Published : 27 Oct 2014 06:26 PM
Last Updated : 27 Oct 2014 06:26 PM

அர்த்தமும் அனர்த்தமும்

சமீபத்தில் சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு ஆங்கிலப் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது அதன் தாளாளர் நகைச்சுவையாக ஒரு சம்பவத்தை (கதையை) மாணவர்களிடம் விவரித்தார். “I will give you a ring tomorrow’’ என்று ஓர் ஆசிரியரிடம் அவர் கூற, அந்த ஆசிரியர் ஆர்வத்துடன் விரலைத் தடவியபடி தங்க மோதிரத்துக்காகக் காத்திருந்து, தொலைபேசி அழைப்பை மட்டும் பெற்று ஏமாந்தாராம். (தினசரிப் பேச்சுவார்த்தையில் give a ring என்பது தொலைபேசியில் அழைப்பது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்).

அர்த்தமும் அனர்த்தமும்

சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொண்டால் கோபமோ, வருத்தமோ உண்டாவது சகஜம்தான்.

உறவினர் வீட்டுக்கு நண்பரோடு சென்றிருந்தேன். ஏற்கெனவே நண்பரை அறிந்திருந்த உறவினர் “He is a man of his words’’ என்று புகழ்ந்து பேசினார். வீடு திரும்பும்போது நண்பரின் முகம் சிறுத்துக் காணப்பட்டது.

“நான் என்ன பேச்சோடு சரியா? காரியத்திலே சைபரா?’’ என்றார். பிறகு அவருக்கு விளக்கினேன். Man of his words என்றால் நம்பகத் தன்மையோடு பேசுபவர் என்ற அர்த்தம் என்று விளக்கினேன். இயல்பானார்.

ஒருவரின் செல்போன் தொலைந்து விட்டது. அவருடைய நண்பர் அதைப் பல இடங்களிலும் தேடிப் பார்த்தார். தொலைத்தவர் நண்பரைப் பற்றி “He spared no efforts’’ என்று கூற, மனம் வெறுத்துப் போனார் நண்பர். அதற்கு அவசியமில்லை. அந்த வாக்கியத்துக்கு “எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என்ற அர்த்தமில்லை. “எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை’’ என்ற பாசிட்டிவான பொருள்தான்.

விஷமமும் விபரீதமும்

இதோ ஒரு கற்பனைச் சம்பவம். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினர் மெத்தப் படித்த மகனும், மருமகளும். “என்னம்மா கோகுல் ரொம்ப விஷமம் பண்ணாமல் இருந்தானா?’’ என்று அவர்கள் கேட்க, பேரனைப் பாதுகாத்துக் கொண்டிருந்த பாட்டிக்கு ஏனோ தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அவன் செய்த விஷமங்களைப் பட்டியல் இடத் தொடங்கினார். “Gokul kicked the bucket’’ என்று கூற, மருமகள் வீலென்று அலற, பிறகுதான் விவரத்தைப் புரிந்து கொண்டனர். ஆங்கிலத்தில் ‘Kicked the bucket’ என்றால் இறந்துவிட்டார் என்று பொருள். (ஒருவேளை முன்னொரு காலத்தில் தூக்கிலிடும்போது மரண தண்டனைக் கைதியின் காலுக்குக் கீழே உள்ள பக்கெட்டை எட்டி உதைத்து விடுவார்களோ?)

உங்கள் வீட்டில் தங்கியவர் வேறிடத்துக்குச் சென்றுவிட்டார் என்றால் “He is no more here’’ என்று சொல்லுங்கள் தப்பில்லை. ஆனால் மறந்து போய் more என்பதற்கும் here என்பதற்கும் நடுவே பெருத்த இடைவெளியை விட்டுத் தொலைக்காதீர்கள். ‘இங்கு இல்லை’ என்பதற்குப் பதிலாக ‘உலகத்திலேயே இல்லை’ என்கிற அர்த்தம் தோன்றிவிடும்.

“Break a leg” என்றால் காலை உடைத்துக் கொள் என்று அர்த்தமில்லை. “All the best”, “நல்லாப் பண்ணு” என்பது போன்ற அர்த்தம்தான் அதற்கு. நாடகத்தில் நடிப்பவர் களுக்குதான் இந்த வகை வாழ்த்து (?) தொடக்கத்தில் கூறப்பட்டு வந்தது.

பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி குறுக்குவழியில் காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் உண்டு. They throw their weight around. (அதாவது அதிக எடை கொண்டவர்கள் என்பதில்லை. ‘அவர் வெயிட்டான பார்ட்டி’ என்று சொல்கிறோமே அந்த அர்த்தம்).

எடுத்துக்காட்டும் சுருக்கமும்

e.g. மற்றும் i.e. ஆகிய இரண்டு பயன்பாடுகளுக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு.

லத்தீன் மொழியிலுள்ள ‘Exemply–gratia’ என்பதன் சுருக்கம்தான் e.g. இதற்குப் பொருள் ‘எடுத்துக்காட்டாக’ என்பதாகும். அதாவது பல உதாரணங்களைக் கூற முடியும்போது அவற்றில் ஒன்றைக் கூறுவது.

History has seen great orators. e.g. Vivekananda.

Many diseases are spread by mosquitoes. e.g. Malaria

லத்தீன் மொழியிலுள்ள idest (சுருக்கமாக i.e.) என்பதன் அர்த்தம் that is. அதாவது கொடுக்கப்பட்டுள்ள உதாரணம் மட்டுமே அந்த விளக்கத்துக்கு இருக்க முடியும். America was named after the person who discovered it, i.e. Amerigo Vespucci.

Lethal – Fatal

Fatal accident என்று அடிக்கடி நாளிதழில் பார்க்கிறோம். Fatal என்றால் – இறப்பில் முடிந்த என்ற அர்த்தம். அதாவது அந்த விபத்தில் யாரோ இறந்திருக்கிறார்.

Lethal என்பதும் கிட்டத்தட்ட இதே அர்த்தம் கொண்டதுதான். என்றாலும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. Lethal என்றால் இறப்பு நேர்ந்து விட்டது என்று அர்த்தம் அல்ல. இறப்பு உண்டாக வாய்ப்பு உண்டு என்பதைக் குறிக்கிறது அது. Lethal dose of a medicine என்றால் அந்த மருந்தை உட்கொண்டால் இறப்பு உண்டாக வாய்ப்பு உண்டு. அதாவது இறப்பு நேர்ந்து விடவில்லை. நேரிடலாம். ஆனால் fatal என்றால் இறப்பு நேர்ந்துவிட்டது.

ஆங்கிலத்தின் சரியான அர்த்தத்தை உணராமல், அனர்த்தமாகப் புரிந்துகொண்டு விடக் கூடாது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x