Published : 30 Jun 2015 12:01 PM
Last Updated : 30 Jun 2015 12:01 PM

ஆங்கிலம் அறிவோமே- 64 :அதீதமான துணிச்சலின் அடாவடி

ஒரு வாசகர் “சிட்னி ஷெல்டனின் கதாநாயகி ஒருத்தி “It is my second nature” என்று கூறுகிறாள். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள அந்த ‘ஆஸ்திரேலியத் தலைநகர்’ கதாசிரியருக்கே கடிதம் அனுப்பலாம் என நினைத்தேன். ஆனால், உங்கள் மின்னஞ்சல்தான் என் கண்களில் டக்கெனப்பட்டது. அர்த்தத்தைச் சொல்லுங்கள்!’’ என்று எழுதியுள்ளார்.

நண்பரே, ஆஸ்திரேலியாவின் தலைநகரம் சிட்னி அல்ல. மெல்போர்னும் அல்ல. பின் எது என்பதை you CAN yourself find out sir.

இயற்கையான விஷயங்கள் சில உண்டு. அப்படி இல்லாமல் நம்மோடு ஒட்டிக்கொண்டு இயற்கையாகவே ஆகிவிட்ட விஷயங்களை second nature என்பார்கள். “Dancing is second nature to her. She has been dancing since 2000”.

ஒருவேளை சிட்னி ஷெல்டனின் கதாநாயகி சாகசத்தில் தொடர்ந்து ஈடுபடுபவள் என்றால், “Adventure is my second nature” என்று அவள் கூறலாம். வாயைத் திறந்தாலே பொய்களாக வந்து விழும் என்றால், “Lying is my second nature” எனலாம்.

ஒரு வாசகர் Audacity என்றால் என்ன என்று கேட்டுள்ளார். இந்த வார்த்தை அதீதமான துணிச்சலைக் குறிக்கிறது. ஒருவகை எதிர்மறையான அர்த்தம். “இவ்வளவு அறிவாளிகள் இருக்கும் இடத்தில் நீ உளறலாமா? என்னவொரு audacity?’’ என்பார்கள்.

ஆங்கிலத்தில் city என்று முடியும் வார்த்தைகள் பல உள்ளன. (அவை நகரங்கள் அல்ல) அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Atrocity என்றால் அராஜகம். அட்டூழியம் என்றாலும் தப்பில்லை. Authenticity என்றால் அது நம்பகத்தன்மையைக் குறிக்கிறது.

Capacity என்றால் கொள்ளளவு. ஒரு பாத்திரத்தின் capacity என்றும் கூறலாம். “அவனால் முடிந்தது அவ்வளவுதான்” என்ற அர்த்தத்தில் “அவன் capacity அவ்வளவுதான்” என்றும் சொல்லலாம்.

Paucity என்றால் ‘குறைவான அளவு கொண்ட’ என்று அர்த்தம். This project cannot be implemented due to paucity of funds. அதாவது போதாமை.

Ethinicity என்றால் இனம்.

Loquacity என்றால் பேசும் திறமை என்று நாசூக்காகச் சொல்லலாம். ஆனால், நிறுத்தாமல் தொணதொணவென்று பேசியே கொல்லும் தன்மை என்கிற அர்த்தத்தில்தான் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது talkativeness என்பதைவிட over talkativeness.

Veracity என்றால் நேர்மை, உண்மை. A man of veracity என்பது போல.

பிரித்தறியும் ஞானம், புத்திசாலித்தனம் ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படும் ஒரு வார்த்தை அடுத்த பத்தியில் உள்ளது.

மற்றபடி electricity என்பதெற்கெல்லாம் நான் அர்த்தம் சொன்னால் நீங்கள் ஷாக் ஆகிவிடுவீர்கள் என்பதை அறிந்துகொள்ளும் sagacity எனக்கு உண்டு. எனவே, இந்தப் பட்டியலை நிறுத்திக்கொள்கிறேன்.

ஒரு வாசகர் “Buffer state என்றால் என்ன?’’ என்று கேட்டுள்ளார்.

Buffer என்றால் ஆபத்து விளையாமல் பார்த்துக்கொள்ளும் ஒரு பொருளைக் குறிக்கும். கண்ணாடிப் பொருளின்மீது ஒரு ஸ்பாஞ்ச் படலம் இருக்கிறது என்றால் அது Buffer ஆகப் பயன்படுகிறது. Friends can act as a buffer against stress.

Buffer state என்றால் இரண்டு எதிரி நாடுகளுக்கு நடுவே இருக்கிற ஒரு சிறிய நடுநிலை நாடு எனலாம். இதன் காரணமாக அந்த இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையே அந்தப் பகுதியில் எல்லைப் பிரச்சினை வராமல் தடுக்கப்படுகிறது. (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடுவே அமைந்திருக்கும் ஒரு நாடு நேபாளம் என்பது தெரியும்தானே?). ஆப்கானிஸ்தான் ஒரு காலத்தில் பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்குமிடையே ஒரு buffer state ஆக இருந்தது. அதேபோல ஒரு காலகட்டத்தில் பூட்டான், சிக்கிம் போன்ற நாடுகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கும் சீனாவுக்கும் நடுவே buffer states ஆக விளங்கின.

MOODY - TEMPERAMENTAL

Moody, temperamental ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஓரளவு ஒரே அர்த்தத்தைக் கொண்டவை. ஆனாலும் சில வேறுபாடுகள் உண்டு. Moodyயாக இருப்பவர் அடிக்கடி தனக்குள் தன்னைச் சுருக்கிக்கொள்வார். ஏதோ ‘டல்’லாக தனியானதொரு (பெரும்பாலும் எதிர்மறைத் தன்மைகள் கொண்ட) உலகத்தில் சஞ்சரிப்பார்.

Temperamental என்றால் சட்சட்டென்று உணர்ச்சிகளின் அதிர்வுகளுக்கு உள்ளாகும் தன்மை. கோபம் வந்தால் கையில் உள்ள தட்டைத் தூக்கி எறிவார்கள். எதிரில் உள்ள கண்ணாடியில் குத்து விட்டுக் கையில் காயம்படுவார்கள். temperamental person-ன் வெளிப்பாடுகளுக்கு இவை சில உதாரணங்கள்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x