Published : 16 Mar 2014 08:00 PM
Last Updated : 16 Mar 2014 08:00 PM

ஆரணியில் பாதியில் நிற்கும் ரயில் திட்டங்கள்!

# ஆரணியில் நூற்றுக்கணக்கான அரிசி ஆலைகள் உள்ளன. இங்கிருந்து அரிசி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. எனவே, ஆரணியில் நெல், அரிசி வர்த்தக மையம் அமைக்க வேண்டும்.

அதேபோல் கைத்தறிப் பட்டு நெசவாளர்கள் அதிகம் உள்ளதால், இங்கு ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

# ஜவ்வாது மலைப் பகுதி மற்றும் செஞ்சிக் கோட்டை ஆகியவற்றைச் சுற்றுலாத் தலமாக அறிவித்து அங்கு போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

# திண்டிவனம்-வந்தவாசி-செய்யாறு-ஆரணி- நகரி புதிய ரயில் பாதைத் திட்டப் பணிகள் பாதியில் நிற்கின்றன. அந்தப் பணிகளைத் தொடங்கி விரைவில் அந்த வழித்தடத்தில் ரயிலை இயக்க வேண்டும்.

# திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில் பாதைத் திட்டமும் பாதியில் நிற்கிறது. இதனை மீண்டும் தொடங்க வேண்டும். திருவண்ணாமலையையும் காஞ்சிபுரத்தையும் இணைக்கும் வகையில் ஆரணி - செய்யாறு - காஞ்சிபுரம் வழியாகப் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். இதன் மூலம் ஆரணியிலிருந்து சென்னைக்கும் தென் மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் நேரடியாகச் செல்ல முடியும்.

# வேலூரிலிருந்து ஆரணி வழியாகத் தென் மாவட்டங்களுக்குப் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் வகையில் நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும். ஆரணி நகரைச் சுற்றி வட்டச் சாலைத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

# ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தைப் புறவழிச்சாலையில் அமைக்க வேண்டும்.

# ஆரணியில் தற்போது இருக்கும் காய்கறி சந்தையை விரிவாக்கம் செய்து ஒருங்கிணைந்த காய்கறி, மலர் சந்தை வளாகம் அமைக்க வேண்டும்.

# மேல்மருவத்தூர் கோயிலுக்குத் தமிழகத்தில் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தினசரி ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்குக் கழிப்பிடம் மற்றும் தங்கும் வசதிகள் செய்துதர வேண்டும்.

# ஆரணி தொகுதிக்கு உட்பட்ட நான்கு வழிச் சாலையில், குறிப்பாக செஞ்சியில் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. எனவே, பள்ளி, குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும்.

# ஜவ்வாது மலையில் தேன் உற்பத்தியை ஊக்குவித்து, வங்கிக் கடன்கள் அளிக்க வேண்டும். மேலும், ஜவ்வாது மலைத் தேனுக்கு காப்புரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களின் அநேகப் பணியிடங்கள் காலியாக உள்ளன. உடனடியாக அவற்றை நிரப்ப வேண்டும். ஆரணியில் அவசரச் சிகிச்சைப் பிரிவு இல்லாததால் நோயாளிகள் வேலூருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆரணி அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவு தொடங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x