Last Updated : 17 May, 2016 01:25 PM

 

Published : 17 May 2016 01:25 PM
Last Updated : 17 May 2016 01:25 PM

ஆங்கிலம் அறிவோமே - 110: நம்ம கெட்-டுகெதர் எப்போ?

ஒரு வாசகர், “ஒரு புத்தகத்தில் I must study English and maths என்று இருந்தது. இது தவறல்லவா? ஒன்று English and Maths என்று இருந்திருக்க வேண்டும் அல்லது english and maths என்று இருந்திருக்க வேண்டும் அல்லவா?” என்று கேட்டிருக்கிறார்.

அப்படியெல்லாம் இஷ்டத்துக்கு capital-ஐ பயன்படுத்தக்கூடாது (அல்லது பயன்படுத்தாமல் இருக்கக் கூடாது).

புத்தகத்தில் காணப்பட்டது சரிதான். குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றை proper noun என்போம். பொதுவாகக் குறிப்பிடப்படும் ஒரு வார்த்தையை common noun என்போம். அப்துல் கலாம் என்பது proper noun. President என்பது common noun. River என்பது common noun. Ganges என்பது proper noun.

Proper Noun வார்த்தையின் முதல் எழுத்து capital letterஆகவே இருக்க வேண்டும். Common noun-ன் தொடக்க எழுத்து capital letter ஆக இருக்கக் கூடாது.

வாசகர் குறிப்பிட்ட உதாரணத்தில் English என்பது proper noun. அதாவது ஒரு குறிப்பிட்ட மொழி. எனவே English என்ற வார்த்தையின் முதல் எழுத்து capital ஆக இருக்கிறது.

மாறாக maths என்பது common noun. எனவே அதன் தொடக்க எழுத்து capital-ல் இல்லை.

ஆக English & maths என்பது சரியான பயன்பாடுதான்.

Parable, fable ஆகிய இரண்டும் ஒன்றுதானா?

இரண்டுமே ஒழுக்க நெறியை போதிக்கும் கதையைத்தான் குறிக்கின்றன.

Parable என்பது ஒரு ஒழுக்க நெறியையோ, மத நம்பிக்கையையோ வலியுறுத்தும் எளிய கதை. இந்தக் கதை உணர்த்தும் நன்னெறியை நாம் நிஜ வாழ்விலும் கடைப்பிடிக்கலாம்.

Fable என்பதும் ஒரு சிறு கதைதான். ஆனால் இதில் விலங்குகள்தான் முக்கிய கதாபாத்திரங்கள். அவை பேசுவதாகக்கூட அமைந்திருக்கும். நம் பஞ்ச தந்திரக் கதைகளைப் போல.

IMPLY INFER

Imply, Infer இந்த இரண்டையும் ஒரே அர்த்தம் கொண்டவையாக எண்ணி சிலர் பயன்படுத்துவதுண்டு. ஆனால் இவற்றுக்கிடையே நுணுக்கமான வேறுபாடு உண்டு.

Imply என்பது மறைமுகமாக ஒன்றை உணர்த்துவது. அதாவது சொன்னதைக் கொண்டும், சொல்ல வந்ததைக் கொண்டும் நீங்களாகவே ஒரு முடிவுக்கு வருவது.

‘‘ஏன்டா மார்க்கெட்டுக்குப் போய் பூசணிக்காயும், கத்திரிக்காயும் வாங்கிட்டு வரச் சொன்னேனே, வாங்கிட்டு வந்தியா?’’ என்று அப்பா கேட்க, “கத்திரிக்காய் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று மகன் கூறினான். அதாவது இதன் மூலம் அவன் பூசணிக்காய் வாங்கவில்லை என்பதை imply செய்கிறான்.

ஒன்றை imply செய்பவர் அதில் மறைந்திருக்கும் தகவலைச் சொல்ல விரும்புகிறார். அதே சமயம் அந்தச் செய்தியைப் பெறுபவருக்கும் அந்த மறைபொருளை உணரக் கூடிய மதிநுட்பம் வேண்டும்.

“ரவி திருமணமானவர். அலுவலகத்தில் அவருக்கு மிகவும் நல்ல பெயர். 24 மணி நேரமும் அலுவலகத்திற்காக உழைக்கவும் அவர் தயார்”. மேற்படி வாக்கியங்கள் imply செய்வது என்ன? அவருக்குக் குடும்பம் என்பது இரண்டாம்பட்சம் என்பதைத்தான். இல்லையா?

Infer என்பதற்கு இப்போது வருவோம். எதையோ அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவதை infer என்கிறோம்.

கோவிந்தசாமி கொலை செய்யப்பட்டிருக்கிறார். நேற்று மாலை ஐந்து மணிக்குக் கொலை நடந்திருக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரிக்கும்போது விசுவாசமிக்க வேலைக்காரர் ஒருவர் “சார், கொலை நேத்து மாலை 5.00 மணிக்கு நடந்திருக்கு. ஆனால் எங்க ஐயா நேத்து மதியமே பம்பாய்க்குப் போய்ட்டார்” என்று கூறினால் “என் முதலாளி இந்தக் கொலையைச் செய்யவில்லை” என்று அவர் imply செய்கிறார்.

