Last Updated : 19 Jul, 2016 12:22 PM

 

Published : 19 Jul 2016 12:22 PM
Last Updated : 19 Jul 2016 12:22 PM

ஆங்கிலம் அறிவோமே - 119: ரொம்ப அமெச்சூர்தனமா இருக்கா?

ஒரு வாசகர், “‘Blue collar employee’, ‘White collar employee’ என்று பிரித்துக் கூறுகிறார்களே எந்த அடிப்படையில்?” எனக் கேட்டிருந்தார்.

‘Blue collar employee’ என்றால் அவர் உடல் உழைப்பை அந்த நிறுவனத்துக்காகத் தருபவர் என்று அர்த்தம். ஒரு கார் தயாரிப்புத் தொழிற்சாலை என்றால் அந்த நிறுவனத்தின் கார் பாகத்தின் தயாரிப்புகளில் நேரடியாக ஈடுபடுபவர்கள், பாகங்கள் பொருத்துபவர்கள், வண்ணம் தீட்டுபவர்கள் எல்லோரும் இந்தப் பிரிவில் அடங்குவார்கள் எனலாம்.

‘White collar employee’ என்றால் உடல் உழைப்பை நேரடியாக அளிப்பவர்கள் அல்ல. குமாஸ்தாக்கள், அதிகாரிகள் போன்றவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

Blue, White ஆகிய வண்ண வார்த்தைகளைத் தொடர்ந்து வண்ணங்கள் தொடர்பான சில ஆங்கில வார்த்தைகளின் அர்த்தங்களைப் பார்க்கலாம்.

Murali’s face was black and blue at the end of the football match, என்றால் கால்பந்து விளையாட்டுப் போட்டியின் இறுதியில் முரளியின் முகத்தில் நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

“எனக்கு அப்படியே black out ஆயிடுச்சு”, என்றால் நான் மயக்கமடைந்துவிட்டேன் என்று பொருள்.

Pot calling the kettle black என்றால் தன்னிடம் குறைகளை வைத்துக்கொண்டு இன்னொருவரை விமர்சிப்பவர் என அர்த்தம். ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்று கிராமத்தில் சொல்வார்கள்.

Black sheep என்றால் ஒரு குழுவிலோ குடும்பத்திலோ மற்றவர்களோடு ஒத்துப்போகாதவர் என்று அர்த்தம். அப்படியானால் மற்றவர்களெல்லாம் மட்டமானவராக இருக்க ஒருவர் மட்டும் சிறப்பானவராக இருந்தால் இப்படிக் கூறலாமா? டெக்னிக்கலாகக் கூறலாம். ஆனால், அந்தக் குழுவுக்கே ஒரு அவமானத்தையோ சங்கடத்தையோ அளிப்பவர் என்ற பொருளில்தான் black sheep பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவரை blacklist செய்வது என்றால் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதைத் தடுப்பது என்று அர்த்தம். ஏற்கனவே விதிகளை மீறியவர்களைத்தான் blacklist செய்வது வழக்கம்.

‘Black and white’ என்றால் குழப்பமில்லாமல் என்று பொருள். எதுவுமே black and white-ல் இருக்க வேண்டுமென்று ஒருவர் கூறினால் சும்மா வாய் வார்த்தையில் இல்லாமல் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும் என்று பொருள். மற்றபடி blackmail என்றால் மிரட்டுதல் என்றும் black market என்றால் கறுப்புச் சந்தை என்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே!

வண்ணம் தொடர்பான வார்த்தைகள் என்று கூறிவிட்டு blackஐ மட்டுமே விலாவாரியாகக் குறிப்பிடுகிறேனே என்கிறீர்களா? பிற வண்ணங்கள் தொடர்பான வார்த்தைகளை வரும் பகுதிகளில் பார்க்கலாமே.

  

“ரொம்ப அமெச்சூர்தனமா இருக்கு என்கிறார்களே. Mature என்ற வார்த்தைக்கு எதிர்ச்சொல்தான் Amature இல்லையா?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

அவரது கோணம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் அமெச்சூர் என்பதை ஆங்கிலத்தில் amateur என்றுதான் எழுத வேண்டும். அமெச்சூர் என்ற வார்த்தையே எந்த எதிர்மறை அர்த்தத்தையும் கொடுத்துவிடுவதில்லை. ஒன்றின் மீதுள்ள விருப்பம் காரணமாக ஒரு கலையில் அல்லது தொழிலில் ஈடுபடுவதைத்தான் amateur என்கிறோம்.

“அது ஒரு amateur நாடகக் குழு” என்றால் பக்குவம் பெறாத குழு என்ற அர்த்தமில்லை. அதில் பங்கேற்பவர்கள் எல்லாம் வேறு பணிகளில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள். நாடகத்தின்மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஊதியம் இல்லாமலோ அல்லது சொற்ப தொகைக்கோ - அந்தக் குழுவில் நடித்துக்கொண்டிருப்பார்கள்.

