Last Updated : 11 Apr, 2017 10:03 AM

 

Published : 11 Apr 2017 10:03 AM
Last Updated : 11 Apr 2017 10:03 AM

ஆங்கிலம் அறிவோமே - 155: ஆணாதிக்கமா இல்லை தேசபக்தியா?

கேட்டாரே ஒரு கேள்வி

ஒருவரை fool என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக அதே அர்த்தம் அளிக்கும் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். உதவ முடியுமா?

**********

NAVAL NAVEL

Naval என்றால் அது கடற்படை தொடர்பானது. Naval forces என்றால் கடற்படை (Navy என்றாலும் அப்படித்தான்). Naval treaty என்றால் கடற்படை சார்ந்த ஒப்பந்தம்.

Navel என்றால் தொப்புள். ஆனால் இன்னும் எந்த அரசியல்வாதியும் ‘தொப்புள் கொடி உறவு’ என்பதை navel relationship என்று மொழி பெயர்க்கவில்லை! ஓர் இடத்தின் மையப் பகுதியையும் navel என்று குறிப்பிடுவதுண்டு. Madhya Pradesh is considered as the navel of India.

**********

‘கேட்டாரே ஒரு கேள்வி’ வாசகருக்கு, நண்பரே, இந்தப் பகுதி நீங்கள் ஒருவரைத் திட்டுவதற்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது. என்றாலும் புதிய ஆங்கில வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளலாம் என்ற கோணத்திலும், (ஒருவேளை அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாததால்) fool என்பதைவிட வேறு மாதிரிச் சொல்வதை உங்கள் நண்பர் வரவேற்கலாம் (!) என்பதாலும், fool என்பதற்குச் சமமான சில வார்த்தைகளை முன் வைக்கிறேன்.

Dunce, Blockhead, Ignoramus

முட்டாளாகவும் இருந்து, உற்சாகமற்ற கோலத்திலேயே எப்போதும் இருப்பவரை dullard என்றும் கூறலாம்.

**********

Peeping Tom என்ற வார்த்தையில் எதற்காக Tom என்ற பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்? ஏதாவது பின்னணி உண்டா?

உண்டு. கோவென்டரி என்ற பகுதியைப் பிரபு லியோஃப்ரிக் ஆண்டு வந்தார். அவர் தொடர்ந்து விதித்த வரிச்சுமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவரது மனைவியான கோட்வா என்பவர் இது குறித்துத் தொடர்ந்து தன் கணவரிடம் மன்றாடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் கோபமும் கிண்டலுமாகத் தன் மனைவியிடம் ஓர் எதிர்பாராத நிபந்தனையை விதித்து, அதை அவர் நிறைவேற்றினால் வரிகளைக் குறைப்பதாகச் சொன்னார் லியோஃப்ரிக். அவர் எதிர்பாராதவிதமாக சீமாட்டி கோட்வா இதற்கு ஒத்துக்கொண்டார்.

இது தொடர்பாகத் தன் மனைவி நகரச் சாலைகளில் குதிரையில் செல்லும்போது, நகர மக்கள் அனைவரும் வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும் என்று பிரபு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் டாம் என்ற தையல்காரன் தன் வீட்டுக் கதவில் ஓர் ஓட்டையைப் போட்டு அதன் மூலமாக ராணியை முழுமையாகப் பார்த்துவிட்டான். விஷயம் தெரிந்ததும் அவன் பார்வை பறிக்கப்பட்டது (சவாலில் தோற்ற மன்னன் வரிகளைக் குறைத்தது தனி விஷயம்).

அன்றிலிருந்து பார்க்க அனுமதிக்கப் படாத ஒன்றை மறைந்திருந்து பார்ப்பவரை Peeping Tom என்று கூறத் தொடங்கினார்கள்.

இதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Eponyms என்பார்கள். கிரேக்க மொழியில் Epi என்றால் on அல்லது upon. Onama என்றால் பெயர்.

குற்றவாளி தலையைக் குனிந்து கொண்டு ஒரு கருவியில் தலை வைக்கும்போது அந்தத் தலையைத் துண்டிக்கும் கருவியை Guillotine என்பார்கள். இதை உருவாக்கியவரின் பெயரான Dr. Joseph Ignace Guillotin என்பவரின் பெயரில்தான் அந்தக் கருவி அறியப்படுகிறது.

உங்கள் தொண்டையின் முன்புறத்தைத் தொட்டுப் பாருங்கள். குண்டாகக் கோலி போல ஒன்றை உணர்கிறீர்களில்லையா? அதன் பெயர் Adam’s apple eponym!

பேட்டா ஷூக்கள் தொழிற்சாலை உள்ள பகுதிக்கு பேட்டா நகர் என்றே பெயரிட்டிருக்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் இருக்கிறது இந்தப் பகுதி. செக் தேசத்து வணிகரான டோமஸ் பேட்டா என்பவரால் தொடங்கப்பட்டது பேட்டா காலணி நிறுவனம்.

Male என்று தொடங்கினாலே நம் நினைவில் அடுத்ததாக எட்டிப் பார்க்கும் வார்த்தை ‘chauvinism!’.

“Chauvinism என்பதும் தேசபக்தியா?” என்று ஒரு நண்பர் முன்பு கேட்டதற்கான பதிலை இப்போது அளிப்பது பொருத்தமாக இருக்கும். ‘கிட்டத்தட்ட ஆமாம்’ என்ற அதற்கான பதில் பலருக்கும் வியப்பாக இருக்கலாம்.

