Last Updated : 01 Nov, 2016 11:36 AM

 

Published : 01 Nov 2016 11:36 AM
Last Updated : 01 Nov 2016 11:36 AM

ஆங்கிலம் அறிவோமே - 132: வெட்டி அரட்டையை விடுங்க

கேட்டாரே ஒரு கேள்வி,

‘செருப்பு பிய்ந்துவிட்டது என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வது?’ என்றும் ‘இந்த இரண்டு வாக்கியங்களில் எது சரி?’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். அவர் அளித்துள்ள இரண்டு வாக்கியங்கள். Raman has expired yesterday மற்றும் Raman expired yesterday.

Expired என்பது past tense verb. Has expired என்பது verb-ன் present perfect வடிவம்.

Present perfect என்பது past tense-க்கும், present tense-க்கும் இடைப்பட்டது.

ஒரு வாரத்துக்கு முன்பே வந்து சேர்ந்துவிட்ட ஒருவரை He arrived என்றும், கொஞ்ச நேரத்துக்கு முன்னதாக வந்து சேர்ந்த ஒருவரை He has arrived என்றும் குறிப்பிடலாம்.

தெருவில் போகிறீர்கள். அங்கு விபத்து நடந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. “Look. There has been an accident’’ என்று நீங்கள் கூறலாம். மாறாக நேற்று நடைபெற்ற ஒரு விபத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது கடந்த காலத்தைப் பயன்படுத்துவதுதான் சரி. There was an accident last night (There has been an accident last night அல்ல). இந்தக் கோணத்தில் பார்க்கும்போது Raman expired yesterday என்பது பொருத்தமானது.



Cheap at half the price என்பது சரியான பயன்பாடா?

தவறு. Cheap at twice the price என்பதுதான் சரி என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.

அதாவது ஒரு பொருளின் விலை இப்போது இருப்பதைப் போல இரண்டு மடங்கு இருந்தால்கூட அது குறைவான விலைதான் என்பதைத் தெரிவிக்கிறோம்.

இந்த விதத்தில் பார்க்கும்போது cheap at half the price என்று கூறுவது தவறு. என்றாலும் half the price என்பதை cheapness என்பதோடு எளிதில் இணைத்துப் பார்க்க முடிவதால் அப்படிக் கூறுவதை சரி என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.



இந்தப் பகுதியில் காணப்படும் ‘கேட்டாரே ஒரு கேள்வி’க்கான விடையை யோசித்தீர்களா? “My Chappal has worn out” என்று ஒருவர் என்னிடம் குறிப்பிட்டார். அது சரியல்ல. Worn என்பதன் அடிப்படை வார்த்தை wear (wear and tear என்பது நினைவுக்கு வருகிறதா?). அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் பாதிப்பு உண்டாவதை இப்படிக் குறிப்பிடலாம். அதாவது செருப்பு தேய்ந்துவிட்டது. ஆனால் செருப்பு பிய்ந்துவிட்டது என்பதை?

Chappal என்பது நேரடியான ஆங்கில வார்த்தை அல்ல. இந்திய மொழியான இந்தியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வார்த்தை அது.

“The strap has come off” என்பது பொருத்தமான வாக்கியமாக இருக்கும் என்று படுகிறது. கற்றறிந்த வாசகர் பெருமக்கள் தங்கள் ஆலோசனையை அளிக்கலாம்.

Nitty gritty என்றால் என்ன?

ஒரு சூழல் அல்லது பிரச்சினை தொடர்புள்ள மிக முக்கியமான பகுதிகள்.

Let us get down to the nitty gritty of finding a job.

Nitty gritty என்பதற்குச் சமமான வார்த்தைகளாக basics, core, crux போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

Let us skip the chitchat and get down to the nitty gritty என்றால் வெட்டி அரட்டையை விட்டுவிட்டு முக்கியமான விஷயங்களுக்குச் செல்வோம் என்று அர்த்தம்.



Predicate தெரியும். Adjective தெரியும். ஆனால் இரண்டையும் இணைத்து Predicate Adjective என்று எங்கோ படித்தேன். அது என்ன?

இப்படிக் கேட்டிருக்கும் வாசகருக்குத் தெரிந்திருக்கும் விஷயங்களையும் சுருக்கமாகப் பார்த்துவிட்டு Predicate Adjective-க்கு வருவோமே.

ஒரு வாக்கியத்தை subject, predicate என்று இரண்டாகப் பிரிக்கலாம். எதைப் பற்றிச் சொல்கிறோமோ அது subject. மீதிப் பகுதி predicate என்று தோராயமாகச் சொல்லலாம். I have three apples என்பதில் I என்பது subject. Have three apples என்பது predicate. The dress is black என்பதில் The dress என்பது subject. Is black என்பது predicate.

Predicates-ல் பிரிவுகள் உண்டு.

பொதுவாக adjective என்பது noun-க்கு முன்னால்தான் வரும். He is a nice person. She is a skilled dancer. They are good people. இவற்றில் nice, skilled, good ஆகியவை adjectives. அவற்றை ஒட்டியோ, அவற்றுக்குப் பின்னாலோ noun இடம்பெறுகிறது.

இப்போது All are well என்ற வாக்கியத்தைப் பார்ப்போம். இதில் all என்பது subject. Are என்பது linking verb. Well என்பது adjective (அல்லது ஒரு noun-ஐ விளக்கும் வார்த்தை).

