Last Updated : 26 Jul, 2016 10:05 AM

 

Published : 26 Jul 2016 10:05 AM
Last Updated : 26 Jul 2016 10:05 AM

ஆங்கிலம் அறிவோமே - 120: சுதந்திரமா, இலவசமா?

நோய்களைப் பொறுத்தவரை contagious என்பதற்கும், infectious என்பதற்கும் என்ன வித்தியாசம்?’ என்ற கேள்விக்கு இப்படிப் பதில் சொல்லலாம். இரண்டுமே ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றக் கூடியனதான். ஆனால், contagious என்றால் நேரடித் தொடர்பு மூலமாகப் (தொடுதல் போல) பரவுவது.

Contagious என்பதை மிகவும் சுவாரஸ்யமான கோணங்களிலும் பயன்படுத்துகிறார்கள். His enthusiasm is contagious என்றால் அவரது உற்சாகம் பிறருக்கு எளிதில் பரவக் கூடியது என்று அர்த்தம். அதே சமயம் எதிர்மறை அர்த்தத்திலும் contagious பயன்படுத்தப்படுகிறது. The violence in Syria is contagious என்பதுபோல.

அமெரிக்காவின் non-contagious States என்று ஹவாய் மற்றும் அலாஸ்கா ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்கள். இதற்கு அர்த்தம் புரிகிறதல்லவா? யுனைடட் ஸ்டேட்ஸின் பொதுவான நிலப்பரப்பிலிருந்து இவை இரண்டும் தள்ளி உள்ளவை. ஹவாய் என்பது தீவு. அலாஸ்கா என்பது கனடாவுக்கு மேலே உள்ள பரப்பு.

Contagious என்ற வார்த்தையை நல்லவிதத்திலும் எதிர்மறையாகவும் பயன்படுத்துகிறார்கள் என்றேன். என்ன காரணத்தினாலோ infectious என்ற வார்த்தையை (நோய்களைக் குறிக்கப் பயன்படுத்துவதை விட்டுவிட்டால்) ஆக்கபூர்வமான விதத்தில்தான் பயன்படுத்துகிறார்கள். The humour was infectious. The optimism was infectious. Infectious நோய்கள் காற்று மற்றும் தண்ணீர் மூலமாகவும் பரவக் கூடியவை.

இந்த இடத்தில் idiopathic disease என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ளலாமே? ஒரு நோய்க்கான காரணத்தை மருத்துவர்களால் அறிய முடியவில்லை அல்லது அந்த நோய்க்குக் காரணமான கிருமி குறித்து இதுவரை எந்த ஆராய்ச்சி விவரமும் கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் அத்தகைய நோய்களை idiopathic disease என்பார்கள்.

******

“I apply for one day leave என்கிறோம். அப்படியானால் I apply for three days leaves என்றுதானே எழுத வேண்டும்?’’

பன்மை வார்த்தை days என்பதில் இடம்பெறுகிறது; leave என்பதில் அல்ல.

I will apply for three days of leave என்பதுதான் சரி. I will be applying one day leave என்று ‘of’ என்பதைப் பயன்படுத்தாமலும் பலர் எழுதுகிறார்கள். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

என் அக்கா பல வருடங்கள் பள்ளி ஆசிரியையாக இருந்தவர். விடுப்பு கேட்டு எழுதும் கடிதத்தில் பல பெற்றோர்களும் செய்த தவறுகளை அவர் என்னிடம் குறிப்பிட்டதுண்டு.

My son Vivek, a student of your class unable to attend school between 17-8-2016 to 21-8-2016 because we planned to visit native place.

மேலே உள்ளது உண்மையாகவே மாணவரின் தந்தை ஒருவர் பள்ளி ஆசிரியைக்கு எழுதிய கடிதம். இதில் உள்ள தவறுகளைப் பார்ப்போம்.

1. My son, Vivek, என்று கடிதம் தொடங்கி இருக்க வேண்டும் (இரு இடங்களில் comma இருப்பதைக் கவனியுங்கள்).

2. முதல் பகுதியில் ‘is’ என்ற வார்த்தை விடுபட்டிருக்கிறது. My son, Vivek, is a student of your class. He is unable to என்று அடுத்த வாக்கியம் தொடங்கியிருக்கலாம்.

