Last Updated : 11 Jul, 2017 11:04 AM

 

Published : 11 Jul 2017 11:04 AM
Last Updated : 11 Jul 2017 11:04 AM

ஆங்கிலம் அறிவோமே 168: இன்னொரு முறை சொல்லுங்க!

கேட்டாரே ஒரு கேள்வி

வெப்பத்தைக் குறிக்க ஃபாரன்ஹீட், சென்டிகிரேடு, செல்சியஸ் ஆகிய மூன்று அளவைகள் இருக்கின்றன. இவற்றில் ஃபாரன்ஹீட்டை ‘F’ என்று குறிப்பிடுகிறோம். ​சென்டிகிரேடை ‘C’ என்று குறிப்பிடுகிறோம். இவை இரண்டையும் நான் பள்ளிப் படிப்பின்போது அறிந்திருக்கிறேன். செல்சியஸ் என்பதைக் குறிக்கவும் ‘C’ என்பதே குறியீடாகப் பயன்படுத்துகிறார்கள். இது அறிவியல் மாணவர்களைக் குழப்பாதா? ஆங்கில symbols தெளிவானதாக இருக்க வேண்டாமா?

*****************************************

சென்டிகிரேடும் செல்சியஸூம் ஒன்றுதான் என்பது தெரியவரும்போது குழப்பம் உண்டாகாது. முன்பு சென்டிகிரேடு என்று குறிப்பிட்டதை இப்போது செல்சியஸ் என்கிறார்கள். வானிலை அறிக்கைகளை ரமணன் காலத்துக்கு முன்பிருந்தே பார்த்தவர்கள் இதை அறிந்திருப்பார்கள்! ஸ்வீடன் நாட்டு பிரபல விஞ்ஞானி ஆண்டர்ஸ் செல்சியஸ் என்பவரின் பெயரில்தான் செல்சியஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. இவர்தான் 1742-ல் செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.

அப்படியானால் Centigrade என்று ஒரு விஞ்ஞானி இருந்தாரா என்று யாரும் கேட்டுவிடக்கூடாது. Centum, gradus ஆகிய இரு லத்தீன் வார்த்தைகளின் இணைப்பாக ஆங்கிலத்தில் உருவானதுதான் centigrade. Centum என்றால் 100. Grade என்றால் அளவு.

*****************************************

“ஓர் ஆங்கில இதழின் வணிகப் பகுதியில் ஒரு நிறுவனத்தை Dinosaur உடன் ஒப்பிட்டிருந்தார்கள். ஆனால் அது அப்படி ஒன்றும் பெரிய நிறுவனமாக எனக்குப்படவில்லை. எதனால் இப்படிக் குறிப்பிட்டார்கள்?”

இதற்கான விடையில் ஒரு எதிர்பாராத கோணம் இருக்கிறது. அதை அறிந்துகொள்வதற்கு முன் Dinosaur என்ற வார்த்தை குறித்த சில விவரங்களை அறிந்துகொள்வோம். இந்த வார்த்தை 1842-ல் உருவானது. இதை உருவாக்கியவர் ரிச்சர்டு ஓவென். இவர் ஒரு பேலியண்டாலஜிஸ்ட் (Paleontologist). உலகிலிருந்து அழிந்துபோன விலங்குகள், தாவரங்கள் குறித்த விவரங்களை அவற்றின் படிவங்களிலிருந்து (Fossils) கண்டறிந்து தெரியப்படுத்துபவரை ஆங்கிலத்தில் இப்படி அழைப்பார்கள்.

Dinosaur என்ற ஆங்கில வார்த்தை Deinos, sauros ஆகிய இரண்டு கிரேக்க வார்த்தைகளின் இணைப்பு. இதற்குக் கிரேக்க மொழியில் ‘பயங்கரமான பல்லி’ என்று பொருள்.

சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும், விரைவில் அழிந்துவிடும் நிலையில் உள்ள ஒரு நிறுவனத்தை dinosaur உடன் ஒப்பிடுவதுண்டு.

Dinosaur என்பதை ‘டைனசோர்’ என்று உச்சரிக்க வேண்டும்.

Short என்பதன் noun எது? Shortness என்பதா? அல்லது shortage என்பதா?

அர்த்தத்தைப் பொருத்து இரண்டும்தான்.

தேவைப்படும் ஒன்று போதிய அளவில் கிடைக்காதபோது அதை shortage என்பார்கள். A shortage of cash என்பதுபோல்.

உயரம் அல்லது நீளத்தில் குறைவாக இருக்கும் தன்மையை shortness என்பார்கள்.

*****************************************

“நான் பேசிக் கொண்டிருக்கும்போது எதிராளி come again என்று கூறினால் என்ன பொருள்?”

