Published : 14 Jul 2015 12:18 PM
Last Updated : 14 Jul 2015 12:18 PM

ஆங்கிலம் அறிவோமே 66 - கொஞ்சம் காதைக் கொடுங்க சார்!

ஒரு வாசக நண்பர் “ அலுவலகத்தில் எனது அதிகாரி பேசிக் கொண்டே இருந்தபோது என்னைப் பார்த்து “Lend me your ear’’ என்றார். அவர் என்ன சொல்ல வந்தார்? காதைக் கடன் கொடுப்பதா? புரியவில்லை. விளக்குங்கள்” என்று கோருகிறார்.

நல்லவேளை நண்பரே, ஏகலைவனின் கட்டைவிரலுக்கு வந்ததைப் போல உங்கள் காதுக்குப் பாதிப்பு எதுவும் வந்துவிடவில்லை. உயிரோடு இருக்கும்போது ரத்தத்தையோ, சிறுநீரகத்தையோதான் நாம் பிறருக்கு அளிக்க முடியும். காதைக் கடன் கொடுப்பது too much.

உங்கள் மேலதிகாரி பேசும்போது நீங்கள் கவனம் செலுத்தி அதைக் கேட்கவில்லையோ? உங்கள் கண்கள் வேறெங்கோ பதிந்திருந்ததோ? ஏனென்றால் அப்போது இப்படி அவர் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு உண்டு.

Lend me your ear என்றால் “நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்” என்று அர்த்தம். அதாவது காது ‘கொடுத்துக்’ கேட்பது.

பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஒரு பிரபல ஆல்பத்தில் “Lend me your ear and I’ll sing you a song” என்ற பாடல் இடம் பெறுகிறது. ஷேக்ஸ்பியர் எழுதிய ஜூலியஸ் சீசர் என்ற படைப்பில் மார்க் அன்டனி ஜூலியஸ் சீசருக்கு எதிராக மக்கள் மனதைத் திருப்பும் பேச்சு “Friends, Romans, countrymen, Lend me your ears” என்று தொடங்குகிறது.

ஒரு நண்பர் Forgive, Pardon, Sorry, Excuse – இந்த வார்த்தைகளில் எவற்றை எங்கு உபயோகிக்க வேண்டும் என்று கேட்கிறார்.

எல்லாவற்றுக்கும் அர்த்தம் ஒன்றுதான் - மன்னித்துவிடு! ஆனால் எதை, எப்போது, பயன்படுத்துவது என்பதில் ஓர் இங்கிதம் இருக்கிறது.

கூட்டத்தில் செல்லும்போது மற்றவர்களைவிட முன்னதாகச் செல்ல வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படலாம். முன்னால் இருப்பவர்களை சற்று இடம்விடுமாறு சொல்ல வேண்டுமானால், ‘‘Excuse me’’ எனலாம். முன்னே இருப்பவர்கள் வழிவிடவில்லை என்றால் ‘‘Excuse me’’ என்பதையே சற்றே உரத்த குரலில் பற்களைக் கடித்துக் கொண்டு கூறலாம்.

அந்த அளவு பொறுமை இல்லாமல் முன்னால் இருப்பவர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறும்போது ‘‘Sorry’’ கூறலாம்.

எதிராளி கூறுவது உங்களுக்குப் புரியவில்லை என்றால் ‘‘Pardon’’ எனலாம். அதாவது ‘‘புரியவில்லை. திரும்பச் சொல்லுங்கள்’’ என்று அர்த்தம்.

Excuse அல்லது Sorry ஆகியவற்றுக்கு முன் please சேர்ப்பது உங்கள் இஷ்டம். ஆனால் ‘‘Please forgive me’’, ‘‘I beg you your pardon’’ என்று வேண்டிக் கேட்டுக்கொள்ளும்படியான அதிகப்படியான வார்த்தைகளை Forgive, Pardon ஆகிய வார்த்தைகளோடு பயன்படுத்தத்தான் வேண்டும்.