இதில் well எனப்படும் adjective, all என்ற subject-க்கு முன்னால் வரவில்லை. ஒரு adjective, linking verb-க்கு பின்னால் குறிப்பிடப்பட்டு, தொடர்புள்ள subject குறித்து விளக்கினால் அது predicate adjective. அதாவது well என்கிற adjective, are என்ற linking verb-க்குப் பின்னால் வருகிறது. அதே சமயம் all என்கிற சப்ஜெக்ட்டை அது விவரிக்கிறது. எனவே well என்பது இங்கே predicate adjective ஆகப் பயன்படுத்தப்படுகிறது.

The student is mischievous என்பதில் is என்பது linking verb. Mischievous என்பது predicate adjective. ஒரு வாக்கியத்தின் subject தொடர்பாக ஒரு தகவலைக் கூறுகிறது predicate adjective.



“Burkini என்ற வார்த்தையை ஒரு செய்தித் தலைப்பில் படித்தேன். அது உடை தொடர்பான வார்த்தை என்பது புரிந்தது. Bikini என்பதைத்தான் தவறாக அச்சிட்டுவிட்டார்களா? அல்லது burkini என்று ஓர் உடை உண்டா?’’.

நண்பரே, ஒலிம்பிக்ஸ் செய்திகளில் நீங்கள் இந்த வார்த்தையைப் படித்திருக்க வாய்ப்பு உண்டு. பர்க்கினி என்பது ஒரு வகை நீச்சல் உடை. பெண்களுக்கான இந்த உடையை வடிவமைத்தவர் ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பெண்மணி. முகத்தைத் தவிர உடல் முழுவதையும் மறைக்கும் உடை இது. என்றாலும் மிகவும் லேசானது. நீச்சல் அடிக்கும்போது இதை அணிந்துகொள்வது வசதி.

மதக் கோட்பாடுகள் தடுப்பதாலோ, தனது உடலின் பெரும் பகுதியை வெளிக்காட்ட விருப்பமில்லாததாலோ சில பெண்கள் பர்க்கினியை அணிகிறார்கள்.

இஸ்லாமியப் பெண்கள் தங்கள் உடலை மறைக்கும் உடையை பர்க்கா என்று அழைப்பதுண்டு. பிகினி என்பது நீச்சலின்போது பெண்கள் அணிந்துகொள்ளும் மிகச் சிறிய உடை. பர்க்காவும் பிகினியும் இணைந்து பர்க்கினி என்ற பெயர் உருவாகியிருக்க வாய்ப்பு உண்டு.



போட்டியில் கேட்டு விட்டால்

We ordered our food from a ________

(a) hotel

(b) motel

(c) restaurant

(d) spa

Spa என்பது குளியல் தொடர்பானது. உடல் நலத்துக்கு உகந்த குளியல் வசதிகள் உள்ள இடம்.

Motel என்பது சாலையோரத் தங்குமிடம். நீண்ட தூரம் கார்களில் பயணம் செய்பவர்கள் இடையில் தங்கள் காரை நிறுத்திவிட்டு சிறிது நேரம் இளைப் பாறுவதற்காகக் கட்டப் பட்டிருக்கும் இடம்.

நம்மில் பலரும் Hotel என்றாலே சிற்றுண்டி அல்லது உணவு சாப்பிடும் இடம் என்றே பேச்சுவாக்கில் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால், Hotel என்பது கட்டணத்துக்குத் தங்கும் இடத்தைத்தான் குறிக்கிறது முக்கியமாக பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிடம். (Five Star Hotel என்று குறிப்பிடும்போது அது சிறப்பான உணவுவகைகளை வழங்கும் உணவகமாக மட்டும் இருந்துவிட முடியாது. அது பல வசதிகள் பொருந்திய தங்குமிடத்தைக் குறிக்கிறது).

Restaurant என்பதுதான் நாம் பேச்சு வழக்கில் பெரும்பாலும் குறிக்கும் Hotel. அதாவது உணவகம். எனவே restaurant என்ற விடைதான் சரியானது.

Restaurant என்பதை ‘ரெஸ்ட்ரான்ட்’ என்றுதான் உச்சரிக்க வேண்டும்.

சிப்ஸ்

# A long list of problems is needed என்பது சரியா? அல்லது A long list of problems are needed என்பது சரியா?

List என்பது singular. (தேவைப்படுவது list தானே தவிர problems அல்ல). எனவே verb-ம் singular ஆகத்தான் இருக்க வேண்டும். ஆக A long list of problems is needed என்பதே சரி.

# Father என்பதன் opposite mother அல்ல என்கிறார் ஆசிரியர். குழப்பமாக இருக்கிறது.

Father என்பதன் female gender mother.

# அட்டைப் பெட்டிகளின் மேல் Fragile என்ற வார்த்தையைப் பார்த்திருக்கிறேன் அதற்கு என்ன அர்த்தம்?

எளிதில் உடைந்துவிடக்கூடிய, எளிதில் பாதிப்பு ஏற்படக்கூடிய என்ற அர்த்தம். அட்டைப் பெட்டி வார்த்தைக்கான உள்ளர்த்தம் “கவனமாகக் கையாளுங்கள்” என்பதுதான்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x