Last Updated : 13 Jun, 2017 08:49 AM

 

Published : 13 Jun 2017 08:49 AM
Last Updated : 13 Jun 2017 08:49 AM

ஆங்கிலம் அறிவோமே 164: ‘மக்’ அடித்தால் மக்கா?

கேட்டாரே ஒரு கேள்வி

Mug என்றால் ஒரு பெரிய கோப்பை என்பது தெரியும். மனப்பாடம் செய்வதை ‘mug அடிப்பது’ என்கிறோமே இதற்கும் அதற்கும் தொடர்பு உண்டா?

**********************

Famous – Infamous

“நாங்க ரெண்டுபேரும் ஒரே சமயத்தில்தான் சென்னைக்கு வந்தோம்; உழைச்சோம். ஆனால், அவன் famous ஆயிட்டான்; நான் மட்டும் infamous - ஆகவே இருக்கேன” என்றார் ஒருவர் வருத்தத்துடன்.

அப்படி அவர் சொல்லக் கூடாது என்றேன். “ஒருவர் தன் மனவருத்தத்தை வெளிக்காட்டக் கூடாதா?” என்று மனவருத்தத்தோடு கேட்பவர்களுக்கு - தவறு கண்டது அவர் உணர்வில் அல்ல, ஆங்கிலப் பயன்பாட்டில்.

Famous என்பதற்கு எதிர்ச்சொல் infamous என எண்ணிக்கொண்டு unpopular என்ற பொருளில் அதைச் சிலர் பயன்படுத்துகிறார்கள். Infamous என்பது அதற்கும் மேல் (அதாவது அதற்கும் கீழ்!) ஒருவர் infamous ஆக இருக்கிறார் என்றால் அவருக்கு மிகவும் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.

Notorious என்றும் குறிப்பிடலாம். மனிதர்களுக்கு மட்டும்தான் இந்த infamous பயன்படுத்தப்படுகிறது என்பதில்லை. The infamous Delhi smog is an example of extreme air pollution.

**********************

“Preposition-னுக்கான அர்த்தம் தெளிவாக விளங்கவில்லை. எடுத்துக்காட்டாக with என்றால் கூட, on என்றால் மேலே என்பதுபோல் பிற prepositions-க்கான அர்த்தங்களைக் கூற முடியுமா?”

நண்பரே, prepositions-களைப் பொறுத்தவரை மேலும் மேலும் அவற்றை வாக்கியங்களில் பயன்படுத்தும்போதுதான் தெளிவு கிடைக்கும். இதுகூட எந்த preposition-ஐ எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவுதானே தவிர, அந்த preposition-னுக்கான குறிப்பான அர்த்தம் குறித்து அல்ல.

With பற்றிக் குறிப்பிட்டீர்கள். England fought with France against Germany எனும்போது with என்பதற்கு நீங்கள் கூறிய அர்த்தம் வருகிறது. அதாவது பிரான்ஸுடன் இணைந்து (அல்லது) பிரான்ஸையும் சேர்த்துக்கொண்டு ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து போரிட்டது.

ஆனால், England fought with France என்று மட்டுமே அந்த வாக்கியம் இருந்தால் (போன வாக்கியத்தில் கூட்டாளியாக இருந்த) பிரான்ஸ் இப்போது எதிரியாகிவிட்டது. அதாவது பிரான்ஸுக்கு எதிராக இங்கிலாந்து போரிட்டது. ஆக with என்ற preposition alongside, against ஆகிய இரு விதங்களிலும் பயன்படுகிறது.

இதுகுறித்து எழுதும்போது, எனக்கு Janus faced words என்பவை நினைவுக்குவருகின்றன. ஒரே வார்த்தை இரண்டு எதிரெதிர் அர்த்தங்கள் கொண்டதாக அமைவது. கிரேக்கக் கடவுளான ஜானஸ் இரு எதிரெதிர் முகங்கள் கொண்டவர். எடுத்துக்காட்டு sanction என்ற வார்த்தை. Please sanction me leave எனும்போது sanction என்ற வார்த்தை அளிப்பது எனப் பொருள் கொண்டிருக்கிறது. Economic sanctions எனும்போது தடுப்பது என்ற பொருளில் வருகிறது (பொருளாதாரத் தடை). Let us dress என்றால் அணிதல் என்று பொருள். Let us dress the chicken எனும்போது நீக்குதல் என்று பொருள் (கோழியின் இறக்கைகளை நீக்குதல்).

இப்படிப்பட்ட வார்த்தைகள் காலப்போக்கில் ஒரு அர்த்தம் கொண்டவையாகவே மாறிவிட வாய்ப்பு அதிகம். வேறொரு அர்த்தம் வழக்கொழிந்துவிடும். ஆனால், விதிவிலக்குகள் உண்டு.

“பழமொழிகள் குறித்து எழுதியிருந்தீர்கள். A hundred years of regret pay not a farthing of debt” என்பதன் பொருளை விளக்க முடியுமா?” எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.

“ஆக வேண்டியதைப் பார்” என்பதைத்தான் இந்தப் பழமொழி உணர்த்துகிறது. அதாவது கடன்பட்டுவிட்டோமே என்று வருடக்கணக்கில் வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. அதனால் கடன் சுமையில் ஒரு துளியும் குறையப்போவதில்லை.

எனினும், இந்தப் பழமொழியை வேறு கோணத்தில் பார்த்தால் ஒரு நண்பரையோ, உறவினரையோ பார்த்து, “எனக்காக நீ குடம் குடமாகக் கண்ணீர் விடுவதால் மட்டும் என் கடன் துளியாவது குறையப் போகிறதா என்ன? முடிந்தால் நிதி உதவி செய். இல்லைய என்றால் நகர்ந்து செல்” என்று ஆதங்கத்தோடு கூறுவதாகவும் படுகிறது.

