Last Updated : 06 Jun, 2017 10:17 AM

 

Published : 06 Jun 2017 10:17 AM
Last Updated : 06 Jun 2017 10:17 AM

ஆங்கிலம் அறிவோமே 163: கோடம்பாக்கம் கோலிவுட் ஆனது எப்படி?

கேட்டாரே ஒரு கேள்வி

“Die hard என்றால் வன்முறையான சாவு என்று அர்த்தமா அல்லது மிக மெதுவான சாவு என்று அர்த்தமா?”

**********************

“No stamp என்ற வார்த்தையிலுள்ள எழுத்துகளை மாற்றிப்போட்டால் Postman என்று வருகிறதே!” என்று வியப்பாகக் கேள்வி எழுப்பி உள்ளார் ஒரு வாசகர்.

வார்த்தை அல்லது வார்த்தைகளில் உள்ள எழுத்துகளை மாற்றிப் போட்டு வேறொரு வார்த்தையாக (அல்லது வார்த்தைகளாக) அமைக்கும்போது அவற்றை anagrams என்பார்கள். வாசகர் குறிப்பிட்டதுபோல மிக வேடிக்கையான மற்றும் விபரீதமான anagrams குறித்து முன்பு ஒரு முறை இப்பகுதியில் குறிப்பிட்டுள்ளோம்.

கீழே மேலும் சில வார்த்தைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றின் anagram-ஐயும் கண்டுபிடியுங்கள். அந்த anagrams உங்களுக்குத் திகைப்பை அளிக்க வாய்ப்பு அதிகம்.

குறைந்தது 6 விடைகளையாவது கண்டுபிடித்தால் அவற்றை நான்கு நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்புங்கள். உங்கள் பெயர், ஊர் இரண்டும் தேவை.

1) GO NURSE

2) SEA TRIP

3) FULTTER BY

4) STOPPED? NO

5) IT EGGS ON US

6) NOTES

7) ACT IN IT

**********************

பலவிதத் துறைகளில் Consultant என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். இதன் உண்மையான அர்த்தம்தான் என்ன? இப்படிக் கேள்வி கேட்ட நண்பருக்கான விடை இது.

Consultant என்பவர் ஒரு துறையைப் பற்றி மிக அதிகமான விவரங்களை அறிந்துவைத்திருப்பவர். அந்தத் துறையைக் குறித்த அறிவும், அனுபவமும் கொண்டவர். எனவே, இவரது ஆலோசனையைப் பெறுவதற்காக நிறுவனங்கள் இவருக்குத் தொகை அல்லது ஊதியத்தை அளிக்கிறது. Consultant என்பதைத் தமிழில் ஆலோசகர் எனலாம்.

**********************

SHAREHOLDERS – STAKEHOLDERS

Shareholders என்றால் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர். அவருக்கு அந்த நிறுவனம் அதிக லாபம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அப்போதுதான் அவர் செய்த முதலீடுகளுக்குரிய பலன் கிடைக்கும்.

ஆனால், stakeholder என்பவருக்கு நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதில் அதிகக் கவனம் இருக்கும். Stakeholder-களுக்கு சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். அந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அல்லது சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அந்த நிறுவனத்துக்குத் தேவையான பொருள்களை வினியோகம் செய்யும் நிறுவனங்கள்.

Stakeholders என்பவர்களில் Shareholders-ம் அடங்கும்.

**********************

ஒரு நண்பர் என்னிடம் பேசுகையில் “அந்தத் திருடனைப் பொதுமக்களே captivate பண்ணிட்டாங்க. ஆனாலும் அவன் திமிறிக்கிட்டு ஓடிட்டான்” என்று கூறினார். Capture என்பதற்கும் captivate என்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

Capture என்றால் ஒருவரைக் கட்டுக்குள் கொண்டுவருவது எனலாம். The army captured 85 men. சில சமயம் ஓர் அழகியல் நோக்கிலும் இதைப் பயன்படுத்துவதுண்டு. அவளுடைய அத்தனை உணர்வுகளையும் அவர் தன் ஓவியத்தில் capture செய்துவிட்டார் என்பதுபோல.

Captivate என்றால் ஒருவரது கவனம் கவரப்படுவது. I am captivated by her beauty. The children were captivated by her stories.

