Last Updated : 07 Mar, 2017 10:10 AM

 

Published : 07 Mar 2017 10:10 AM
Last Updated : 07 Mar 2017 10:10 AM

ஆங்கிலம் அறிவோமே - 150: எல்லாம் பயமயமா!

கேட்டாரே ஒரு கேள்வி

“Phobia என்றால் பெரும்பயம் என்று தெரியும். மாமியாரைக் கண்டு phobia, உறவினர்களைப் பார்த்தாலே phobia என்பதற்கெல்லாம் ஆங்கில வார்த்தைகள் உண்டா?”



“ஒரு singular subject மற்றும் ஒரு plural subject ஆகியவற்றை either / or மூலம் இணைத்தால் plural verb-தான் வரவேண்டும் என்கிறார் என் ஆசிரியர். ஆனால் அப்படி எழுதினால் அது தவறுபோலத் தோன்றுகிறதே” எனச் சொல்கிறார் ஒரு வாசகர். தனது வாதத்துக்கு வலு சேர்க்கும்படி ஒரு வாக்கியத்தையும் கொடுத்திருக்கிறார்.

Neither others nor John are available.

நியாயம்தான். மேற்படி வாக்கியம் நெருடலாகத்தான் இருக்கிறது.

வாசகர் கூறியிருப்பது அடிப்படை விதி. இரண்டு singular subjects, either / or அல்லது neither /nor போன்றவற்றால் இணைக்கப்படும்போது singular verb-தான் வர வேண்டும். அதுவும் இரண்டு subjects-களில் எது இரண்டாவது வருகிறதோ அதற்குத் தகுந்தாற்போல்தான் அந்த singular verb இருக்க வேண்டும்.

My aunt or my uncle is (are அல்ல) arriving by train today.

Neither she nor I am (is அல்ல) going to the festival.

ஒரு singular subject மற்றும் ஒரு plural subject ஆகியவற்றை either / or மூலம் இணைத்தால் plural verbதான் வரவேண்டும்.

வாசகர் கொடுத்த வாக்கியத்தை மாற்றிப் போட்டால் இலக்கணமும் கெடாது, நெருடலும் இருக்காது. Neither the others nor John are available என்பதற்குப் பதிலாக Neither John nor the others are available என்று எழுதலாமே.



“ஆங்கிலத்தில் எழுதும்போது எழுத்துப் பிழைகள் வருகின்றன. எப்படித் தவிர்க்கலாம்?” என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

தவறுகளைத் திருத்திக்கொள்வதன் மூலம்தான்! திருத்தப்பட்ட சரியான வார்த்தையைச் சில முறை எழுதிப் பார்க்கலாம்.

கணிசமானவர்கள் எழுத்து பிழை செய்யும் சில வார்த்தைகளைக் கீழே கொடுத்திருக்கிறோம்.

ஒவ்வொன்றிலும் முதல் வார்த்தை சரியான எழுத்துகளுடன் உள்ளதா அல்லது இரண்டாவது வார்த்தைதான் சரியா என்பதைக் கூறுங்கள். விடைகள் பின்னர்.

i) 1) separate 2) seperate

ii) 1) succesful 2) successful

iii) 1) truly 2) truely

iv) 1) unforseen 2) unforeseen

v) 1) wherever 2) whereever

vi) 1) calender 2) calendar



‘கேட்டாரே ஒரு கேள்வி’க்கு பதில் உண்டு. Pentheraphobia (பாந்திரஃபோபியா) என்றால் மாமியாருக்குப் பயப்படுவது என்று அர்த்தம்.

Penthera என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் மாமியார்.

Syngenesophobia (சின்ஜினசோபோபியா) என்றால் உறவினர்களை எண்ணிப் பெரும் பயம் என்று அர்த்தம்.



Missive என்பதற்கும், Missile என்பதற்கும் என்ன வேறுபாடு?

Missile என்றால் ஏவுகணை. Missive என்றால் கடிதம். கொஞ்சம் நீளமான அலுவலகம் தொடர்பான கடிதம் எனலாம். சிலரது கடிதமே ஏவுகணைபோல தாக்கக்கூடும் என்பது வேறு விஷயம்! Missive என்பதற்கு ஈடான வார்த்தையாக message என்பதைக் குறிப்பிடலாம். Geetha spent hours composing a romatic missive for Sudhakar.

முன்பு பட்டியலிட்ட வார்த்தைகளில் ஒற்றைப் படை கேள்விகளில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் முதல் வார்த்தை எழுத்துப் பிழையின்றிக் காணப்படுகிறது. இரட்டைப்படைக் கேள்விகளில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் இரண்டாவது வார்த்தை எழுத்துப் பிழையில்லாமல் காணப்படுகிறது.



Mess என்றால் என்ன அர்த்தம்?

ஒரு இடம் அசுத்தமாகவும், ஒழுங்கில்லாமலும் காணப்படுகிறது என்றால் mess என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு.

The children made a mess in the kitchen.