Farthing என்பது பிரிட்டனில் பயன்படுத்தப்பட்ட மிக மிகக் குறைவான மதிப்பு கொண்ட நாணயம் (நம் தம்படிபோல).

Penny என்பதைக் குறைவான மதிப்பு கொண்ட நாணயமாகக் கருதுவதுண்டு (Penny wise and found foolish) என்பது நினைவுக்கு வருகிறதா - சிறு விஷயங்களில் கவனம் செலுத்திவிட்டுப் பெரிய விஷயங்களில் கோட்டை விடுவது! ஒரு பவுண்டில் 100-ல் ஒரு பங்கு மதிப்பு கொண்டதுதான் penny. ஒரு penny-ல் நான்கில் ஒரு பங்கு மதிப்பு கொண்டதுதான் farthing.

அக்காலத்தில் பிரிட்டனில் சைக்கிள்கள் அறிமுகமானபோது அவற்றை penny farthings என்று குறிப்பிட்டார்கள். இவற்றின் முன்சக்கரம் பெரிதாகவும், பின் சக்கரம் சிறிதாகவும் இருந்தன.

**********************

Sleeping Partner என்று அழைக்கப்படுபவர் யார்?

Active Partner என்றால் ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொள்ளும் அதன் பங்குதாரர்.

Sleeping Partner என்றால் முதலீடு செய்துவிட்டு அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் எந்தப் பங்கும் வகிக்காதவர்.

Sleeping Partner-ஐ Dormant Partner என்றும் குறிப்பிடுவதுண்டு.

Nominal Partner என்றால் ஒரு நிறுவனத்தில் எந்த ஆர்வமும் இல்லாதவர். முதலீடும் செய்யாதவர். ஆனால், அவரை ஒரு partner என்று கூறிக் கொண்டால் அந்த நிறுவனத்துக்கு ஓர் அந்தஸ்து கிடைக்கலாம்.

ஒரு கூட்டு வணிகத்தில் (Partnership) அனைத்துப் பங்குதாரர்களும் லாபம் - நஷ்டம் ஆகிய இரண்டையுமே பகிர்ந்துகொள்வார்கள். ஆனால் Partner-in Profits only என்பவர் லாபத்தில் மட்டுமே தன் பங்கை அனுபவிப்பார். நஷ்டத்துக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது.

**********************

Mug தொடர்பாக ‘கேட்டாரே ஒரு கேள்வி’யில் இடம்பெற்ற கேள்விக்கான பதில் சுவாரசியமானது - உண்டு!

Mug என்பது (noun ஆகப் பயன்படுத்தப்படும்போது) உருளை (அதாவது சிலிண்டர்) வடிவத்தில் கைப்பிடியோடு கூடிய சற்றே பெரிய கோப்பையைக் குறிக்கும். Cup என்றால் saucer உண்டு. ஆனால் mug-குக்கு saucer கிடையாது. I drank a mug of coffee.

Mug என்பது verb ஆகப் பயன்படுத்தப்படும்போது வேறு பொருள்கள் கொண்டது. “He was mugged by four persons of a gang” என்றால் அவர் நான்கு பேரால் தாக்கப்பட்டார் என்று பொருள். பொதுவாகப் பொது இடங்களில் தாக்கப்பட்டுத் திருட்டு நடப்பதை mug என்ற வார்த்தையின் மூலம் குறிக்கிறோம்.

எதையாவது mug செய்வது என்றால் அது ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்துக்குள் ஒன்றை வேகமாகக் கற்றுக்கொள்வதைக் குறிக்கும். முக்கியமாகத் தேர்வு காலத்துக்கு முன்பு.

எனவே, முழுமையாக ஒன்றை அறிந்துகொள்வது இப்படிப் படிப்பதற்கான நோக்கமில்லை என்பதால் mug செய்வது அல்லது mug அடிப்பது என்பதை அர்த்தம் புரியாமலேயே மனப்பாடம் செய்வதைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம்.

Mugshot என்றால் அதிகாரபூர்வமாக ஒருவரது முகத்தை எடுக்கும் ஒளிப்படம். அதற்காகப் புது அலுவலகத்தில் சேர்வதற்காக உங்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதைப் பிறரிடம் ‘இதுதான் என்னோட mugshot’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளாதீர்கள். காரணம் நடைமுறையில் mugshot என்ற வார்த்தை சிறையில் அடைக்கும் முன் ஒருவரைக் காவல்துறை எடுக்கும் புகைப்படத்தைக் குறிக்கவே பயன்படுகிறது.

**********************

போட்டியில் கேட்டுவிட்டால்?

The rain will ________ for most of the morning, but we are expecting a brighter afternoon.

a) insist

b) persist

c) resist

d) consist

e) pourest

Will pour என்று வரலாம். ஆனால் will pourest என்று வராது.

Insist என்றால் ஒன்றில் உறுதியாக இருப்பது.

Persist என்றால் விடாமல் தொடர்வது.

Resist என்றால் ஒன்றை எதிர்ப்பதில் உறுதி காட்டுவது.

Consist என்றால் கொண்டிருப்பது.

இவற்றில் persist என்ற வார்த்தைதான், அதன் அர்த்தத்தால் கோடிட்ட இடத்தில் சரியாகப் பொருந்துகிறது. எனவே The rain will persist for most of the morning, but we are expecting a brighter afternoon என்பதுதான் சரியான வாக்கியம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x