Last Updated : 14 Feb, 2017 11:28 AM

 

Published : 14 Feb 2017 11:28 AM
Last Updated : 14 Feb 2017 11:28 AM

ஆங்கிலம் அறிவோமே - 147: சும்மா கரடி விடுறாங்களோ!

கேட்டாரே ஒரு கேள்வி

நாம் Human race என்றால், ஜெயித்துக் கொண்டிருப்பது யார்?



இரு வாரங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வெளிவந்த ஒரு புகைப்படத்துக்குக் கீழே ‘Pursuit of happyness’ என்று பிரசுரமானது. Happiness என்பதற்குப் பதிலாக ‘Happyness’ என்று தவறாகப் பிரசுரமாகிவிட்டதாகப் பல வாசகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு வார்த்தையாக happiness என்பதுதான் சரி என்றாலும் படத்தின் பெயரில் இந்த வார்த்தையை happyness என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு வாசகர் கூடுதலாக ஒரு விமர்சனம் செய்திருக்கிறார். அந்த வாக்கியத்தை அப்படியே தருகிறோம். இதைப் படித்தால் அந்த வாசகருக்கே புன்னகை தோன்றும். “There is no excuse for incorect spelling”.

இப்படி ஓர் ஆலோசனையைக் கூறும்போதே, அந்த ஆலோசனையை மீறும்படியாக ஒரு விஷயம் அதே வாக்கியத்தில் இடம் பெறக்கூடும். இரண்டு எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன.

1. A verb have to agree with its subjects.

2. Avoid using the same word over and over and over again.

இதுபோன்ற தனக்குத் தானே முரண்படும் வேடிக்கையான வாக்கியங்களை வாசகர்கள் உருவாக்கி அனுப்பலாமே. நான்கு நாட்களுக்குள் அனுப்புங்கள். உங்கள் பெயர் மற்றும் ஊரை மறக்காமல் குறிப்பிடுங்கள்.

Couchette என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை ‘ரயி லில் மூன்றாவது வகுப்பில்’ என்று தொடங்கியிருந்தேன். “ரயிலில் இப்போது மூன்றாவது வகுப்பு ஏது?” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் ஒரு வாசகர். உண்மைதான். இரண்டாம் வகுப்பில் என்று மாற்றிப் படித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.



Statistics என்றால் அது எந்தப் புள்ளிவிவரத்தையும் குறிக்குமா அல்லது உண்மையான புள்ளிவிவரத்தை மட்டுமா?

ஆகப் பொய்யான புள்ளிவிவரம் உண்டு என்பதையும் மேலே உள்ள கேள்வியைக் கேட்ட வாசகர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஓர் அறிஞர் புள்ளிவிவரங்கள் குறித்துக் கூறியது இது. “There are three types of lies lies, damn lies and statistics”. இத்தாலிய மொழியில் அரசியல்வாதி அல்லது அரசியல் ஞானியைக் குறிக்க statista என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அரசியல்வாதியின் புள்ளிவிவரங்களில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.



“Let me remind you not only of your duty but also your promise’’. இது சரியா?

Let me remind you என்பது பொதுவான வார்த்தை. Your duty, your promise ஆகிய இரண்டும் வாக்கியக் கட்டமைப்பின்படி ஒரே மாதிரி அமைக்கப்பட வேண்டும்.

உங்கள் வாக்கியத்தில் not only-க்குப் பிறகு of என்ற வார்த்தை இடம்பெறுகிறது. ஆனால் but also-விற்குப் பிறகு of இல்லை. இது தவறு. ‘Let me remind you not only of your duty but also of your promise’ என்று இருந்தால் சரியானதாக இருக்கும்.

அல்லது of என்பதை not only என்பதற்கு முன்பாகக் கொண்டு வந்துவிட்டால், not only, but also ஆகிய இரண்டுக்கும் பொருந்திவிடும். அதாவது Let me remind you of not only your duty but also your promise என்பது சரி.



கேட்டாரே ஒரு கேள்விக்கான விடை இது.

Human race என்றால் மனிதர்களுக்கிடையே நடக்கும் போட்டியல்ல. மனித இனம் என்றுதான் பொருள்.