Chauvinism என்றால் அதீதத் தேசபக்தி அல்லது ‘என் தேசம்தான் உயர்ந்தது’ என்ற உயர்வு மனப்பான்மை. Patriotism என்பது கட்டுப்பாடு கொண்ட தேசபக்தி. Chauvinism என்பது கட்டுப்பாடற்ற தேசபக்தி.

Chauvinism என்பதும் eponymதான்.

பிரான்ஸ் நாட்டுச் சிப்பாயான Nicolas Chauvin போரில் படுகாயம் அடைந்தார். பின்னர் இதற்காக அவருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் அளிக்கப்பட்டது. அது அவருக்குப் போதுமானதாக இல்லை. என்றாலும் நெப்போலியன் மீது தீராத பற்று கொண்டிருந்தார் அவர். பிரான்சில் நெப்போலியனுக்கு எதிரான அலை வீசியபோது கூட, அவர் நெப்போலியன் மீது வெறித்தனமான பற்று கொண்டு அதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இவர் பெயரில் Chauvinism என்ற வார்த்தை உருவானது.

Shakesprean, Victorian போன்ற வார்த்தைகளும் இப்படி eponymsதான்.

**********

Band aid approach அல்லது band aid diplomacy என்ற ஒன்றை வணிகம் மற்றும் அரசியலில் குறிப்பிடுவார்கள்.

ஒரு பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டுபிடித்துச் சரிசெய்யாமல் அதன் அறிகுறிகளை மட்டும் மறைக்க முயற்சிப்பதுதான் band aid approach.

அதாவது ஒரு பிரச்சினைக்குத் தீர்வுபோல ஏதோ ஒன்றைச் செய்வது. ஆனால், அதனால் உண்மையான பலன் எதுவும் இருக்காது என்பதுபோல. கண்துடைப்புக்குச் செய்வது என்றும் வைத்துக்கொள்ளலாம்.

**********

இரண்டு வாக்கியங்களைக் குறிப்பிடும் ஒரு வாசகர் இரண்டில் எது சரியானது என்று கேட்டிருக்கிறார். அந்த வாக்கியங்கள் இதோ.

1) The Chairman and Managing Director HAS submitted HIS report.

2) The Chairman and Managing Director HAVE submitted THEIR report.

Chairman, Managing Director ஆகிய இரு பதவிகளையும் ஒருவரே வகித்தால் முதல் வாக்கியம்தான் சரியானது.

இந்த இரு பதவிகளையும் இரு வேறு நபர்கள் வகித்தால் have, their ஆகிய வார்த்தைகள் இடம் பெறும்தான். ஆனால் அப்போது The Chairman and THE Managing Director என்று குறிப்பிட வேண்டும் (அதாவது இரண்டு பதவிகளை வகிப்பவர்களுக்கு முன்னாலும் தனித்தனியாக ‘the’ இடம்பெற வேண்டும்).

**********

யாராவது மன்னிப்பு கேட்டால் “It is okay” என்கிறோம். ஆங்கிலத்தில் வேறு என்னென்ன விதத்தில் இதைத் தெரிவிக்கலாம்?

பலவிதங்களில் இதை வெளிப்படுத்திக்கொள்ளலாம் நண்பரே. சில உதாரணங்கள் இதோ:

Oh, that is alright.

It is not your fault.

Oh, well that is life.

No problem.

Forget it.

I understand completely. You don’t need to apologise.

போட்டியில் கேட்டுவிட்டால்?

This machine is the most __________ one in the factory.

a) trustworthy

b) reliable

c) faithful

d) costliest

e) costlier

f) loyal

Most என்பது உச்சமானது. எனவே most costlier என்பது தவறு.

Costliest என்பது உச்சமானது. அதாவது அதைவிட விலை உயர்ந்தது எதுவும் இல்லை என்று பொருள். ஆனால் இதற்கு முன் most என்ற வார்த்தையைச் சேர்க்கக் கூடாது. ஆனால், வாக்கியத்தில் most இருப்பதால் costliest என்ற வார்த்தை அங்கு பொருந்தாமல் போகிறது.

நம்பகத்தன்மையை உணர்த்தும் trustworthy, faithful, loyal போன்ற வார்த்தைகளை மனிதர்களோடுதான் நாம் பொதுவாகப் பயன்படுத்துவோம். அதிகபட்சமாகப் பிற உயிரினங்களுக்குப் பயன்படுத்துவோம் faithful dog. ஆனால் வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது உயிரற்ற ஒரு பொருள் (machine).

எனவே reliable என்ற வார்த்தை இங்கு பொருந்துகிறது. அதாவது தொழிற்சாலையில் உள்ள கருவிகளிலேயே இது தொடர்ந்து சிறப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தம்.

This machine is the most reliable one in the factory.

சிப்ஸ்

# Your own baby என்றால் மாறுபட்ட அர்த்தம் உண்டா?

Your own idea.

# ENT என்று காது - மூக்கு தொண்டை ஆகியவற்றைச் சேர்த்துக் குறிப்பிடுகிறார்களே? மூக்குக்கு மட்டும் தனி மருத்துவவியல் கிடையாதா?

Rhinology என்றால் மூக்கு மற்றும் அதன் நோய்கள் குறித்த கல்வி. காண்டாமிருகத்தின் (Rhino) மூக்கு மனதில் எட்டிப் பார்க்கிறதா?

# Mob என்றாலும் crowd என்றாலும் ஒன்றுதானா?

ஒன்றுதான். ஆனால் நடைமுறையில் crowd கொஞ்சம் தாறுமாறாக நடந்து கொள்ளும்போது அதை mob என்று குறிப்பிடுகிறார்கள். தொடக்கத்தில் கங்காருக்களின் கூட்டத்தைத்தான் mob என்று குறிப்பிட்டார்கள்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x