அல்லது My son, Vivek, a student of your class, will be unable என்று அந்த வாக்கியம் தொடங்கலாம். இனி வரப்போகும் சில நாட்களில் விடுப்பு கோருகிறீர்கள் என்பதால் வெறும் unable என்ற வார்த்தை போதாது. Will be unable என்றுதான் இருக்க வேண்டும்.

3. Between 17-8-2016 to 21-8-2016 என்பது தவறு. Between 17-8-2016 and 21-8-2016 என்று இருக்க வேண்டும் அல்லது from 17-8-2016 to 21-8-2016 என்று இருக்க வேண்டும்.

4. இந்தக் கடிதம் ஏதோ விடுப்பைத் தெரியப்படுத்துவதுபோல உள்ளது! விடுப்புக்கான விண்ணப்பம்போல இல்லை. விடுப்புக்கான (அதுவும் இனி எடுத்துக்கொள்ளப் போகும் விடுப்பு என்றால் அதற்கான) அனுமதியைப் பெறுவதாகத்தான் விடுப்புக் கடிதம் இருக்க வேண்டும். எனவே “My son, Vivek, a student of your class, will be unable to attend the school between 17-10-2016 and 21-10-2016, as we plan to visit our native place. Kindly grant him four days of leave on the days mentioned’’ என்று வாசகங்கள் இருக்கலாம்.

“Free’, ‘freely’ ஆகிய இரண்டுமே ஒரே அர்த்தம் கொண்ட adverbsதானே?” என்கிறார் ஒரு வாசகர்.

Freely என்றால் சுதந்திரமாக. Free என்பது இலவசமாக என்ற அர்த்தத்தில்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

In some cities, old people are allowed to travel free on buses.

Do not worry; no one is listening. We can talk quite freely.

இதேபோல அமைந்த வேறு சில ஜோடி வார்த்தைகளையும் பார்ப்போம். Late என்றால் தாமதம். (இறந்தவர்களைக் குறிக்கவும் late என்ற வார்த்தையை அவர்கள் பெயருக்கு முன்னால் பயன்படுத்துகிறோம்).

Lately என்றால் சமீபகாலமாக என்று அர்த்தம்.

ஆங்கிலம் அறிவோமே 118 பகுதியில் சில திருக்குறள் அத்தியாயத் தலைப்புகளை ஆங்கிலமாக்குமாறு கேட்டிருந்தோம். பலவிதமான விடைகள் பல வாசகர்களிடமிருந்து வந்துள்ளன.

1)வான்சிறப்பு - Glory of rain, sky’s benevolence, praise of rain.

2)அறன் வலியுறுத்தல் - Virtuousness, insistence on virtuous conduct, assertion of virtue, emphasis of virtue

3)கண்ணோட்டம் - gracious compassion, benignity, altruism, humanism.

4)நடுவு நிலைமை - Neutrality, impartiality, rectitude, equity and uprightness.

5)கயமை Meanness, baseness, sordidness, unscrupulousness, Impropriety

வான் சிறப்புக்கு Nobleness of the sky என்பதும், கயமைக்கு Ignobility என்பதும்கூட பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

அனைத்திற்குமான (அல்லது பெரும்பாலானவற்றுக்கான) ஏற்கத்தக்க (முதல் மூன்று நாட்களில் வந்து சேர்ந்தவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன) ஆங்கில மொழியாக்கங்களை எழுதிய வாசகர்கள் இவர்கள். பாராட்டுகள்.

1)பேராசிரியர் S.கோவிந்தராஜுலு, ஆத்திப்பட்டு, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம்.

2)T.தினேஷ், வண்டிப்பாளையம், கடலூர்

3)N.சுவாமிநாதன், வழக்கறிஞர், சின்ன வேடம்பட்டி, கோயம்புத்தூர்

4)K.B.ராமகிருஷ்ணன், M.A., B.Ed., R.G.மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை

5)P.ஷெர்புதீன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர், சக்தி கணபதி நகர், கொண்டூர்

6)இர. கார்த்திகேயன், திருப்பூர்

7)டி.செல்லதுரை, மாடம்பாக்கம், சென்னை

நடுவு நிலைமை என்பதற்கு rectitude என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். Rectitude என்பது ஒழுங்குமுறையோடு அமைந்த நடத்தை அல்லது சிந்தனை.

