Last Updated : 18 Oct, 2016 11:16 AM

 

Published : 18 Oct 2016 11:16 AM
Last Updated : 18 Oct 2016 11:16 AM

ஆங்கிலம் அறிவோமே - 130: சுற்றி வளைத்துப் பேசலாமா?

அவ்வப்போது ஆங்கில நாளிதழ்களின் தலைப்புகளில் Impasse என்கிற வார்த்தையைப் பார்க்கிறேன். இதற்கு என்ன அர்த்தம்?

இது ஒரு வாசகரின் கேள்வி. நண்பரே, முன்பு இதே தொடரில் வேறொரு பகுதியில் Mexican standoff பற்றிக் குறிப்பிடும்போது அதற்கு இணையான deadlock என்பதையும் சொன்னோம். அதே போன்ற ஒரு நிலைதான் impasse என்பதிலும் நிலவுகிறது. அதாவது, எந்த முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு என்று கூற முடியாத நிலை. Stalemate, checkmate, dead end என்றும் இதைக் கூறுவதுண்டு.



Flat adverb என்கிறார்களே அது என்ன என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

ஒரு verb-ஐ விளக்கும் வார்த்தை adverb. ஒரு adjective போலத் தோற்றமளிப்பது flat adverb. சில எடுத்துக்காட்டுகள் high, hard, fast.

ஆனால் இவை adverbஆகப் பயன்படும்போது இவற்றோடு -ly என்பது சேர்க்கப்படவில்லை என்பதைக் கவனித்தீர்களா? இதுவே flat adverbsக்கான தனித்தன்மை. (பெரும்பாலான adverbs ly என்றுதான் முடியும்).

This car can go fast என்பதில் fast என்பது flat adverb.

சில adverbs ly சேர்ந்தும் சேர்க்கப்படாமலும் இரண்டு விதங்களிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. Go fast. Go fastly.



வட்டத்தின் சுற்றளவை circumference என்கிறோம். Circum என்று தொடங்கும் வேறு பல ஆங்கில வார்த்தைகளும் உண்டு. அப்படியானால், Circum என்பதற்குத் தனிப்பட்ட அர்த்தம் உண்டா?

Circum என்பது ஒரு தனி வார்த்தையாக அல்லாமல் முன்னொட்டாகவே (prefix) பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும், Circum என்றால் ‘சுற்றியுள்ள’ என்று அர்த்தம். அதாவது surrounding. இந்த விதத்தில் யோசித்துப் பாருங்கள்.

Circumference என்றால் (வட்டத்தின் சுற்றளவு).

Circumpolar என்றால் துருவத்தைச் சுற்றியுள்ள பகுதி. பூமியின் துருவப் பகுதிகளைக் குறிக்கவும் இதைப் பயன்படுத்துவதுண்டு.

Circumstance என்றால் (சூழ்ந்துள்ள!) சூழல்.

Circumjacent என்றால் சுற்றிலும் உள்ள என்று பொருள். The circumjacent parts of the eye.

Circumvolve என்றால் (வட்டமாக அல்லது கோளமான ஒன்றைத்) திருப்புதல்.

Circumfluent என்றால் சுற்றிப் பாயும் அல்லது சூழ்ந்திருக்கும் என்று அர்த்தம். Circumflous ocean.

Circumneutral என்ற வார்த்தை பொதுவாக மண் தொடர்பாகப் பயன் படுத்தப்படுகிறது. அதாவது அந்தப் பகுதியில் சூழ்ந்திருக்கும் மண் அமிலத் தன்மையோ, காரத் தன்மையோ இல்லாமல் இருக்கிறது என்று பொருள்.



காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட வாசகர் ஒருவர் கீழே உள்ள சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.

“கப்பலில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் தன் கணவர் இறந்ததாகக் குறிப்பிட்ட ஒரு பெண்மணி, உரியக் காப்பீட்டு தொகையைக் கோரினார். அந்த விண்ணப்பத்துடன் அவரது கணவரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவரின் சான்றிதழ் இணைக்கப்பட்டிருந்தது. அதில், In my opinion the death is due to ‘not inconsistent’ of gas leakage என்று குறிப்பிட்டிருந்தது. Consistent, inconsistent, not inconsistent இந்த மூன்றுக்குமிடையே உள்ள வேறுபாட்டை விளக்க முடியுமா?”

