Last Updated : 14 Mar, 2017 10:36 AM

 

Published : 14 Mar 2017 10:36 AM
Last Updated : 14 Mar 2017 10:36 AM

ஆங்கிலம் அறிவோமே - 151: ட்ரம்பு சீட்டு விளையாடுவாரோ!

கேட்டாரே ஒரு கேள்வி

ஆங்கில எழுத்துகளிலேயே எந்த எழுத்துக்கு மிக அதிகமான அர்த்தங்கள் உண்டு?

********

Neuter gender nouns என்றால் என்ன?

ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாதவற்றைக் குறிக்க Neuter gender nouns பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் உயிரற்ற பொருட்களைக் குறிக்க இவற்றைப் பயன்படுத்துகிறோம். Tree, pencil, book, mountain போன்றவற்றை he, she என்று குறிப்பிடாமல் it என்று குறிப்பிடுகிறோம்.

ஆனால் சில சமயம் மேற்படி விதிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

நாடுகள், கப்பல்கள், கார்கள் போன்றவை பெண் இனமாகக் கருதப்பட்டு she என்றும் அவை குறிக்கப்படுகின்றன.

உறுதிமிக்கதாக எண்ணப்படுகிற சில nouns, masculine gender ஆகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்: sun, summer, death, time போன்றவை ஆண் அம்சம் கொண்டவைகளாக கணிக்கப்படுகின்றன.

The death is cruel. He is as certain as tomorrow.

அழகும், மிருதுத் தன்மையும் கொண்ட சில ‘பொருள்களும்’ கூட feminine gender ஆகக் குறிக்கப்படுகின்றன. The earth is very patient. Her beauty is spoiled day-by-day.

********

கேட்டாரே ஒரு கேள்வியில் அந்தக் கேள்வி, “மிக அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து என்ன?’’ என்பதாக இருந்தால் அது ‘e’ என்ற எழுத்துதான் என்கிறது ஓர் ஆராய்ச்சி. அதே வித்தியாசமான பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படும் எழுத்து என்றால் எனது வாக்கு ‘x’ க்குத்தான்.

அடையாளம் தெரியாத ஒன்றை அல்லது ஒருவரை X என்போம். ‘கொலையாளி Mr.X இந்த வழியாகத்தான் வந்திருக்க வேண்டும்’.

கணிதத்தில் அல்ஜீப்ரா பிரிவில் X இன்றியமையாதது.

X என்பது படிப்பறிவில்லாத என்ற பொருளிலும் சில சமயம் பயன்படுகிறது. Put your X here என்றால் உன் கைநாட்டை இங்கு வை என்று பொருள்.

தவறு என்பதைக் குறிக்கவும் X பயன்படுகிறது. விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களுக்கு இது நன்றாகவேத் தெரியும்.

கிறிஸ்தவத்துக்கான அடையாளக் குறியீடாகவும் X பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை கொஞ்சம் சிலுவை போலவும் தோற்றமளிப்பதால் இப்படி பயன்படுத்துகிறார்களோ என்னவோ!

ஒரு கடிதத்தின் கீழ்ப் பகுதியில் X என்று குறிப்பிட்டால் அதற்கு ‘முத்தங்கள்’ என்று பொருள். ஒரு வரைபடத்தில் (map) குறிப்பிட்ட இடங்களைக் குறியிட X என்ற எழுத்து பயன்படுகிறது.

X என்பது பெருக்கலின் குறியீடு என்பது அனைவருக்கும் தெரியும்.

சதுரங்க விளையாட்டில் X என்பது ஒரு காயை நீக்குவதற்குப் பயன்படுகிறது. RxP என்றால் யானை (Rook) சிப்பாயை (Pawn) வீழ்த்திவிட்டது என்று பொருள்.

இரு வேறு தாவரக் குடும்பங்களிலிருந்து இணைத்து உருவாக்கப்பட்ட புதிய வகைத் தாவரம் என்றால் அதைக் குறிக்க அந்த இரு தாவரப் பெயர்களுக்கு நடுவே X என்ற குறியீட்டைப் பயன்படுத்துவார்கள்.

மரபியலில் X முக்கியப் பங்கு வகிக்கிறது. (X chromosome, Y chromosome).

ரோமானிய எண்களில் V என்பது ஐந்தைக் குறிப்பதுபோல X என்பது பத்தைக் குறிக்கிறது.

