Last Updated : 04 Oct, 2016 10:58 AM

 

Published : 04 Oct 2016 10:58 AM
Last Updated : 04 Oct 2016 10:58 AM

ஆங்கிலம் அறிவோமே - 129: கிளிண்டனை எப்படி அழைப்பது?

வாசகர் ஒருவர், “Ladies and Gentlemen என்பது மேடைப் பேச்சுக்கு மட்டும்தானா அல்லது கடிதங்களிலும் அப்படி அழைக்கலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

கடிதங்களில் எப்படிப் பிறரை அழைக்கலாம் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

தனிப்பட்ட கடிதங்களில் உங்களுக்கு நெருக்கமானவரை எப்படி அழைத்துக் கடிதத்தைத் தொடங்கலாம் என்பது உங்களுடைய இஷ்டம். வணிகக் கடிதங்களில் அல்லது அலுவலகக் கடிதங்களில் பிறரை எப்படி address செய்வது என்பதை அறிந்து கொள்வோம்.

தனி நபராக இருந்தால் Dear Sir அல்லது Dear Madam. ஒரு நிறுவனத்துக்கு என்றால் Dear Sirs (என்ன காரணத் தாலோ Dear Sirs & Madams என்று கடிதத்தில் எழுதுவதில்லை).

பெயரைக் குறிப்பிட வேண்டுமென்றால்? எடுத்துக்காட்டாக ஆனந்த் என்பவருக்கு நீங்கள் பணி தொடர்பாக கடிதத்தை எழுதுகிறீர்கள் என்றால் Dear Mr. Anand என்று எழுத வேண்டும் (Dear Anand அல்லது My dear Anand என்பதெல்லாம் ‘வேலைக்கு’ ஆகாது). எனினும் அமெரிக்காவில் பணி தொடர்பான கடிதங்களில்கூட Dear Simen, Dear Clara என்று குறிப்பிடுவதைக் காண முடிகிறது. Ladies and Gentlemen என்றும் குறிப்பிடுகிறார்கள்.

Dear Mr. Anand என்பதற்குப் பிறகு கட்டாயமாக கால்புள்ளி தேவை (Dear Mr.Anand,). அமெரிக்க ஆங்கிலத்தில் முக்கால் புள்ளியைப் பயன்படுத்துகிறார்கள் (Dear Mr.Anand:).



அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை First Lady என்று குறிப்பிடுவார்கள். அவரது கணவரை எப்படிக் குறிப்பிடுவார்கள்?

இம்முறை ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதாலோ என்னவோ ஒரு வாசகருக்கு இது குறித்துக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இதுவரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர்கள் அனைவரும் ஆண்கள். அவர்களின் மனைவிகள் அந்தந்த காலகட்டத்தில் First Lady என்று அழைக்கப்பட்டார்கள். ஜனாதிபதியும், அவர் மனைவியையும் சேர்த்து அழைக்கும்போது First couple என்பார்கள்.

ஜனாதிபதி பெண்ணாக இருந்தால் அவர் கணவர் First Gentleman என்றுதான் குறிக்கப்படுவார்.

ஒருவேளை ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி என்றால் அவர் கணவர் பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர். எனவே அவர் Former President என்று குறிப்பிடப்படுவார்.



VICE - DEPUTY - ASSOCIATE - ASSISTANT

Vice என்பதற்கு ‘பாவம்’ என்றொரு பொருள் உண்டு. அதாவது, Virtue என்ற வார்த்தை உணர்த்தும் புண்ணியம் என்பதற்கு எதிரான பாவம். ஆனால் இங்கே நாம் மேலே குறிப்பிட்ட நான்கு similar வார்த்தைகளின் பொருள்களைத்தான் பார்க்கிறோம். Vice என்றால் அடுத்த அதிகாரம் கொண்டவர் என்று அர்த்தம். Vice-President என்றால் ஜனாதிபதிக்கு அடுத்து இவருக்குத்தான் அந்த அதிகாரம்.

Deputy என்றாலும் அதே அர்த்தம்தான். ஆனால், நடைமுறையில் “Vice’’கள் குறைந்த எண்ணிக்கையிலும் “Deputy’’கள் அதிக எண்ணிக்கையிலும் இருப்பதுண்டு. அதாவது பொதுவாக ஒரு நகரத்துக்கோ ஒரு நாட்டுக்கோ ஒரு Vice-Presidentதான். ஆனால், ஒரு அதிகாரியி ன் கீழ் பல Deputy Engineerகள் பணி செய்யலாம். Associate, Assistant ஆகியவை இந்த வரிசையில் மேலும் அதிகாரம் குறைந்த பதவிகள்.