Consistent என்றால் காலப்போக்கில் ஒரே விதமாக இருப்பது அல்லது நடந்து கொள்வது என்று அர்த்தம். They were consistent in their reactions. He is the most consistent player என்றால் அவர் எப்போதுமே சீராக ஆடுவார் என்று அர்த்தம். Inconsistent என்பது அதற்கு எதிரானது. ஒரு பேட்ஸ்மேன் ஒரு இன்னிங்ஸில் செஞ்சுரியைத் தாண்டுவார், இன்னொன்றில் ஐந்து ரன்களுக்கு மேல் எடுக்க மாட்டார். இந்தப் போக்கு தொடர்ந்து, அவர் பெறவுள்ள ரன்களை யூகிக்கவே முடியாது என்றால் he is an inconsistent player எனலாம்.

Not inconsistent என்ற வார்த்தைகளைப் பெரும்பாலும் மருத்துவ அறிக்கைகளிலும், சட்டபூர்வமான ஆவணங்களிலும் காணலாம். சீராக, சீராக இல்லாத அகியவற்றை மீறி ‘சீராக இல்லை என்று கூற முடியாத’ என்பதை not inconsistent எனலாம்.

வாசகர் அளித்துள்ள எடுத்துக்காட்டில் அந்த மருத்துவர் ‘வாயுக் கசிவினால்தான் மரணம்’ என்று நேரடியாகக் கூறவில்லை. ஆனால் ‘வாயுக் கசிவினால் மரணம் நேரவில்லை என்று கூறிவிட முடியாது’ என்கிறார். அதாவது வாயு கசிவினால்தான் மரணம் உண்டாகியிருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றாலும் அப்படி நேர்ந்திருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு என்று அர்த்தம்.



சிப்ஸ்

# Brexit என்ற வார்த்தை நாளிதழ்களில் அடிக்கடி அடிபடுகிறது. இதன் பொருள்?

Britain’s exit என்ற வார்த்தைகளை இணைத்துத்தான் Brexit என்ற வார்த்தை உருவானது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியதை இது குறிக்கிறது.

# The girl is leaning over the wall / The girl is leaning at the wall / The girl is leaning on the wall. மூன்றில் எது சரி?

The girl is leaning against the wall என்பதே சரி.

# Row என்றால்?

வரிசை. சத்தமாக ஒரு சண்டை நடைபெற்றால் அதை row என்பதுண்டு. Row என்பதை verb ஆகப் பயன்படுத்தும்போது படகில் ஏறித் துடுப்பு போடுவதை உணர்த்துகிறது.

இப்படிக் கேட்டால் எப்படி?

The sun rises in _________.

a) east b) the east c) East d) the East

பொதுவாகத் திசைகளைக் குறிக்கும்போது அவற்றின் தொடக்கத்தை capital letter-ல் எழுதுவதில்லை. மாறாக east, southwest என்பதுபோல்தான் குறிப்பிடுகிறோம்.

# புதினங்களின் பெயர்களில் பிற வார்த்தைகளைப் போலத் திசையின் பெயர் கொண்ட வார்த்தையின் தொடக்க எழுத்தும் capital letterஆக இருக்கலாம். எடுத்துக்காட்டுகள் Every Day the Sun Rises in the East, The Sun Rises in the North.

# நாட்டின் பகுதிகளைக் குறிக்கும்போது அந்தத் திசையின் பெயர்களில் தொடக்க எழுத்தை Capital letter-ல் குறிப்பிடுகிறோம். (The East, The Eastern States என்பதுபோல).

சூரியன், நிலவு, பூமி ஆகியவற்றைக் குறிக்கும்போது அவற்றின் முன்னால் the என்பதைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆக The sun rises in the east என்பது சரி.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x