இன்னும் யோசித்தால் இன்னும்கூடப் பல வித பயன்பாடுகள் X-க்கு இருக்கக் கூடும்.

********

Trump என்றால் சீட்டு விளையாட்டு வகைதானே? அதைப்போய் அமெரிக்க அதிபருக்குப் பெயராக வைத்திருக்கிறார்களே என வியக்கிறார் ஒரு வாசகர். நண்பரே, அமெரிக்க அதிபருக்கு அந்தப் பெயரை வைக்கவில்லை. அந்தப் பெயர் கொண்டவர் அமெரிக்க அதிபர் ஆகியிருக்கிறார்! Trump card என்பதற்கு வேறொரு பயன்பாடும் உண்டு.

வழக்கறிஞர் ஒருவர் எவ்வளவுதான் மடக்கி, மடக்கிக் கேட்டாலும் குற்றவாளி தொடர்ந்து பொய் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இறுதியில் வழக்கறிஞர் புன்னகையுடன் “Now I shall play my trump card’’ என்று ஒரு சி.டி.யை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். அந்தக் குறுந்தகட்டில் அந்தக் குற்றவாளிதான் அந்தக் குற்றங்களைச் செய்ததாக யாரிடமாவது ஒத்துக்கொள்ளும் உரையாடல் இருக்கலாம். அதாவது வியப்பூட்டும் வகையில் ஒருவர் தன்னிடமுள்ள ஆதாரத்தையோ, யூகத்தையோ வெளியிடும்போது அது ‘Trump Card” என்று கருதப்படுகிறது

********

Skipping என்றால் உடற்பயிற்சி. அந்த வார்த்தையின் அர்த்தத்துக்கும் அந்த உடற்பயிற்சிக்கும் என்ன தொடர்பு?

I skipped out of city என்றால் நகரத்தைவிட்டு வேகமாக வெளியேறினேன் என்று பொருள். தலைமறைவாவதையும் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.

இரு கைகளாலும் கயிற்றின் இரு முனைகளையும் பற்றிக் கொண்டு ஒவ்வொரு காலையும் மாறி மாறித் தூக்கியபடி அந்தக் கயிற்றைக் கொண்டு நம் உடலுக்குச் செய்யும் உடற்பயிற்சியை skipping என்பார்கள். இரண்டுக்கும் நேரடித் தொடர்பில்லை.

********

ஒரு நாளிதழில் ‘Mores’ என்ற வார்த்தையைப் பார்த்து திகைத்த ஒரு வாசகர் அது அச்சுப்பிழைதானே என்று கேட்டிருக்கிறார்.

அந்த வார்த்தை எந்த விதத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியாமல் பதில்

கூற முடியவில்லை. ஆனால் mores என்று ஒரு வார்த்தை உண்டு.

அதிகப்படி என்ற அர்த்தத்தில் more என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.

Mores என்றால் காலங்காலமாக உள்ள பழக்கங்கள், மரபுகள். In keeping with the mores of ancient Tamil society, jallikattu is held every year.

********

போட்டியில் கேட்டுவிட்டால்?

Our Company uses a professional agency to recruit new _____________

a)employer

b)employee

c)employees

d)employers

e)trainer

ஒரு நிறுவனம் ஊழியரைத்தான் தேர்வு செய்யுமே தவிர, எஜமானர்களை அல்ல. எனவே employer, employers ஆகிய வார்த்தைகள் இங்கு பொருந்தவில்லை.

Employee, trainer ஆகியவை ஒருமை வார்த்தைகள். இவை இடம் பெற்றிருக்க வேண்டும் என்றால் வாக்கியத்தின் இறுதிப் பகுதி ‘a new ________’ என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் ‘a’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

ஆக மீதமிருக்கும் employees என்ற வார்த்தை கோடிட்ட இடத்தில் சரியாகப் பொருந்துகிறது.

Our Company uses a professional agency to recruit new employees.

சிப்ஸ்

# Gift of the gab என்றால்?

நாவன்மை. பேச்சுத் திறமை.

# He is burning a candle என்பது சரியா?

தவறு. He is lighting a candle. The candle is burning (உடனே “அவன் ஒரு தியாகி என்பதைக் குறிக்க He is a burning candle எனலாமா?’’ என்று கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது).

# மீசையைக் குறிக்கும் Moustache என்ற வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும்?

பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் முஸ்டாஷ். அமெரிக்க ஆங்கிலத்தில் மஸ்டாஷ்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x