Amateur என்பதற்கு எதிர்ச்சொல் professional எனலாம். விம்பிள்டனில் வெகுகாலத்துக்கு professional-களுக்கு மட்டும்தான் அனுமதி. சில வருடங்களுக்கு முன்னர்தான் amateur-களுக்கும் அனுமதியளித்தார்கள். ஒரு காரியத்தை அதையே தொழிலாகக் கொண்டவர்கள் மேலும் சிறப்பாகச் செய்வார்கள் என்பது எதிர்பார்ப்பு. அந்தக் கோணத்தில்தான் முழு நிறைவாக ஒன்று அமையாதபோது அதை அமெச்சூர்தனமாக இருக்கிறது என்று கூறும் வழக்கம் தோன்றியிருக்க வேண்டும்.

********

House, Home இரண்டும் ஒன்றா, வேறா? வேறுதான். A house is made of brick and stone. A home is made of love alone என்று சென்டிமென்டான பொன்மொழிகளைப் பயன்படுத்துவார்களே.

House என்பது கட்டிடம். Home என்பது ஒருவர் ‘வாழும்’ இடம். தோராயமாக House என்றால் வீடு, Home என்றால் இல்லம் என்று கூறலாம். வீட்டில் விரிசல் என்றால் வீட்டுச் சுவர்களில் விரிசல் என்று பொருள் கொள்கிறோம். இல்லத்தில் விரிசல் என்றால் குடும்பப் பிரச்சினை என்று அறிகிறோம். இவை போலத்தான் House, Home ஆகியவை.

********

President என்ற வார்த்தைக்கு முன்னால் ‘The’ என்பதைப் பயன்படுத்த வேண்டுமா என்பது ஒரு வாசகரின் கேள்வி.

முழு வாக்கியத்தையும் அறிந்துகொண்டால்தான் ‘the’ வேண்டுமா, வேண்டாமா என்பதைக் கூற முடியும்.

I met the Captain.

I met the Doctor

I met the Professor

என்பது போலவே.

I met the President என்பதும் சரிதான்.

ஆனால், குறிப்பிட்ட ஒரு President குறித்து எழுதும்போது ‘the’ இடம் பெறக் கூடாது.

I met the President Pranab Mukherjee என்று கூறக் கூடாது. இதில் the நீக்கப்பட வேண்டும்.

கீழே உள்ள சரியான வாக்கியத்தைப் படித்து மேலும் தெளிவு பெறலாம்.

Who was the President before President Pranab Mukherjee?.

இதே அடிப்படையில் உள்ள வாக்கியம்தான். We live beside Lake Kodaikanal. We have a fantastic view across the lake. (முதலில் குறிப்பிட்ட lake என்ற வார்த்தைக்கு முன் the இல்லை என்பதை கவனித்தீர்களா?)

********

“ ‘When we meet a neighbour, let us give him a smile’ இப்படி ஒரு புத்தகத்தில் படித்தேன். எதற்காக him என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். ஆணோ, பெண்ணோ யார் வேண்டுமானாலும் பக்கத்து வீட்டுக்காரராக இருக்கலாமே. எனவே பொதுவான ஓர் அறிவுரையில் him என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. நான் சொல்வது சரிதானே” எனக் கேட்கிறார் ஒரு வாசகி.

தவறுதான். அந்த வாசகி எழுப்பிய கேள்வியல்ல. Him என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தியது தவறுதான். இதற்குக் காரணம் அறியாமை, தொடர்ந்து அப்படிக் குறிப்பிட்டே பழக்கப்பட்டது அல்லது ஊறிப்போய் இருக்கும் ஆணாதிக்கம்.

When we meet a neighbour, let us give him or her a smile எனலாம்.

மாறாக இதை மேலும் எளிமைப்படுத்த வேண்டுமென்றால் When we meet neighbours, let us give them a smile என்று கூறிவிடலாமே.

சிப்ஸ்

Binary என்றால்?

இரண்டு பொருள்கள் தொடர்பானது என்று அர்த்தம். இரண்டு பகுதிகள் கொண்ட ஒன்றையும் குறிக்கும். 0 அல்லது 1 ஆகிய இரண்டில் ஒன்றை மட்டுமே கொண்ட மதிப்பீடாகக் கொண்ட முறையையும் குறிக்கும்.

# Pan என்றால் வாணலி என்று தெரியும். Saucepan என்றால்?

அதிக உயரம் கொண்ட வாணலி! பெரும்பாலும் மூடியுடன், நீண்ட கை கொண்டு இருக்கும்.

# Hexagon என்றால் அறுகோணம். Polygon என்றால் எவ்வளவு பக்கங்கள்?

குறிப்பிட்டு இத்தனை என்று இல்லை. இருந்தாலும் பொதுவாக நான்கு பக்கங்களைவிட அதிகம் கொண்ட நேர்க்கோடுகளாலான ஒரு உருவத்தைத்தான் polygon என்போம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x