Race என்பது உயிரினங்களிலுள்ள ஒவ்வொரு பெரும் பிரிவையும் குறிக்கும். Human race என்பதுபோல. Race birds என்றும் உண்டு.

Tall claim என்றால் அது பொய்யானதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது ஒரு வாசகருக்கு.

Tall claim என்பதை over statement எனலாம். A tall story என்பதும் இதே மாதிரிதான். நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கும் ஒரு வாக்கியத்தைத்தான் a tall story என்பார்கள். Tall claim அல்லது tall story என்பது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது பொய்யாகவும் இருக்கலாம். ஆனால், அதைக் கேட்கும்போது உண்மையல்ல என்று தோன்றவே வாய்ப்பு அதிகம்.



Compared to, compared with என்று இரண்டு விதமாகவும் பயன்படுத்துகிறார்களே, எது சரி?

ஒரே வகையில் அடங்கக்கூடிய இரண்டு விஷயங்களையோ, இரு நபர்களையோ ஒப்பிடும்போது compared with என்பதைப் பயன்படுத்த வேண்டும். Tagore is compared with Bharathiyar. Gandhiji is compared with Nelson Mandela. My salary is compared with your salary.

ஒரே தளத்தில் இல்லாத இரண்டை ஒப்பிடப்படும்போது compared to என்பதைப் பயன்படுத்துகிறார்கள். Life is compared to a bubble.



போட்டியில் கேட்டுவிட்டால்?

Bears used to be very ________ in this part of the country, but nobody has seen one for ten years.

a) Strong

b) Sparse

c) Widespread

d) Rare

e) sightseeing

வாக்கியத்தின் பின்பகுதி ‘ஆனால் கடந்த பத்து வருடங்களில் யாரும் அவற்றில் ஒன்றைக்கூடப் பார்க்கவில்லை’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

அப்படியானால் வாக்கியத்தின் முன்பகுதிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

a) ஒரு காலத்தில் நாட்டின் இந்தப் பகுதியில் நிறையக் கரடிகள் இருந்தன.

b) ஒரு காலத்தில் நாட்டின் இந்தப் பகுதியில் கரடிகள் மிகக் குறைவாகவே இருந்தன.

இந்த இரண்டில் எது சரி? வாக்கியத்தின் பின் பகுதி, ஆனால் என்று தொடங்குகிறது. அப்படிப் பார்க்கும்போது முதல் வாக்கியம்தான் சரியாகப் பொருந்துகிறது.

ஒரு காலத்தில் நாட்டின் இந்தப் பகுதியில் நிறைய கரடிகள் இருந்தன. ஆனால் கடந்த 10 வருடங்களில் யாரும் ஒரு கரடியைக்கூடப் பார்க்கவில்லை என்று ஆகிறது.

Strong என்றால் உறுதியான. கரடிகள் பலத்தோடு இருப்பதற்கும், பல வருடங்களாக அவற்றில் ஒன்றுகூடக் கண்ணில் தென்படாமல் இருப்பதற்கும் தொடர்பு இல்லை.

Sparse அல்லது rare என்றால் ‘அரிதாக’. கரடிகள் அரிதாகவும் இருந்து அதிகம் காணப்படவில்லை என்றால் நடுவில் ‘ஆனால்’ என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.

கரடிகள் சுற்றிப் பார்ப்பது (sight seeing) என்பது சரியல்ல. நாம் வேண்டுமானால் கரடிகள் காணப்படும் வனத்துக்கு sight seeing-குக்காகச் செல்லலாம். மீதமுள்ள வார்த்தையான பரவலான என்ற அர்த்தம் கொண்ட widespread கோடிட்ட இடத்தில் பொருந்துகிறது.

Bears used to be very widespread in this part of the country, but nobody has seen one for ten years என்பதுதான் சரி.

சிப்ஸ்

# Nomad என்றால்?

நிரந்தரமாக எங்கும் வசிக்காமல் இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருப்பவர்கள்.

# How much rupees that you have? How many rupees that you have? இரண்டில் எது சரி?

How many rupees do you have? அல்லது How much amount do you have என்பதே சரி.

# Paradigm என்றால்?

பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்ட கண்ணோட்டம்`.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x