**********************

“கோடம்பாக்கம் என்பதால் கோலிவுட் என்கிறோம். மும்பை என்பதால் மூலிவுட் என்றுதானே இருக்க வேண்டும். தவிர இதற்கெல்லாம் அடிப்படையான ஹாலிவுட் என்பது எப்படி வந்தது? ஹா என்ற எழுத்தில் தொடங்கும் ஊரின் பெயரை அடிப்படையாகக் கொண்டா? அது எந்த ஊர்?’’

ஹாலிவுட் என்பது கலிபோர்னியாவின் நடுப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம். இப்போது ஸ்டூடியோ உள்ள பகுதி முன்பு Hollywoodland என்று அழைக்கப்பட்டது. அது ரியல் எஸ்டேட்காரர் ஒருவர் வைத்த பெயர். Wood என்பதற்கு மரக்கட்டை என்று மட்டுமல்ல, காடு அல்லது மரங்கள் அடர்ந்த பகுதி என்றும் அர்த்தம். நல்லவேளை பொது அறிவுக் கோணத்திலிருந்து ‘ஆங்கிலக் கோணம்’ ஒன்று பிடிபட்டுவிட்டது!.

நாளடைவில் ஹாலிவுட் திரைப்படங்கள் என்றாலே அமெரிக்கத் திரைப்படங்கள் என்றாகிவிட்டன. இதையொட்டி இந்தித் திரைப்படங்கள் மும்பையைக் குறிக்கும் வகையில் bollywood movies என்று குறிக்கப்பட்டன. கோடம்பாக்கம் கோலிவுட் ஆனது. நாளடைவில் பம்பாய் மும்பை ஆனபிறகும் அது பாலிவுட் என்ற வார்த்தை தொடர்கிறது.

**********************

Die hard என்பது ஒரு phrase. மிக மிக மெதுவாகத்தான் மாற்றங்கள் நடைபெறும் என்று பொருள். Old habits die hard. எனவே die என்பது இங்கே இறப்பைக் குறிக்கவில்லை.

‘Die in harness’ என்றால் வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே இறந்துவிடுதல் என்று அர்த்தம். Harness என்றால் குதிரைக்கான சேணம், கடிவாளம்.

The die is cast என்றால் அதன் அர்த்தம் வேறு. ஒரு உறுதியான தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது. அதை மாற்ற முடியாது. Die என்றால் தாயக்கட்டை, சோழி போன்றது.

Dice என்ற பன்மை வார்த்தையின் singular formதான் die.

Never say die என்பது கஷ்டத்தில் உள்ள ஒருவருக்கு உற்சாகம் அளிப்பதாகக் கூறப்படும் வாக்கியம்.

**********************

போட்டியில் கேட்டுவிட்டால்?

கீழே உள்ள வாக்கியத்தில் விடுபட்ட இடங்களில் முறையே நிரப்பப்பட வேண்டிய வார்த்தைகள் எவை?

Doss was killed_______ a thief________a knife.

a) by, in

b) at, through

c) by, with

d) with, by

e) by, by

முதல் விடையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் by என்பது முதல் பகுதிக்குப் பொருந்துகிறது. ஆனால் in a knife என்பது சரியல்ல.

Doss was killed at a thief என்பது அபத்தமாக இருப்பதால், அதுவும் பொருந்தவில்லை.

Doss was killed with a thief என்பதும் சரியல்ல. ஒரு திருடனோடு தாஸும் கொல்லப்பட்டான் என்று பொருள் வரவேண்டுமானால் கூட Doss was killed along with a thief என்றுதான் இருக்க வேண்டும்.

அவர் ஒரு திருடனால் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார் என்று தமிழில் கூறும்போது இரண்டுமே ‘ஆல்’ என்று முடிவதைக் கொண்டு ‘by a thief by a knife’ என்று எழுதக் கூடாது.

ஒரு திருடனால் கத்தியைக் கொண்டு கொலை செய்யப்பட்டார் என்பதே சரி. உயிருள்ள பொருள்களால் எனும்போது by என்ற வார்த்தையையும், உயிரற்ற பொருள்களால் எனும்போது with என்ற வார்த்தையையும் பயன்படுத்துவதே வழக்கம். He was hit by the enemy. He was hit with a stone. இப்படித்தான் வர வேண்டும்.

எனவே Doss was killed by a thief with a knife என்பதே சரி.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x