Last Updated : 02 Aug, 2016 11:08 AM

 

Published : 02 Aug 2016 11:08 AM
Last Updated : 02 Aug 2016 11:08 AM

ஆங்கிலம் அறிவோமே - 121: கலர்கலராம் ஆங்கிலமாம்!

தன் ​நாடகம் ஒன்றில் ‘Green-eyed monster’ என்கிற வார்த்தைகளை ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். யார் இந்த அரக்கன்? பொறாமைதான். My brother always used to get green with envy if my father brought something for me.

The grass is always greener on the other side என்றால் இக்கரைக்கு அக்கரைப் பச்சை.

Grey area என்றால் அதைப் பற்றிய ஒரு தெளிவு இல்லை என்ற அர்த்தம். அதாவது கறுப்பும் இல்லை, வெளுப்பும் இல்லை.

Seeing pink elephants என்றால் இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வது.

பணியாற்றும் நிறுவனத்​தில் Pink Slip கொடுத்தால் சந்தோஷப்படுவீர்களா?? அதிர்ச்சியடைவீர்களா? அது உங்கள் இஷ்டம். Pink slip என்றால் வேலை நீக்கம் என்று அர்த்தம்.

To be in the red என்றால் பணக் கஷ்டம் உண்டாகியிருக்கிறது. ப​ணக் கஷ்டத்திலிருந்து மீண்டுவிட்டால் out of the red.

Red herring என்பது அற்பமான அல்லது தேவையற்ற தகவல். முக்கியமானவற்றிலிருந்து நம்மைத் திசை திருப்பக் கூடியது. சில சமயம் துப்பறியும் கதைகளில் இந்த உத்தியை வேண்டுமென்றே பயன்படுத்துவார்கள். துப்பறியும் நாய்களைத் திசை திருப்புவதற்கு herring என்ற வகை மீன்களைப் பயன்படுத்துவதுண்டு.

யாரையாவது red handed ஆக​ நீங்கள் catch செய்து விட்டீர்கள் என்றால் கையும், களவுமாகப் பிடித்து விட்டீர்கள் என்று பொருள்.

Red letter day என்றால் ரத்தத்தில் தோய்ந்த தாள் அல்ல. அது ஒரு முக்கியமான நாள். அதாவது முக்கிய நிகழ்வு நடைபெற்ற நாள்.

Red tapism என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சிவப்பு நாடா. ஏகப்பட்ட சட்டங்கள், விதிமுறைகள் காரணமாகத் தாமதமாகும் அதிகாரிகளின் ராஜ்யம்.

‘I will go and paint the town red’ என்று உங்கள் மகன் கூறினால் ‘மொத்த நகரத்தையுமா? முடிகிற காரியமா?’ என்று மலைத்துவிட வேண்டாம். Paint the town red என்றால் வெளியில் சென்று உல்லாசமாகப் பொழுதைக் கழித்தல் (Partying) என்று அர்த்தம்.

Red carpet welcome என்றால் மரியாதையுடன்கூடிய உற்சாக வரவேற்பு. சிவப்பு கம்பள வரவேற்பு.

“அது ஒரு White elephant” என்றால் அது உங்களுக்குத் தேவை இல்லாத ஒன்று. ஆனால் அதற்காக நீங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கிறது என்று அர்த்தம்.

A white lie என்றால் ஆபத்தில்லாத பொய். பிறர் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டாம் என்பதற்காகக் கூறப்படும் பொய்.

“He is a blue eyed boy” என்று உங்களுடன் பணியாற்றும் சக ஊழியரை நீங்கள் குறிப்பிட்டால் உயர் அதிகாரிகள் அவருக்கு நிறைய சலுகைகள் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.

ஒரு செய்தி வந்து சேருகிறது. “It was a complete bolt from the blue” என்று நீங்கள் கூறினால் அது கொஞ்சமும் எதிர்பார்க்காத, உங்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி என்று பொருள்.

He feels blue என்றால் அவர் மிகவும் இடிந்து போய்க் காணப்படுகிறார். Once a blue moon என்பது ஆடிக்கொருமுறை, அமாவாசைக்கொருமுறை என்பது

போ​ல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அரிதாக.