கண்ணோட்டம் என்பதற்கு outlook என்பது பொருத்தம்தான். ஆனால் அந்த அத்தியாயத்தின் குறள்கள் வலியுறுத்துவதைப் படித்தால் compassion என்பதே பொருத்தம் என்பது படுகிறது.

கண்ணோட்டம் என்பதற்கு benign looks என்று ஒருவர் எழுதியிருக்கிறார். Benign looks என்பதிலுள்ள benign என்பதன் பொருள் மிருதுவான, கனிவான. கட்டிகளில் கூட benign, malignant என்ற இருவகைகள் உண்டு. Benign கட்டி என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. Malignant கட்டி என்றால் அதற்கு நேரெதிர். அது புற்றுநோய்க் கட்டியாகக்கூட இருக்கக் கூடும்.

அந்தமான் Non contagious Union Territory

# Or rather என்று வாக்கியத்தின் நடுவே வருமா?

நீங்கள் பேசும்போது உங்களையே திருத்திக் கொள்கிறீர்கள் எனும்போது இப்படி வரலாம். Apparently, the decision was taken by your brother, or rather, your sister.

# Cos என்றால்?

அது because என்பதன் சுருக்கம்.

# Wake me at ten past five o’ clock என்பது சரியா?

இல்லை. Wake me at ten past five என்றோ wake me at five ten என்றோ கூறுங்கள்.

ஹவாய் - Non contagious states

I have not seen him lately.

Priya always arrives late.

Wide என்பதை ‘அகலமான’ என்ற அர்த்தத்திலும், widely என்பதை ‘பரவலான’ என்ற அர்த்தத்திலும் அதிகம் பயன்படுத்துகிறோம்.

The dentist said, “You have to open your mouth wide”.

It is widely known that he loves visiting various countries.

******

“Innuendo என்பதை எப்படி உச்சரிப்பது என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

இன்யுவென்டோ என்று உச்சரிக்க வேண்டும். அதன் அர்த்தத்தையும் தெரிந்துகொள்வோம். நேரடியாக இல்லாமல் கொஞ்சம் மறைமுகமாக ஒரு கருத்தைக் கூறுவது. இது பெரும்பாலும் யாரையாவது கிண்டல் செய்வதாகவோ, வஞ்சப் புகழ்ச்சியாகவோ, தரம் இறக்குவதாகவோ இருக்கும்.

“உன்கிட்டே ஒண்ணு சொன்னால் அதை மறந்திடலாம்” என்பது அந்த வகை.

ஒருவரின் புகழுக்கு ஊறுவிளைவிக்கும் செயலை defamation என்பார்கள். இதன் குயுக்தியான வடிவம் என்று innuendo-வைக் கூறலாம்.

“தற்போதைய நிதியமைச்சர் லாரன்ஸ் நேர்மையானவர். முன்னாள் நிதியமைச்சர் ஊழல்வாதி” என்று ஒருவர் குறிப்பிடுகிறார்.

முன்னாள் மாநில நிதியமைச்சரான டேவிட் என்பவர் அப்படிக் கூறியவர்மீது வழக்குத் தொடுக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் அவர் கூறியது innuendo வகையைச் சேர்ந்தது.

“முன்னாள் நிதியமைச்சர் என்று நான் பொதுவாகத்தான் குறிப்பிட்டேன். மாநில நிதியமைச்சர் என்று கூறவில்லை” என்பது சமாதானம் ஆகாது. ஏனென்றால் லாரன்ஸ் மாநில நிதியமைச்சராக இருந்தால் இரண்டாவது வாக்கியமும் மாநில நிதியமைச்சரைக் குறிப்பிடுவதாகத்தான் அர்த்தம். தவிர அந்த நாட்டுக்கு இதுவரை இரண்டே நிதியமைச்சர்கள்தான் என்றால் பெயரைக் குறிப்பிட்டு ஊழல்வாதி என்று சொல்லவில்லை என்றாலும் ‘முன்னாள் நிதியமைச்சர்’ என்பது டேவிட்டைத்தான் குறிக்கும்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x