நீங்கள் கூறியதை மறுபடியும் கூறச் சொல்கிறார். இதற்குக் காரணம் நீங்கள் கூறியது அவர் காதில் விழவில்லை என்பதல்ல. தெளிவாகவே விழுந்துள்ளது. என்றாலும் அதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது நம்பமுடியவில்லை என்று அர்த்தம்.

*****************************************

“One for the road, Williams” என்ற வரியை ஆங்கில நாவல் ஒன்றில் படித்தேன். இதற்கு என்ன அர்த்தம்?

இந்த மது அருந்துதல் தொடர்பாக இடம்பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.

குடிக்கும்போது “To your health” என்றபடி கோப்பைகளை இடித்துவிட்டுப் பின் குடிப்பதுண்டு. அதாவது எதிராளி உடல்நலத்தோடு இருக்க வே​ண்டும் என்பதற்காக இவர் அந்தக் கோப்பை மதுவைக் குடிக்கிறாராம்! தியாகம்!

“One for the road” என்ற phrase-ஐ ஒருவர் உதிர்த்தால் “கடைசியான மதுக் கோப்பை இது. ​இதோடு சரி” என்று அர்த்தம் (ஆனால் “கடைசி கடைசியா” என்றபடி தொடரவும் வாய்ப்பு உண்டு).

பொதுவாக ஒரு நீண்ட பயணத்துக்குமுன் உட்கொள்ளும் மதுவை ‘one for the road’ என்று குறிப்பிடுவார்கள் . அதற்குப் பதிலாக ‘One for an accident’ என்றே குறிப்பிட்டுவிடலாமே!

இன்னொரு வாசகர் “Have a heart’’ என்பதன் பொருளை விளக்கக் கோரியிருக்கிறார். இப்படி ஒருவர் சொன்ன பிறகுதான் ஓர் இதயத்தை நாம் பொருத்திக் கொள்ளப் போகிறோமா என்ன? அப்படி அல்ல.

Have a heart என்றால் ‘கொஞ்சம் கருணை காட்டு’ என்று பொருள்.

மேலே குறிப்பிட்ட இரு வாசகர்கள் கூறியதையும் சேர்த்துப் பார்க்கும்போது வித்தியாசமான ஒரு கோணம் விரிகிறது!

“One for the road, Williams”.

“Have a heart’’.

மேற்கூறிய உரையாடலில் அதிகப்படியாக ஒரு கோப்பை மதுவை உட்கொள்ளலாம் என்று ஒருவர் கூற, அதை இரண்டாவது நபர் (வில்லியம்ஸ்) கெஞ்சலாக மறுக்கிறார்.

*****************************************

ஒரு பெரிய பிரச்சினை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலருக்கும் அது புரிகிறது. இந்த நிலையில் அப்படியொரு பிரச்சினையே இல்லாததுபோல ஒருவர் நடந்துகொள்வதை The elephant in our drawing room என்று சொல்வார்கள்.

இதை The elephant in our living room என்றும் கூறுவது​ண்டு. எல்லோருக்கும் தெரிந்திருந்தும் யாரும் அதைப் பற்றிக் குறிப்பிடாமல் இருந்தாலும் இப்படிக் கூறுவதுண்டு.

The fact that the elder son lives with a woman whom he has not married is a big elephant in the room at every family gathering.

*****************************************

போட்டியில் கேட்டுவிட்டால்?

They spoke against corruption with

(a) Zeal

(b) Power

(c) Calmness

(d) Enthusiasm

(e) Indifference

கொடுக்கப்பட்ட வாக்கியம் ஊழலுக்கு எதிராக எப்படிப் பேசினார்கள் என்பதைக் குறிக்கிறது.

அமைதியாகப் பேசினார்கள் என்பது பொருந்தவில்லை. எனவே calmness என்பதை விட்டுவிடலாம்.

உற்சாகமாகப் பேசினார்கள் என்றாலும் பொருந்தவில்லை. பொதுவாக நேர்மையான விஷயங்கள் குறித்துத்தான் அப்படிப் பேசுவார்கள். எனவே enthusiasm இங்கே நீக்கப்பட வேண்டிய சொல்.

ஊழலுக்கு எதிராக ஏனோதானோ என்று ஆர்வமில்லாமல் பேசினார்கள் என்பதும் பொருந்தவில்லை. ஆகவே

indifference என்பதும் தவறு.

சக்தியோடு (power) பேசினார்கள் என்பதைவிட zeal-லோடு பேசினார்கள் என்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. Zeal என்றால் மிகுந்த உணர்வு பூர்வமாக (passion) பேசுவதைக் குறிக்கிறது.

They spoke against corruption with zeal.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x