Published : 15 Mar 2016 11:24 AM
Last Updated : 15 Mar 2016 11:24 AM

ஆங்கிலம் அறிவோமே - 101: அதே 100 ரூபாய் நோட்டு

ஒரு வாசக நண்பர் தொலைபேசியில் “I am longing to see more and more seas’’ என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறினார். “புரியவில்லை” என்றேன். “Sea அல்ல. ஆங்கிலத்தின் மூன்றாவது எழுத்தான C’’ என்றார். புரிந்தது. நூறாவது பகுதியைக் கடக்கும் நமது பகுதிக்கான வாழ்த்து அது. தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்திய வாசர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

“ஓர் ஆங்கிலப் புதினத்தில் ‘He tapped his scone’ என்று படித்தேன். Scone என்றால் என்ன என்று கூறுங்கள். விடை தெரியாமல் தலை வெடித்துவிடும் போல இருக்கிறது” என்று தவித்தார் ஒரு வாசகர்.

எது வெடிக்கக் கூடாது என்று அந்த வாசகர் தவிக்கிறாரோ அதுதான் scone என்பதற்கான பொருள். தலை என்ற அர்த்தத்தில் scone என்ற சொல்லைப் பெரும்பாலும் பயன்படுத்துவது ஆஸ்திரேலியர்கள்தான். Go off one’s scone.

இனிப்பு இல்லாத அல்லது மிகக் குறைவாக இனிப்பு சேர்க்கப்பட்ட ஒருவகை கேக்கையும் scone என்பார்கள். இனி நீரிழிவுக்காரர்கள் ‘’scone இருக்கா?’’ என்று கேட்டால் அளிக்கும் வகையில் அடுமனைக்காரர்கள் அப்படிப்பட்ட கேக்கையும் கைவசம் வைத்திருப்பார்களாக!

Foregone என்ற வார்த்தையின் பொருளை முன்பு வேறொரு வாசகர் கேட்டிருந்தார். Fore என்பது before என்பதன் சுருக்கம். Foregone என்றால் past, ancient, former என்று பொருள் கொள்ளலாம்.

Scone, foregone ஆகிய இரண்டுமே ஒன்றில் முடியும் வார்த்தைகள். அதாவது one என்ற எழுத்துகளில் முடிகின்றன.

கீழே சில குறிப்புகளைக் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு குறிப்பும் one என்று முடியும் ஒரு வார்த்தையைக் குறிக்கிறது. அத்தனை ஆங்கில வார்த்தைகளையும் யார் கண்டுபிடித்து அனுப்பப்போகிறீர்கள்?

1. கூம்பு

2. அச்சு அசலான பிரதி

3. தொனி

4. தள்ளிப்போடுதல்

5. சாபத்தால் அகலிகை

6. அரசனின் ஆசனம்

7. இந்த உடல் பகுதி துணிவைக் குறிக்கிறதாமே!

8. யாராவது

9. கூர்மையாக்குதல்

10. மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறு



POST

“இந்தக் கடிதாசியை போஸ்ட் ஆபீசிலே போஸ்ட் செய்துடு” என்று படிப்பறிவில்லாத கிராமத்துத் தாத்தா கூடக் கூறும் அளவுக்கு post என்ற வார்த்தையை அஞ்சல் என்கிற அர்த்தத்துடன் இணைத்துப் பார்க்கிறோம்.

கம்பம் என்ற அர்த்தமும் post என்ற வார்த்தைக்கு உண்டு. Flag post, Goal post, Winning post.

சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் கருத்துகள் மற்றும் புகைப்படங்களைக்கூட post என்று சொல்கிறார்கள். In a recent post he cautioned about the dangers of using a substandard mobile charger.

மேலே உள்ளவை post என்ற வார்த்தையை noun ஆகப் பயன்படுத்தும்போது அளிக்கும் அர்த்தங்கள்.

Post என்பதற்குப் பிறகு என்றும், அதற்குப் பின்னால் என்றும் அர்த்தங்கள் உண்டு. ஒரு விஷயத்தை postpone செய்வது என்றால் அதை ஏற்கெனவே செய்வதாகத் திட்டமிட்ட நேரத்திலிருந்து தள்ளி வைப்பது.

Post mortem என்பது இறந்த ஒரு உடலை ஆராய்வது (Pre-mortem என்று ஒரு வார்த்தை இருக்கிறது என்றால் நீங்கள் நம்ப வேண்டும். இது ஒருவர் இறப்பதற்கு முன்பு செய்யப்படுவது. அதாவது ஒருவர் சாகக் கிடக்கிறார் என்றால் அந்த நிலை குறித்த மருத்துவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் ஆராய்ச்சி).