மாறாக முன்தினம் அந்தக் கொலை நடந்திருக்கிறது என்பதே தெரியாமல் அடுத்த நாள் அந்த வீட்டுக்கு வரும் வேலைக்காரரிடம் “உங்க ஐயா எங்கே?’’ என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்க, “அவர் நேற்று மதியம் கிளம்பி பம்பாய்க்குப் போய்ட்டாரு. நாளைக்குத்தான் வருவார்’’ என்கிறார். இதைக் கொண்டு அந்த இன்ஸ்பெக்டர், அப்படியானால் இவரது முதலாளி அந்தக் கொலையைச் செய்திருக்க வாய்ப்பு இல்லை (அல்லது வாய்ப்பு குறைவு) என்று infer செய்கிறார்.

Sekar implied that Somu was a traitor என்றால் அது சேகரின் பார்வை. அதாவது சோமு ஒரு துரோகி என்பதை சேகர் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார். I inferred from the words of Sekar that Somu was a traitor என்றால் அது எனது பார்வை. அதாவது சேகர் கூறியதிலிருந்து நான் எடுத்த முடிவு. இதே எண்ணம் அல்லது முடிவு சேகருக்கு இல்லாமலும் இருக்கலாம்.

GET

Get என்றால் அடைவது என்பது நமக்குத் தெரியும். I got a letter from him. The police have got him.

Drop, fail, lose, let go, surrender, leave போன்றவற்றை get என்பதற்கு எதிர்ச் சொற்களாகக் கூறமுடியும்.

ஆனால் get என்ற வார்த்தையோடு வேறுசில குறிப்பிட்ட வார்த்தைகள் சேரும்போது ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பட்ட அர்த்தம் உண்டு.

Get along with someone என்றால் ஒருவருடன் நட்பாகப் பழகுவது என்ற அர்த்தம். I cannot get along with him.

Get together என்றால் ஒன்றைப் பற்றிப் பேசவோ அல்லது கூடி இருப்பதற்காகவோ சிலர் சந்திப்பது. Deepavali is a time for families to get together.

Get around என்பது பலருக்கும் கூறப்பட்டது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. Word got around that he had been murdered.

Get away என்றால் தப்புவது என்று அர்த்தம். The thieves got away through the window.

Get off என்பதை பேருந்து, ரயில், சைக்கிள் போன்ற ஏதோ ஒரு வாகனத்திலிருந்து இறங்குவது என்ற அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம். She got off the train at Egmore station.

சென்ற வாரம் கேட்கப்பட்ட rebusகளுக்கான விடைகள்

1) STANDS

02345

NO ONE UNDERSTANDS

2) L1IFE1TIM1E

ONCE IN A LIFE TIME

இரண்டு விடைகளையும் சரியாக எழுதி, வெளியான இரண்டு நாட்களுக்குள் அனுப்பியிருக்கிறார்கள் கீழ்க்கண்ட வாசகர்கள். பாராட்டுகள்.

1. K.ஸ்ரீனிவாஸ், சென்னை

2. வைத்தியநாதன், மதுரை

3. பவிஷ்யஸ்ரீ, சென்னை

4. M.அபிராமி, பள்ளிக்கரணை

5. உடுமலை K.B. ராம்கி, கிருஷ்ணாபுரம்

6. பாஸ்கர் ஆனந்த், நோவா

7. R.R.யோக சந்தோஷி, திருச்சி

8. சுபாஷினி, கோயமுத்தூர்

9. செண்பகம், திருச்சி-11

10. கார்த்திக், அம்மாசத்திரம்

11. ஜெயஸ்ரீ பட்டாபிராமன்

12. ஆர்.நடேசன், கோவில்பட்டி

13. வி.இராமச்சந்திரன், மறவனேரி, சேலம்

14. ஆனந்தி ஆனந்தவேல், கோயபமுத்தூர்

முதல் புதிருக்கான விடையாக சென்னை மாடம்பாக்கம் D.செல்லதுரை, சென்னை ஆசன் ஜசீமா, கோவில்பட்டி டாக்டர் S.சங்கர்ராஜன், அந்தியூர் வி.எஸ்.பார்கவி ஆகியோர் குறிப்பிட்டிருக்கும் “One misunderstands” என்ற விடையும் சுவாரஸ்யமானது.

சிப்ஸ்

Detente என்றால்?

ஒப்பந்தம். They reached a detente, after all the negotiations were completed. (டிடான்ட் என்று இதை உச்சரிக்க வேண்டும்).

Aural என்பதற்கும் oral என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Aural என்பது கேட்பது தொடர்பானது. Oral என்பது வாய் தொடர்பானது.

வியப்பைக் குறிப்பது O வா? அல்லது Oh ஆ?

இரண்டும்தான். ஆனால் கீழே உள்ள வாக்கியங்களைக் கவனியுங்கள் முக்கிய மாக ஆச்சரியக் குறி எங்கே இடம்பெறுகிறது என்பதை.

Oh! Well done.

Oh God! I have failed.

O Lawyer, speak no more!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x