Published : 07 Apr 2015 12:59 PM
Last Updated : 07 Apr 2015 12:59 PM

ஆங்கிலம் அறிவோமே- 52: சிம்லாவுக்குப் போனார்களா, போனாரா?

அளவு கடந்த நம்பிக்கையுடன் (“எனக்கு நிச்சயமாகத் தெரியும். இருந்தாலும் ஒரு பேச்சுக்கு உங்களைக் கேட்கிறேன்” என்ற தொனியில்) நண்பர் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்.

“Prakash as well as Krishna are leaving for Simla என்று நான் ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டேன். உடனே என் நண்பன் ஒருவன் ‘are leaving’ என்று குறிப்பிடக் கூடாது. ‘Is leaving” என்றுதான் குறிப்பிட வேண்டும் என்கிறான். இது தொடர்பாக ஒரு பந்தயமும் வைத்துக் கொண்டிருக்கிறோம். பாவம் அவன். ‘As well as’ என்றால் ‘and’ என்பதற்குச் சமம்தானே? அப்படியானால் ‘are’-தானே பயன்படுத்தி ஆக வேண்டும்?’’

பாவம் யார்?

உண்மையில் ‘பாவம்’ மேற்படி கேள்வியை என்னிடம் கேட்ட நண்பர்தான். பந்தயத்தில் தோற்றாலும் புதிதாக ஒரு விஷயத்தை அவர் அறிந்து கொள்ளப் போகிறார். அந்தவரையில் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். இரண்டு ஒருமை பெயர்ச் சொற்கள் (அதாவது two singular nouns), ‘as well as’ என்ற வார்த்தைகளால் இணைக்கப்பட்டால் அதைத் தொடர்ந்து வரும் verb ஒருமையில்தான் இருக்கும். அதாவது வாசகர் கூறிய வாக்கியத்தில் ‘is leaving’ என்றுதான் பயன்படுத்தப்பட வேண்டும்.

‘As well as’ என்பது ‘and’ என்பதற்குச் சமம் அல்ல என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். (எனவேதான் ‘are’ பயன்படுத்தக் கூடாது).

இதை விளக்க ஒரு வாக்கியத்தைப் படிப்போம்.

Prema, as well as Suzan, came to the college என்பதன் அர்த்தம் பிரேமாவும் சூஸனும் கல்லூரிக்கு வந்தார்கள் என்பதல்ல. அதன் அர்த்தம் ‘‘சூஸன் மட்டுமல்ல, பிரேமாவும் கல் லூரிக்கு வந்தாள்’’ என்பதுதான். புரிகிறதா? ‘வந்தார்கள்’ அல்ல, ‘வந்தாள்’ என்பதுதான். எனவே singular. எனவே is.

அதுமட்டுமல்ல நண்பர் குறிப்பிட்ட வாக்கியத்தில் எங்கே கமாக்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் பாருங்கள்.

Prakash, as well as Krishna, is leaving for Simla. இதுதான் சரி.

PARTICPLE

Participle என்றால் verbலிருந்து உருவான ஒரு வார்த்தை. இது present participle, past participle என்று இருவகைப்படும்.

Present participle என்பது verbபோடு ing ஆகிய எழுத்துகளைச் சேர்த்தால் கிடைப்பது. Going, coming, standing, clapping போன்றவையெல்லாம் present participle.

Past participle என்பது முன்பு நான் குறிப்பிட்டிருந்த ‘மூன்றாவது வார்த்தை’. அதாவது irregular verbsல் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வார்த்தை.

Take-took-taken ஆகியவற்றில் taken past participle.

Come-came-come ஆகியவற்றில் மூன்றாவதாக உள்ள come என்பது past participle. இதேபோல Forgotten, begun, awoken போன்றவையெல்லாம் past particpleதான்.

Participle என்பது ஒரு adjective ஆக மாற்றமடையும் verb. சில உதாரணங்களைப் பார்க்கலாம். பொதுவாக ‘working’ என்றால் அது வெறும் verbதான்.

She is working at an office.

I am working here for the past five years.

இந்த வாக்கியங்களில் working என்பது ஒரு verb ஆகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது கீழே உள்ள வாக்கியத்தைக் கவனியுங்கள்.

Working women are more confident.

Working people help the country to growth.

இந்த வாக்கியங்களில் working என்பது ஒரு adjective போலப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது women, people போன்ற nounகளை விளக்கப் பயன்படுகிறது. இந்த வாக்கியங்களில் பயன்பட்டிருப்பது present participle.

A burnt toast is not accepted.

Alzheimer’s disease results in forgotten memories.

மேலே உள்ள வாக்கியங்களில் burnt, forgotten ஆகிய வார்த்தைகள்கூட adjective ஆகப் பயன்படுத்தப்பட்டுள்ள verbsதான். (Toast, memories ஆகிய nounகளை இவை விவரிக்கின்றன). இவை past participleஆகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Adjective ஆக verb பயன்பட்டால் மட்டும்தான் அதை participle என்போமா? அதை வரும் பகுதிகளில் பார்ப்போம்.

PROTEAS

“PROTEAS” என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறேன் அப்படியென்றால் என்ன என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

உலகக் கோப்பை விமர்சனங்களைச் சமீபத்தில் கேட்டபோது இந்த வார்த்தை அவருக்கு அறிமுகமாகி இருக்கலாம்.

PROTEA (ப்ரோடி) என்பது தென்னாப்பிரிக்காவில் அதிகம் காணப்படும் ஒரு மலர். பிங்க் மற்றும் மஞ்சள் நிற இதழ்களைக் கொண்டது. இந்த மலரின் பெயரையே தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி யைக் குறிக்கவும் (ப்ரோடிஸ் என்று) பயன்படுத்துகிறார்கள்.

(கிவி என்பது பறக்க முடியாத ஒரு பறவை. நியூசிலாந்தில் அதிகம் காணப்படும் பறவை. எனவே நியூசிலாந்து கிரிக்கெட் குழுவை KIWIS என்று வர்ணனைகளில் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கலாம்.).

இன்னொரு தகவல். தென்னாப்பிரிக்க ரக்பி குழுவை ‘ஸ்பிரிங்போக்ஸ்’ (Springboks) என்று குறிப்பிடுவார்கள். இது அந்த நாட்டின் தேசிய விலங்கு.

DISEASE - DECEASE

Disease என்றால் நோய். Ease என்றால் எளிதாக என்பது மட்டுமல்ல, இயல்பாக என்றும் பொருள். இயல்பாக இருக்க முடியாமல் பாதிக்கப்படும்போது அதற்கு நோய் ஒரு காரணம் என்கிற அர்த்தத்தில் disease பயன்படுத்தப்படுகிறது. Ebola is a dreadful disease.

Decease என்றால் இறப்பது என்று அர்த்தம். Cease என்றால் இல்லாமல் போவது. Decease என்றால் மொத்தமாக இல்லாமல் போவது - அதாவது இறப்பது. My deceased father left a will. Upon your decease, your properties will pass to your children.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x