The economy of the country is in a terrible mess.

ராணுவ வீரர்களுக்கான உணவும் விளையாட்டு வசதிகளும் கொண்ட கட்டிடம் அல்லது அறையையும் Mess என்பார்கள். காலப்போக்கில் உணவு வழங்கும் எந்தக் கட்டிடத்தையும் இப்படிக் குறிப்பிடத் தொடங்கிவிட்டார்கள். “We can eat at the mess or cook our own food”



However என்றாலும் but என்றாலும் ஒரே அர்த்தம்தானா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் சில சமயம் இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தும்போது அது கொஞ்சம் அதிக அர்த்தம் கொண்டதாகவும், அழகாகவும் இருக்கும்.

He waited for an hour; but the visit was worth it.

He waited for an hour; however the visit was worth it.

இரண்டு வாக்கியங்களுக்கும் ‘ஒரு மணி நேரம் காத்திருந்தபோதிலும் அந்தக் காத்திருப்பு பயனுள்ளதாக இருந்தது’ என்று ஒரே அர்த்தத்தைத்தான் அளிக்கின்றன. கீழே உள்ள வாக்கியங்களும் அப்படித்தான்.

You can have fried food; but do not overeat it.

You can have fried food; however do not over eat it.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங் களைக் கவனியுங்கள். ‘எந்தக் கோணத்தில் இதைப் பார்த்தாலும் உங்களால் இதை விமர்சிக்க முடியாது’ என்ற பொருள் கொண்ட வாக்கியம்.

However you look at it, you cannot criticize that.

In whatever way என்ற பொருளில் however இங்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாக்கியத்தில் however என்ற வார்த்தையை நீக்கிவிட்டு but என்ற வார்த்தையை அங்குச் சேர்க்க முடியாது.

என்றாலும் பொதுவாக however என்ற வார்த்தைக்கு ஈடான வார்த்தைகளாக nonetheless, nevertheless, yet போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கீழே உள்ள பயன்பாடுகளைக் கவனியுங்கள்.

I cannot come for the picnic. However I will send my brother on my behalf.

I cannot come for the picnic. Furthermore I will not be able to attend the meeting also.

I cannot come for the picnic as of now. Nonetheless I will try.



போட்டியில் கேட்டுவிட்டால்?

The earth___________ on its axis.

a) Circulates

b) Rotates

c) Revolves

d) Circles

e) Sits

Axis என்றால் அச்சு. பூமி தன் அச்சை மையமாகக் கொண்டு தானே சுழல்கிறது என்பது வாக்கியத்தின் பொருள்.

அப்படியிருக்க sits என்ற வார்த்தை கோடிட்ட இடத்தில் பொருத்தமாக அமையவில்லை. தன் அச்சில் பூமி உட்கார்ந்திருக்கவில்லை.

Circles, circulates ஆகிய வார்த்தைகளின் பொருள்களில் வேறுபாடு உண்டு. Circles என்றால் ஒன்றைச் சுற்றி வருவது. Circulates என்றால் ஒன்றைப் பலரிடமும் பரப்புவது. சுற்றறிக்கை என்று circular- ஐ கூறுவார்கள். A gossip circulates என்பதுண்டு. ஆக circulates என்பது இங்குப் பொருத்தமற்ற வார்த்தை.

Circles என்பதற்கும், revolves என்ற வார்த்தைக்கும் கிட்டத்தட்டப் பொருள் ஒன்றே.

ஆனால் வானியலைப் பொறுத்தவரை rotation என்பதற்கும், revolution என்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு பொருள் தன் மைய அச்சை மையமாகக் கொண்டு தன்னைத்தானே சுற்றிக் கொள்வது revolution. வேறொரு பொருளை அது சுற்றி வருவது rotation. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வது revolving. பூமி அப்படியே சூரியனைச் சுற்றி வருவது rotating. The fan revolved slowly எனலாம். The wheel rotated around the hut எனலாம். என்றாலும் வானியல், கணிதம் ஆகியவற்றைத் தவிர பிறவற்றில் revolve / rotate ஆகிய வார்த்தைகளக்கிடையே வேறுபாடு காணப்படுவதில்லை.

ஆக, The earth rotates on its axis என்பதே சரியான வாக்கியம்.

சிப்ஸ்

# கத்தரிக்கோலால் ஒரு தாளை வெட்டினால் அதை tearing என்று சொல்லாமா?

கையால் கிழித்தால் tearing. கத்தரிக்கோலால் என்றால் cutting.

# You do not have to speak loudly in the hospital என்ற அறிவிப்பு சரியா?

தப்பு. மருத்துவமனையில் நீங்கள் உரத்துதான் பேச வேண்டும் என்பதில்லை என்றால் என்ன அர்த்தம்? உரத்தும் பேசலாம் என்றாகிறதே! You must not speak loudly in the hospital என்பதுதான் சரி.

# He is restricted to wheelchair என்பது சரியா? He is confined to wheelchair என்பதுதான் சரி.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x