Last Updated : 04 Apr, 2017 10:36 AM

 

Published : 04 Apr 2017 10:36 AM
Last Updated : 04 Apr 2017 10:36 AM

ஆங்கிலம் அறிவோமே - 154: கோடு போட்டா இலக்கணமா, வசதியா?

கேட்டாரே ஒரு கேள்வி

Female என்பதற்கும் Woman என்பதற்கும் என்ன வித்தியாசம்?



Spelling mistakes குறித்துச் சில வாரங்களுக்கு முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். மேலும் சில வார்த்தைகளைப் பிழையின்றி எழுதுகிறோமா என்பதை உறுதி செய்துகொள்ளலாமா?

ஒவ்வொன்றிலும் முதல் வார்த்தை சரியான எழுத்துகளுடன் உள்ளதா அல்லது இரண்டாவது வார்த்தைதான் சரியா என்பதைக் கூறுங்கள். விடைகள் பின்னர்.

i) 1) committee 2) commitee

ii) 1) arguement 2) argument

iii) 1) beginning 2) begining

iv) 1) judgement 2) judgment

v) 1) until 2) untill

vi) 1) goverment 2) government



‘கேட்டாரே ஒரு கேள்வி’க்கான விடை இது:

Female என்பது ஓர் அறிவியல் வார்த்தை. குழந்தை பெறும் சக்தி கொண்ட ஒரு பாலினத்தைக் குறிக்கிறது.

Female என்பது எந்த உயிரினத்திலும் உண்டு. ஆனால் Woman என்ற வார்த்தை மனித இனத்தில்தான் உண்டு.

Woman என்பது noun ஆகவும், female என்பது பெரும்பாலும் adjective ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எழுதும் சில ஆண்கள், பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் female என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது.



“I am keeping quiet என்று ஒருவர் கூறினால் அவரை hypocrite எனலாமா?” என்று குதர்க்கமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார் ஒரு நண்பர்.

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று இருக்கும் இரட்டை வேடதாரிகளை hypocrite என்பதுண்டு. “நான் பேசாமல் இருக்கிறேன்” என்று பேசுவதே தவறு என்று ஆகிறது. இந்தக் கோணத்தில் நண்பர் தன் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

ஆனால் எனக்குத் தெரிந்த சில இளைஞர்கள் படித்துவிட்டு எந்தப் பணியிலும் சேராமல் இருக்கும் காலகட்டத்தில் “I am keeping quiet” என்று கூறக் கேட்டதுண்டு. “நான் இப்போது சும்மாதான் இருக்கேன்” என்பதை ஆங்கிலத்தில் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். அது தவறு. I am unemployed. I am yet to find a job. இப்படி எதையாவது அவர்கள் குறிப்பிடலாம்.



மேலே பட்டியலிட்ட வார்த்தைகளில் ஒற்றைப்படைக் கேள்விகளில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் முதல் வார்த்தை எழுத்துப் பிழையின்றிக் காணப்படுகிறது. இரட்டைப்படைக் கேள்விகளில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் இரண்டாவது வார்த்தை எழுத்துப் பிழையில்லாமல் காணப்படுகிறது.



தமிழில் ஒரு வரியின் இறுதியில் நீண்ட வார்த்தை இடம் பெற்றால் அதைப் பாதியாக உடைத்து முதல் வரி இறுதியில் முதல் பாதியில் அடுத்த வரியின் தொடக்கத்தில் மீதிப் பாதியையும் எழுதுவோம். அந்த வார்த்தையின் முதல் பகுதியில் (அந்த வரியின் இறுதியில்) ஒரு சின்னக் கோடு போடுவோம். ஆங்கில இலக்கணத்திலும் இப்படி உண்டா?

நண்பரே, இவை இலக்கணம் தொடர்பானவை அல்ல. நடைமுறை வசதி தொடர்பானது. வார்த்தைகளை உடைக்காமல் போடுவதுதான் நல்லது என்று நான் எண்ணுகிறேன்.

கீழே உள்ள வாக்கியங்களில் தவறான இடத்தில் இடைவெளிவிட்டால் அர்த்தம் எவ்வளவு மாறுபடுகிறது என்பதைக் கவனியுங்கள்.

Learning through discovery often contributes more effectively to education.

Learning through disco very often contributes more effectively to education.

விமான விபத்து ஏற்பட்டால் அந்த விபத்தின் விபரங்களை அறிந்துகொள்ள அதில் வைக்கப்பட்டிருக்கும் “Black box” என்பதன் உண்மையான நிறம் black இல்லையாமே. அதற்கு ஏன் Black box என்று பெயரிட்டார்கள்?

உண்மைதான் வாசகரே. அந்தப் பெட்டி ஆரஞ்சு வண்ணம் கொண்டது. எதனால் Black box என்று பெயர் வைத்தார்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை துயரம் (விபத்து) நிகழ்ந்தது தொடர்பான விவரங்களை அறியப் பயன்பட்டதால் இந்தப் பெயரை வைத்திருப்பார்களோ?

உங்களுக்குத் தெரியுமா? French Fries என்பவை பிரெஞ்சில் தோன்றியவை அல்ல. பெல்ஜியத்தில் தோன்றியவை. என்றாலும் அந்த மாறுபட்ட பெயருக்கு ஒரு பின்னணி உண்டு. பெல்ஜிய நாட்டு மொழி வழக்கில் Frenching என்றால் காய்கறிகளை மிக நீளமாக வெட்டுவது என்று அர்த்தம். எனவேதான் French Fries.

