Published : 28 Apr 2015 12:00 PM
Last Updated : 28 Apr 2015 12:00 PM

ஆங்கிலம் அறிவோமே- 55: தனிநபர் துரோகமா, தேசத் துரோகமா?

ஒரு வாசகர் ‘‘Simile என்பதற்கும் Metaphor என்பதற்கும் என்ன வித்தியாசம்?’’ என்று கேட்டிருக்கிறார். சரியாகக் கவனியுங்கள் smile அல்ல, simile (அதாவது ஸிமிலி).

இரண்டுமே ஒருவிதத்தில் ஒப்பீடுகள்தான். ஆனால் எந்த வகை ஒப்பீடு என்பதில்தான் வித்தியாசம்.

Simile என்பது நேரடியான, வெளிப்படையான ஒப்பீடு. பெரும்பாலும் ‘like’, ‘as’ போன்ற வார்த்தைகள் இதில் இடம் பெறும்.

The dhoti is as white as milk என்பது simile. As clear as crystal, as cool as a cucumber, as easy as ABC போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.

Metaphor என்பதில் ஒப்பிடப்படும் பொருள்கள் (எந்த இடை வார்த்தையும் இல்லாமல்) நேரடியாக இணைந்து விடுகின்றன. அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான் என்று எழுதும்போது, நடுவில் ‘ஐஸ்கட்டியைப் போல’ என்று நாம் குறிப்பிடுவதில்லை. ஒட்டகத்தைப் பாலைவனக் கப்பல் என்கிறோம். (அதாவது கடலில் பயணம் செய்யக் கப்பல் உதவுவதுபோல, பாலைவனத்தில் பயணம் செய்ய உதவுகிறது என்று நீட்டி முழக்கவில்லை). இவையெல்லாம் metaphors. கீழே உள்ளவையும்தான்.

Her butterfly lips mesmerised me.

His belt was a snake curling around his waist.

You are the light of my life.

AB என்றால்

ஒரு வார்த்தைக்கு முன்னால் ‘ab’ போட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்கிறார் ஒரு நண்பர்.

கொஞ்சம் எதிர்மறையான அர்த்தம் வரும். அதாவது இல்லை என்பதுபோல அல்லது ab என்பதைத் தொடரும் வார்த்தையின் பொருளிலிருந்து விலகி இருக்கக்கூடிய என்று சொல்லலாம். Abnormal, abuse ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். பூர்வகுடிமக்களை aborigine என்பதுகூட இப்படித்தான் இருக்க வேண்டும். தொடக்கம் என்பதே இல்லாத என்ற அர்த்தத்தில். அதாவது ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலம்!’

வேறு சில நெகடிவான பொருட்களைத் தரும் வார்த்தைகளையும் கவனியுங்கள்.

Abdicate (துறத்தல் - abdicate throne என்பதுபோல்), Abduct (கடத்தல்), Abolish (முழுவதுமாக அழித்தல்).

QUISLING

“சமீபத்தில் ‘Quisling’ என்ற வார்த்தையைப் படித்தேன். அதன் பொருள் என்ன?” இது ஒரு வாசகரின் கேள்வி.

“எதிரியைக்கூட மன்னிப்பேன்” எனும் பெருந்தன்மையான தமிழ்ப் படக் கதாநாயகர்கள் யாரை மன்னிக்கவே மாட்டார்களோ அவர்களின் பிரதிநிதி என்று Quisling-ஐக் குறிப்பிடலாம். அதாவது துரோகி.

நார்வே நாட்டில் (ஹிட்லரின் கட்சியான) நாஜியின் ஒற்றனாக வேலை பார்த்தவர்களில் ஒருவன் ‘விட்குன் குவிஸ்லிங்’. ஒற்று வேலையில் தேர்ந்தவன். சொந்த தேசத்துக்கு எதிராகச் செயல்பட்டவன். எனவே, துரோகிகளைக் குவிஸ்லிங் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். கொஞ்சம் ப்ரூடஸ் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் தனி நபருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்பவன் Brutus. தேசத்துக்கு துரோகம் செய்பவன் Quisling. (எந்த வார்த்தையில் Q இடம்பெற்றாலும் அதைத் தொடர்ந்து U என்ற எழுத்தும் எப்படியாவது ஒட்டிக்கொள்கிறது என்பதைக் கவனித்தீர்களா?)

CENTRE MIDDLE

Centre என்பதும் middle என்பதும் நம்மில் சிலர் நினைப்பதுபோல் ஒரே அர்த்தம் கொண்டவை அல்ல. Centre என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளி. Middle என்பது center- ன் அருகில் அல்லது சுற்றியிருக்கும் பகுதியைக் குறிக்கும். Centre of the circle-தான் middle of the circle அல்ல. உங்கள் தலையில் நடு வகிடு எடுத்துக் கொண்டால், அதைக் குறிக்க நீங்கள் பயன்படுத்த வேண்டியது middle என்ற வார்த்தையைத்தான்; centre அல்ல.

Centre என்பது துல்லியமானது. Middle என்பது தோராயமானது. Middle class people, I am at middle of work ஆகியவற்றையும் கவனியுங்கள்.

Center என்பதற்கும் centre என்பதற்கும் என்ன வித்தியாசம்? ஒன்றுமில்லை. முதலாவது அமெரிக்க ஆங்கிலம். இரண்டாவது பிரிட்டிஷ் ஆங்கிலம்.

இப்போதெல்லாம் சில ஆங்கில நூல்களில் center என்ற வார்த்தையை ஏதாவது இடத்திற்கும் (shopping center என்பது போல), centre என்பதை மையப் புள்ளிக்கும் பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x