« « « «

சில வாரங்களுக்கு முன்னால் epitome என்ற வார்த்தைக்கான பொருளைக் குறிப்பிட்டிருந்தேன். epitome என்பது ஒரு பெரும் உயர்வைக் குறிக்கும் வார்த்தை என்பதையும் குறிப்பிட்டிருக்கலாமே எனப் பள்ளி முதல்வர் ஒருவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

புத்தக வார்த்தைகள் என்பதால் epitome என்பது புத்தகச் சுருக்கத்தைக் (summary) குறிக்கப் பயன்படும் வார்த்தை என்று குறிப்பிட்டிருந்தேன். பிற விளக்கங்களை அப்போது சேர்க்கவில்லை. இப்போது தெரிந்து கொள்வோம். ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு அல்லது தன்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஒன்றையோ, ஒருவரையோ குறிக்க epitome என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். She looked the epitome of beauty என்றால் அவள் அழகின் உச்சம் அல்லது அவளது அழகை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்று பொருள்.

« « « «

Hyperbole என்பது என்ன என்று ஒருவர் கேட்கிறார். ‘’Hyperbole என்பதை நீங்கள் அறிந்துகொண்டால் ஆங்கில மொழிப் புலமையில் பாதிக் கிணற்றைத் தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்’’ என்று நான் குறிப்பிட்டால் அது hyperbole. அதாவது மிகவும் பெரிதுபடுத்தப்பட்ட ஒரு தகவல்.

“உ​ன்னை இதுவரை ஆயிரம் தடவை எச்சரிக்கை செய்தும் நீ திருந்தல” என்பதும், “எனக்கு இருக்கிற பசிக்கு யானையையே முழுங்கிடுவேன்” என்பதும் “ஊதினாலே பறந்துபோற அளவுக்கு ஒல்லியாய் இருக்கியே?” என்பதும் hyperboleதான்.

« « « «

பெண்களை வர்ணிக்கும் திரைப்படப் பாடல்களில் hyperbole-களை அதிகமாகக் காண முடியும். ஒடிவதுபோல் இடையிருக்கும், மானல்லவோ கண்கள் போன்றவை. ஆங்கிலத்தில் Auden என்ற கவிஞர் எழுதியுள்ள கீழ்க்கண்ட வரிகள்கூட hyperboleதான்.

I’ll love you, dear, I’ll love you

Till China and Africa meet,…

I’ll love till the ocean

Is folded and hung up to dry.

கிரேக்க மொழியில் hyperbole என்ற வார்த்தை தேவைக்கு அதிகமான நடிகர்களைப் பங்குபெற வைப்பது – Over-casting – என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. உடனடியாகச் சில தமிழ்த் திரைப்படங்கள் கண்முன்னால் வருமே!

Hyperbole என்பதன் எதிர்ச்சொல்லாக எதைக் கூறலாம்? Understatement.



Irregular adjective என்றால் என்ன?

Laziness noun என்றால் அதற்கான adjective Lazy. Intelligence noun என்றால் அதற்கான adjective intelligent. அதே அடிப்படை வார்த்தையாகக் கொண்டிருப்பதால் lazy, intelligent போன்றவை regular adjectives.

Irregular adjectives என்பவை அப்படியல்ல. “அவருக்கு cervical problem” என்று யாராவது குறிப்பிட்டால் அர்த்தம் புரியாமல் “ஓ அப்படியா?” என்று சிலர் குழப்பத்துடன் தலையசைப்பார்கள். அவர்களுக்கு neck என்ற noun நிச்சயம் தெரிந்திருக்கும். அதன் adjectiveதான் cervical என்பது தெரிந்திருக்காது.

அதேபோல skin என்ற ​nounனின் adjective dermal. அதனால்தான் தோல் மருத்துவரை Dermatologist என்கிறோம். Tongue என்பதன் adjective lingual. Nerve என்பதன் adjective neutral.

Cervical, dermal, lingual ஆகியவை irregular adjectives. இ​​தையெல்லாம் மனதில் கொண்டு irregular adjectives என்பது உடல் பாகங்கள் தொடர்பானவை மட்டுமே என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

Sea என்பதன் adjective marine அல்லது maritime. Star என்பதன் adjective stellar. Stellar performance என்றால் மிகச் சிறந்த செயல்பாடு.

King என்பதன் adjective royal.

Year என்பதன் regular adjective yearly. Irregular adjective annual.

« « « «

அவர் மிகவும் Down to earth என்றால்?

கற்பனை உலகில் மிதக்காதவர், நடைமுறையைப் புரிந்துகொண்டவர். நட்புடன் இருப்பவர்.

“கல்யாணம் செய்துக்கப் போறீங்க, வாழ்த்துகள்! ஆனால் கல்யாணங்கிறது எப்போதுமே ரோஜாப்பூ மஞ்சம் கிடையாது. ​எந்த இரண்டு பேராக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். விட்டுக் கொடுத்துப் போகணும்”. இப்படி ஒருவர் கூறினால், he has a down to earth view on marriage.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x