“வாடிக்கையாளருக்கு அளிக்கப்பட்ட பொருள்களில் குறைபாடு நேர்ந்துவிட்டது. எப்படி மன்னிப்பு கோரலாம்? வெறும் sorry என்பது மட்டும் போதாது’’ என்று வருத்தப்பட்ட ஒரு வாசகருக்கு சில ஆலோசனைகள்:-

# We are embarrassed about the error. We will send you a fresh set promptly at no additional charge.

# Problems like this rarely occur. But this is in no way a consolation. I would like to meet you to review, make corrections and see how we can reconcile this problem and move forward.

# In your mail you requested five extra as compensation. We will gladly provide eight.



“Worth its weight in salt என்கிறார்களே, அப்படியானால் அது மதிப்புள்ள பொருளா? அல்லது மதிப்பற்ற பொருளா?’’ என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

மதிப்புள்ள பொருள்தான். ஒருகாலத்தில் உப்பு என்பது நாணயம்போலப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் Worth its weight in salt என்று சொல்லக் கூடாது. Worth its salt என்றுதான் குறிப்பிட வேண்டும்.

“ஆனால் worth its weight in gold என்கிறார்களே?’’ என்று நீங்கள் வியப்புக் கடலில் ஆழ்ந்தால் அது அப்படித்தான் என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்.



Ring என்றால் மோதிரம் என்பது உங்களுக்குத் தெரியும். இதே வார்த்தையை verb ஆகவும் பயன்படுத்த முடியும். You can ring a bird round its leg as a means of identification என்று கூறும்போது அந்தப் பறவையின் காலைச் சுற்றி ஒரு வளையத்தை மாட்டுகிறீர்கள் என்று பொருள்.

ஆனால் பறவையை wring செய்யக் கூடாது. Wring என்றால் முறுக்குதல். Wring a bird’s neck என்றால் பறவையின் கழுத்தை முறுக்குதல். துணியைப் பிழிதல் என்பதை wring என்ற வார்த்தையைக் கொண்டு பயன்படுத்துவதுண்டு.



ஒரு வார்த்தையைச் சுருக்கும்போது அந்த வார்த்தையின் தொடக்க எழுத்தை capitalலில் எழுத வேண்டுமா?

மூல வார்த்தையில் அந்த முதல் எழுத்து capitalலில் இருந்தால் மட்டும் சுருக்கத்தின் முதல் எழுத்தும் capitalலில் இருந்தால் போதும்.

January Jan.

Saturday Sat.

street st.

Private Limited Pvt. Ltd.,

private letters pvt. letters.

United Kingdom U.K.



‘’Semi colon என்ற நிறுத்தக் குறியின் பயன்பாடு இன்னமும் எனக்குப் பிடிபடவில்லை’’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Semi colon என்பதை கமாவுக்கும், முற்றுப்புள்ளிக்கும் இடைப்பட்டது என்று கொள்ளலாம். கீழே உள்ள எடுத்துக்காட்டுகளைப் படித்தால் புரிந்து விடும்.

This dog is a friendly type; it will not bite you.

I saw him at the beach; we became friends.



Graph என்றால்?

Graph என்றால் நமக்கு சின்னச்சின்ன கட்டங்களாக உள்ள தாள்தான் நினைவுக்கு வரும். ஆனால் graph என்பது ஒரு தகவல் அல்லது பேச்சை காட்சிரீதியாக வெளிப்படுத்தும் கருவி.

Graph என்பதன் அடிப்படைப் பொருள் எழுதுதல் என்பதுதான். கிரேக்கச் சொல்லான Graphe என்பதிலிருந்து உருவான வார்த்தை இது.

Epigraph என்றால் ஒரு கட்டிடம் அல்லது சிலையின்மீது பொறிக்கப்பட்டுள்ள ஒன்று. நாணயத்தின்மீது காணப்படும் இலச்சினை மற்றும் வார்த்தைகளையும்கூட epigraph என்பதுண்டு.

ஒரு புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அந்த அத்தியாயத்துக்குத் தொடர்பு இருக்கும்படி ஏதாவது பொன்மொழி கொடுக்கப்பட்டிருந்தால் அதையும்கூட epigraph என்பார்கள்.

மற்றபடி telegraph, cinematograph ஆகியவற்றின் பொருள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சிப்ஸ்

# Tiptoe என்றால் என்ன?

Toe என்றா ல் கால் விரல் (Big toe என்றால் கட்டைவிரல்). Walking on tiptoe என்றால் சத்தமின்றி மெதுவாக நடப்பது என்று பொருள்.

# Lapidist என்றால் செதுக்குபவர்தானே?

சிற்பத்தைச் செதுக்குபவர் Sculptor. Lapidist என்பவர் விலை உயர்ந்த கற்களை வெட்டிச் செதுக்குபவர்.

# அரசு அலுவலகக் கடிதப் பரிமாற்றத்தில் ‘anent’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இதற்கு என்னதான் அர்த்தம்?

இதற்கு அர்த்தமாக concerning அல்லது about என்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம்.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x