Pip someone to the post என்றால் மயிரிழையில் போட்டியாளரை வெல்வது என்ற அர்த்தம்.

Postal address, postal delivery போன்ற வார்த்தைகளைக் கொண்டு அஞ்சல் என்ற ஒரே வார்த்தை postal என்ற சொல்லுக்குப் பொருளாக நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், going postal என்றால் மிகமிகக் கோபப்படுவது என்று அர்த்தம். When he saw the news item, he went postal.

Keep someone posted என்றால் சமீபத்திய தகவல்களைக் கூட ஒருவருக்குத் தொடர்ந்து தெரியப்படுத்திக்கொண்டிருப்பது என்று பொருள்.

கார்ட்டூன் என்பதற்கும் காமிக் என்பதற்கும் என்ன வித்தியாசம்? எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.

கார்ட்டூன் என்பது ஒரு single panel image. இது நகைச்சுவையான அல்லது சிந்தனையைத் தூண்டும் ஒரு கருத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

காமிக் என்பது தொடர் ஓவியங்கள். அதாவது ஒரு கதையை அடுத்தடுத்த படங்களில் விவரிக்கும்.

சில சமயம் ஒரு கார்ட்டூன் என்பதே அடுத்தடுத்த படங்களின் மூலம் விளக்கப்படலாம் (கீழே உள்ளதைப் போல). அப்போது அதை Cartoon strip என்பார்கள். மூன்று நான்கு படங்களிலேயே ஒரு முழுக் கதை அல்லது சம்பவம் விளக்கப்பட்டால் அதை Comic strip என்பதுண்டு.



SAME – SIMILAR - TYPICAL

Same, similar இரண்டு வார்த்தைகளும் ஒன்றையே குறிக்கிறதா? இல்லை. Their meanings are similar. But not same.

நான் உங்களுக்கு ஒரு 100 ரூபாய் நோட்டைக் கொடுக்கிறேன். பத்து நிமிடம் கழித்து “எனக்கு 100 ரூபாய் வேண்டும்” என்கிறேன். நான் கொடுத்த அதே 100 ரூபாய் நோட்டை நீங்கள் திருப்பிக் கொடுத்தால் அது same currency. மாறாக வேறொரு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்தால் அது similar currency. Same என்றால் அதுவே. Similar என்றால் அதுபோலவே. வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் என்று இரண்டு படங்களைக் கொடுப்பார்களே. அவை similar pictures, same pictures அல்ல.

Typical என்ற வார்த்தையும் கொஞ்சம் இதே அர்த்தம் கொண்டது. என்றாலும் அதன் பொருளை ‘வழக்கமான’ என்று கொள்ளலாம். A typical day என்றால் வழக்கமாக ஒரு நாள் எப்படி இருக்குமோ அது போன்றது. Typical symptoms என்றால் அந்த நோய்க்கு வழக்கமான அறிகுறிகள் எவையோ அவை என்று அர்த்தம்.



“Above, over ஆகிய இரண்டும் ஒரே பொருள் கொண்டவைதானே?’’.

நண்பரே, ஒரே பொருள்தான். He built an extra room above the garage என்றும் கூறலாம். He built an extra room over the garage என்றும் கூறலாம். ஆனால், வேறு சில பயன்பாடுகளில் குறிப்பிட்ட வார்த்தையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

ஆவணங்களில் above என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்படுகிறது. Please do not write above the line.

மற்றபடி ஒன்றை மூடும் வகையில் மேலே இருந்தால் over என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். Put the blanket over the chair.

எப்போது under என்பதைப் பயன்படுத்துவது? எப்போது below என்பதைப் பயன்படுத்துவது என்று அடுத்ததாகக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. Over என்பதன் எதிர்ச்சொல் under. Above என்பதன் எதிர்ச்சொல் below.



சிப்ஸ்

# First hand information என்றால்?

பிறர் மூலமாக இல்லாமல் நேரடியாக நீங்களே அறிந்துகொண்ட உண்மை.



# Beauty sleep என்றால்?

நள்ளிரவுக்கு முந்தைய தூக்கம்.



# அலுவலகக் கடிதப் போக்குவரத்துகளில் இடம்பெறும் ‘ever and anon’ என்றால்?

அடிக்கடி. He comes to my house ever and anon.



- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x