Published : 13 Jun 2017 08:53 AM
Last Updated : 13 Jun 2017 08:53 AM

அறிவியல் சாதனை: இஸ்ரோவின் பாகுபலி

விண்வெளிக்கு அதிகபட்சம் பொதிகளை எடுத்துச்செல்ல இதுவரை குட்டியானை டிரக் மட்டுமே வைத்திருந்தது இஸ்ரோ. கடந்த வாரம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவூர்தி ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் ‘பாகுபலி’ கண்டெய்னர் லாரியாக நிமிர்ந்து நிற்கிறது. இருநூறு யானைகளின் எடை கொண்ட ராக்கெட் 36,000 கி.மீ. உயரே புவியிணக்கப் பாதையில் நான்கு டன் எடைஉடைய செயற்கைக்கோளை ஏந்திச்சென்று விண்ணில் செலுத்தும் ஆற்றல் பெற்றது இந்த ஜி.எஸ்.எல். வி. மார்க் III ஏவூர்தி ராக்கெட்.

பொதுவாக, விண்வெளியில் இரண்டு இடங்களில்தான் செயற்கைக்கோள்கள் நிறுத்தப்படும். தாழ்விண்வெளி சுற்றுப்பாதையில் சராசரியாக 400 முதல் 600 கி.மீ. உயரத்தில் தொலையுணர்வு வானிலை ஆய்வு வேவுபார்க்கும் விண்கலத்தை நிறுத்துவது வழக்கம். அதை அடுத்து, தொலைத்தொடர்புக்கு வேண்டிய செயற்கைக்கோள்களை 35,786 கி.மீ. உயரத்தில் புவியிணக்கச் சுற்றுப்பாதையில் செலுத்துவார்கள். விதிவிலக்காக இடைப்பட்ட உயரத்தில் சில விண்கலங்கள் செலுத்தப்படுவதுண்டு.

சிறிய கல்லைக் குறிப்பிட்ட உயரம் வீசுவதற்குத் தேவைப்படும் உந்தத்தைவிடப் பெரிய கல்லை அதே உயரத்துக்கு வீச பல மடங்கு உந்தம் தேவைப்படும் அல்லவா? எனவே, சிறிய பொதியை விண்வெளிக்கு அனுப்புவதைவிடக் கூடுதல் உந்தம் தரும் ராக்கெட் இருந்தால்தான் கூடுதல் நிறையுடைய பொதியை விண்வெளிக்கு அனுப்ப முடியும். ஆனால், அதை இஸ்ரோ எப்படிச் சாத்தியப்படுத்தியது?


தொடர் முயற்சியின் பலன்

இந்தியா தற்சார்பாகச் செயற்கைக்கோள்களைப் உருவாக்குவது ஒன்றும் புதிதல்ல. தொலைத்தொடர்பு வானிலை, தொலையுணர்வு போன்ற பல செயற்கைக்கோள்களை இஸ்ரோ தானே தயாரித்து விண்ணில் ஏவியுள்ளது. ஆயினும் 4-6 டன் நிறை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேறு நாடுகளின் ராக்கெட்டுகளைத்தான் இதுவரை இஸ்ரோ பயன்படுத்திவந்தது. இந்தப் பின்னணியில்தான் தமக்கு வேண்டிய தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களைக்கூடத் தானே ஏவும் திறன் கொண்ட ராக்கெட் தயாரிக்கும் பணியில் 1980-ல் இறங்கியது இஸ்ரோ.

புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லவேண்டும் என்றால் அதன் இறுதிகட்ட ராக்கெட் இன்ஜின் கிரையோஜெனிக் வகைப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தை சோவியத் விஞ்ஞானிகளிடமிருந்துதான் இந்தியா கற்றுக்கொண்டது. ஆனால், நமது சூழலுக்கு ஏற்ப வடிவமைத்தபோது ஆரம்பக் கட்டங்களில் தோல்வியைச் சந்தித்தது. துவளாமல் தொடர்ந்து முயன்று இறுதியில் வெற்றியை அடைந்த கதையின் கிளைமாக்ஸ்தான் ஜி.எஸ்.எல்.வி.III.

நிர்பந்தம் மீறி உதவிய கதை

சோவியத் யூனியன் இஸ்ரோவுக்கு கிரையோஜெனிக் தொழில்நுட்பம் தர ஒப்பந்தம் செய்துகொண்டது. கிரையோஜெனிக் இன்ஜின் கொண்டு ராக்கெட் மட்டுமல்ல; கண்டம்விட்டுக் கண்டம் பாயும் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணையைக் கூட ஏவ முடியும். அத்தகைய சக்திவாய்ந்த தொழில்நுட்பம் இந்தியா போன்ற நாடுகளுக்குக் கிடைக்கக் கூடாது என அமெரிக்கா முதலிய சக்திவாய்ந்த நாடுகள் சோவியத் யூனினுக்கு நெருக்கடிக் கொடுத்தன. இந்த நிர்பந்தங்களை மீறி சோவியத், இந்தியாவுக்கு ஆறு இன்ஜின்களைத் தந்தது. சோவியத், விஞ்ஞானிகளின் உதவியோடு அந்த இன்ஜின்களை இயக்கக் கற்றுக்கொண்டு அதிலிருந்து தானே தனக்கு வேண்டிய கிரையோஜெனிக் இன்ஜினைத் தயாரிப்பதுதான் இந்தியாவின் திட்டம்.