Forgive, Pardon, Sorry, Excuse – இந்த வார்த்தைகளில் எவற்றை எங்கு உபயோகிக்க வேண்டும்?’’ என்ற கேள்விக்கு இந்த நான்கு வார்த்தைகளையே பதில்களாக்கினால் நடைமுறையில் அவற்றின் பொருள் என்னவாக இருக்கும்?

“Please forgive me” அல்லது “I am sorry” என்றால் உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது என்ற அர்த்தத்தை அது தெரிவிக்கிறது.

“Pardon” என்றால் உங்கள் கேள்வி புரியவில்லை. விளங்கும்படி சொல்லுங்கள் என்று அர்த்தம்.

“Excuse me” என்றால் “பதில் தெரியும். ஆனால் அதையெல்லாம் இப்போது நான் சொல்வதாக இல்லை” என்று பொருள்.

“முதலைக் கண்ணீர் வடிக்காதே – அதாவது Don’t shed crocodile tears” – என்று ஆசிரியர் அடிக்கடி கூறுகிறார். இது ஏன்?’’ என்கிறார் ஒரு மாணவர்.

அந்தக் காலத்தில் முதலை பற்றிய ஒரு எண்ணம் இருந்தது. அதாவது, தன் இரையைத் தின்னும்போது அது கண்ணீர்விடும் என்று. அதிலிருந்து வந்தது இந்த ‘முதலைக் கண்ணீர்’ விவகாரம்.

முதலைகளுக்குக் கண்ணீர் சுரப்பிகள் உண்டு. தண்ணீருக்கு வெளியே வெகு நேரம் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவற்றின் கண்கள் உலர்ந்துவிடும். அப்போது தன் கண்ணீர் சுரப்பிகளின் மூலம் கண்ணீரை வெளிப்படுத்திக் கொள்ளும்.

ஆக, முதலைக் கண்ணீர் விடுவதற்கு சோக உணர்வு காரணம் இல்லை. அதனால்தான் உண்மையான சோகம் இல்லாமல் வருத்தப்படுவதுபோல் நடிப்பவர்களைப் பார்த்து “முதலைக் கண்ணீர் வடிக்காதே” என்கிறோம்.

The jewel is here which you wanted to wear. இப்படி ஒரு விளம்பர வாசகத்தைப் படிக்க நேரிட்டது. எந்த noun-ஐக் குறிக்கிறதோ அதற்கு மிக அருகில்தான் pronoun இருக்க வேண்டும். அதாவது The jewel which you wanted to wear is here என்றுதான் அந்த வாக்கியம் இருந்திருக்க வேண்டும்.

The shirt is torn that needs to be replaced என்பது தப்பு. The shirt that is torn needs to be replaced என்றுதான் இருக்க வேண்டும்.

ERROR – MISTAKE

Error என்பது லத்தீன் மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதற்குப் பொருள் ‘அர்த்தமின்றி அலைவது’. Mistaka எனும் பழைய Norse மொழியின் வார்த்தையிலிருந்து வந்தது Mistake . இதன் பொருள் ‘தவறாக எடுத்துக் கொள்ளுதல்’.

ஆனால் எதை, எப்போது பயன்படுத்துவது என்பதற்கு இந்த வேர்களை அறிந்து கொள்வது பயன்படாது.

Error, mistake இரண்டுமே தவறு என்பதைக் குறிக்கும் வார்த்தைகள்தான். என்றாலும் அறிவியல் தொடர்பாக இந்தத் தவறு நடைபெறும்போது error என்று சொல்வது பழக்கமாகிவிட்டது. An error in calculation of the scientific data. அதேபோல கணினியைப் பொருத்தவரை system error என்றுதான் சொல்வோம். (system mistake என்றால் ஒருமாதிரி இருக்கிறது இல்லையா?).

Mistake என்பது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் வார்த்தை. It was my mistake. I am sorry என்றால் கொஞ்சம் இயற்கையாக இருக்கிறது இல்லையா? It was my error. I am sorry என்றால் மொழியின் அடிப்படையில் அது தவறு இல்லை என்றால்கூட, கொஞ்சம் நாடகத்தனமாகப் படுகிறது அல்லவா?

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x