புதிய மருந்துகளைப் பரிசோதிக்க Guinea pigs எனும் விலங்குகளை முதலில் பயன்படுத்துவார்கள் என்பதை அறிந்த ஒரு நண்பர் அவை பன்றிகள் என்றும் கினியா நாட்டில் தோன்றியவை என்றும், வெகு நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறார் (அவை ஒரு வகை எலிகள் அவ்வளவுதான்).

இப்படித்தான் சில பெயர்கள் பொருந்தாததாகத் தோன்றுகிறது.

Dry cleaning என்றால் திரவமே பயன்படுத்த மாட்டார்கள் என்பதில்லை. தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோலியம், அவ்வளவே.

முன்பு ஒரு பத்திரிகையில் படித்த கேள்வியும் நினைவுக்கு வருகிறது.

Why do they call food servers as waiters, when it is the customers who are waiting?

போட்டியில் கேட்டுவிட்டால்?

_______ will manage this project together

(a)I, he and you

(b)You, I and he

(c)I, you and he

(d)You, he and I

இவற்றில் இறுதியாகக் கொடுக்கப்பட்ட விடைதான் பொருத்தமானது. ஏனென்றால் ஆங்கிலத்தில் எதிரில் உள்ளவரை (second person) முதலிலும் நம்மை (first person) இறுதியிலும்தான் குறிப்பிட வேண்டும். இதுதான் நாகரிகமாகக் கருதப்படுகிறது. (சிலர் He, you and I என்று கூற வேண்டும் என்கிறார்கள். அது கொடுக்கப்பட்டுள்ள பதில்களில் இல்லை). எப்படியும் I என்பது இந்த மூன்றில் முதலாவதாகவோ இரண்டாவதாகவோ இடம் பெறக்கூடாது.

எனவே You, he and I will manage this project together என்பது சரி.



“ஒரே அர்த்தம் கொண்ட வார்த்தைகள் உள்ள வாக்கியத்துக்கு வெவ்வேறு பொருள் இருக்குமா?”

மேலே உள்ள கேள்வியை எந்த அர்த்தத்தில் வாசக நண்பர் கேட்கிறார் என்பது முழுமையாக விளங்கவில்லை. என்றாலும் நான் விளங்கிக்கொண்ட கோணத்தில் விளக்குகிறேன்.

பேசும்போது வெவ்வேறு வார்த்தைகளுக்குக் கொடுக்கும் அழுத்தத்தின் மூலம் ஒரே வாக்கியத்துக்குப் பல அர்த்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

I cannot talk there.

மேலே உள்ள எளிய வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் வெவ்வேறு பொருளை விளங்க வைக்க முடியும்.

‘I’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து I cannot talk there என்று கூறினால் “என்னால் அங்குப் பேச முடியாது. ஆனால் வேறு சிலரால் பேச முடியும்” என்று அர்த்தமாகிறது.

‘Cannot’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து I CANNOT talk there என்று கூறினால் “நான் அங்குப் பேசுவது என்பது முழுவதும் இயலாத காரியம்” என்று அர்த்தமாகிறது.

‘Talk’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து I cannot TALK there என்று கூறினால் “என்னால் அங்குப் பேசத்தான் முடியாது. ஆனால் எழுதுவது, சாப்பிடுவது போன்ற பிற விஷயங்களைச் செய்ய முடியும்” என்று அர்த்தமாகிறது.

‘There’ என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து I cannot talk THERE என்று கூறினால் “என்னால் அங்குதான் பேச முடியாது. வேறு எங்கு வேண்டுமானாலும் பேச முடியும்” என்று அர்த்தமாகிறது.

INSIST PERSIST

மேலே உள்ள இரண்டு வார்த்தைகளுக்கும் என்ன வித்தியாசம்?

Insist என்றால் ஒன்றைக் கட்டாயப்படுத்துவது. ‘நீ மறுத்தாலும் அதை நீ செய்தே ஆக வேண்டும் என நான் நிர்ப்பந்திப்பேன்’ என்கிற தொனி கொண்ட வார்த்தை இது. I insist that you come என்றால் நீ வந்தே ஆக வேண்டும் என்று பொருள்.

Persist என்றால் ஒரு கருத்துக்கோ, செயலுக்கோ எதிர்ப்பு வந்தாலும் அதைத் தொடர்வது என்ற அர்த்தம். கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒன்றைத் தொடர்வது. We are persisting with this project in spite of opinions to the contrary.

Insist என்பதை அடுத்துப் பொதுவாக ‘on’ அல்லது ‘that’ ஆகியவை இடம் பெறும். Persist என்ற வார்த்தையைத் தொடர்ந்து ‘with’ அல்லது ‘in’ இடம்பெறும்.

சிப்ஸ்

# Circuit என்பது என்ன?

முழுமையான, மூடப்பட்ட ஒரு வழித்தடம். இதில் தொடர்ந்து பயணம் செய்தால் கிளம்பிய இடத்துக்கே வந்து சேரும்.

# Nod என்றால்?

தலையசைத்தல் (பெரும்பாலும் ஒத்துக்கொள்ளும் விதத்தில்)

# ஒருவர் பெயருக்குப் பின்னால் Junior என்பதன் சுருக்கமாக Jr. என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்?

அவர் அப்பாவுக்கும் அதே பெயர். அவர் அப்பா உயிரோடு இருக்கிறார்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x