இடையில் சோவியத் தகர்ந்து ரஷ்யா உருவானது. கோர்பசேவ் நீங்கி போரிஸ் யெல்ட்சின் ரஷ்யாவின் அதிபரானார். இந்தச் சூழலில் அமெரிக்க நிர்பந்தத்துக்கு ரஷ்யா அடிபணிந்தது. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது. அவ்வாறு முறிக்கும் முன்னர் இறுதியாக வெறும் ஏழு இன்ஜின்களை மட்டும் இந்தியாவுக்கு அளித்தது ரஷ்யா.

பழுதை நீக்கும் முயற்சி

கையில் கிடைத்த பொம்மையைப் பிரித்து ஆராய்ந்து, அது எப்படி வேலைசெய்கிறது எனத் தானே அறிந்து மறுபடியும் பொருத்தும் துறுதுறு குழந்தையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மாறினர். அந்த ஏழு இன்ஜின்களை வைத்து ஆய்வு செய்து கற்றுத் தெளிந்தனர். தாமே கிரையோஜெனிக் இன்ஜினை வடிவமைக்கவும் செய்தனர். முதலில் தயாரித்த இன்ஜின் ரஷ்ய மாடலாக இருந்தது. அந்த வடிவமைப்பில் சில சிக்கல்கள் எழுந்தன. ஜி.எஸ்.எல்.வி.1- ல் KVD-1 இன்ஜினில் ரஷ்ய வகை வடிவமைப்புதான் இருந்தது.

ரஷ்யாவின் வடிவமைப்பில் பம்ப் உள்புறமாக அமைந்து விடுவதால் எளிதில் இதைச் சோதிக்க முடியாது. அதனால் பழுதுகளை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைப் பயன்படுத்தியதால் ஜி.எஸ்.எல்.வி. தோல்வியைத் தழுவியது. பாடம் கற்ற இஸ்ரோ கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைப்பை மாற்றி அமைக்க முடிவு செய்தது. புதிதாக வடிவமைத்த CE20 என்ற இன்ஜினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

பம்ப் இயக்கும் பகுதி வெளியே வருமாறு அமைக்கப்பட்டது. இதன் காரணமாக இன்ஜினின் செயல்திறன் 4% குறைந்துபோனது என்றாலும் பழுது நீங்கியது. மேலும், கிரையோஜெனிக் ராக்கெட் செல்லும் திசையை நிலைப்படுத்த ரஷ்ய மாடலில் இருந்த ஜோடி வெர்னியர் இன்ஜின்களை நீக்கி முற்றிலும் இந்திய வடிவமைப்பில் CE20 இன்ஜின் வடிவமைக்கப்பட்டது.

புதிய சாதனை

இந்த இஸ்ரோ சாதனையில் ராக்கெட் மட்டும் புதிதல்ல. இப்போது பரிசோதனை முறையில் நவீன மின் உந்துவிசை (electric propulsion) இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக, புவியிணக்கச் சுற்றுப்பாதைக்குச் செலுத்த முதலில் இடைமாற்றப் பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்படும். அப்போது அந்தச் செயற்கைக்கோள் மிகுந்த நீள்வட்டப் பாதையில் செல்லும். பூமிக்கு அருகே சில நூறு கிலோமீட்டர் அருகே வந்து கிட்டத்தட்ட 36,000 கி.மீ. உயரே செல்லும். அவ்வாறு செல்லும் நிலையில் செயற்கைக்கோளில் உள்ள சிறு ராக்கெட்களை இயக்கி சரியான இடத்தில் விண் வெளியில் செயற்கைக்கோளை நிறுத்துவார்கள்.

இதுவரை பூமியிலிருந்து அனுப்பும் தகவல்களைச் செயற்கைக்கோள் வாங்கித் திரும்பவும் பூமிக்கு அனுப்பும். அவ்வாறு திரும்பவரும் சமிக்ஞை இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்றுசேரும். எடுத்துக்காட்டாகத் தமிழகத்துக்கு மட்டுமே வந்துசேர வேண்டிய தகவல் அவசியமே இல்லாமல் அசாமுக்கும் சென்றடைந்துகொண்டிருந்தது. இம்முறையில் சில பீம்களாகப் பூமிக்குத் தகவல் அனுப்பப்படும். எனவே, தேவையான இடத்துக்கு மட்டும் கூடுதல் வலுவுடன் தகவல் வரும்படி வடிவமைத்துள்ளனர்.

இதுவரை இருந்த தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தை மாற்றியமைத்துப் புதுமுறையில் இந்தச் செயற்கைக்கோளின் மின்னணுக் கருவிகள் செயல்படும். இதன் காரணமாக முன்பைவிடவும் ஆறு, ஏழு மடங்கு கூடுதல் தொடர்புகளை இனி செயற்கைக்கோளால் தர முடியும். ஆகவே, ஆப்டிகல் கேபிள் சென்றடையாத இடத்துக்கும் தங்குதடையின்றி இண்டர்நெட் சேவைகளைத் தரும் திறன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x