மன்னிப்பு கேட்டல் அல்ல. pardon என்றால் “புரியவில்லை. திரும்பவும் சொல்லுங்கள்” என்று அர்த்தம் அல்ல. “இன்னொரு முறை உங்களைச் சொல்ல வைக்கிறதுக்கு மன்னிச்சுக்குங்க” என்று அர்த்தம்.

- பி. சுந்தர்ராஜ், முதல்வர், சுபா ஆரம்பப் பள்ளி, சேலம்.

கட்டுரையாளரின் பதில்

Sorry என்பது வருத்தம் தெரிவிப்பது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். “இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னேறும்போது ‘Sorry’ கூறலாம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறேன். இதில் வருத்தம் தெரிவிப்பதோடு மன்னித்துவிடுங்கள் என்ற அர்த்தமும் இருப்பதாக எனக்குப் படுகிறது.

“சரியாகக் கேக்கல. இன்னொரு முறை சொல்லுங்க. மறுமுறை உங்களை சொல்ல வைக்கறதுக்கு மன்னிச்சுக் கங்க” என்பதில் ‘மன்னிச்சுக்கங்க ’ என்பதுதான் pardon.

Pardon என்பதற்கு oxford dictionary அளிக்கும் ஒரு பொருள் - A request to a speaker to repeat something because one did not hear or understand it.

‘புரியவில்லை’ (அதாவது விளங்க வில்லை) என்பதில் சரியாக அல்லது முழுமையாகக் கேட்கவில்லை என்பதும் அடக்கம் எனலாம். ஆனாலும் ‘கேட்கவில்லை’ என்ற வார்த்தையையும் நான் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன். வாசகருக்கு நன்றி.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x