Last Updated : 18 Jul, 2016 04:14 PM

 

Published : 18 Jul 2016 04:14 PM
Last Updated : 18 Jul 2016 04:14 PM

பியானோ இன் தி ஃபேக்டரி: தழுவும் வறுமையும் கலாச்சார சிக்கல்களும்!

நல்ல மனிதர்கள் தங்களது வாழ்க்கையிலிருந்து சில நேரங்களில் தூக்கியெறியப்படுவார்கள், நல்ல நோக்கமிருந்தால் திரும்பவும் அதே வாழ்க்கை அவர்களுக்கு கைகொடுக்கும் என்பதற்கு The Piano in Factory எனும் சீனத் திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம்.

இன்றைய அவசர உலகத்தில் அன்பு அரவணைப்பு என்பதெல்லாம் ஏதோ அந்தக்கால இதிகாச வார்த்தைகளோ என்பதுபோல ஆகிவிட்டது. இப்படத்தின் நாயகன் சென் குலீன் பிரிந்துபோன மனைவிக்காக காத்திருக்கிறான். பெற்றெடுத்து வளர்த்த மகளை பிரியாமல் இருக்க எதையாவது செய்தே ஆகவேண்டும் என்றெல்லாம் முயற்சிக்கிறான். சதா அதற்காக அவன் பாடுபடவும் செய்கிறான். ஆனால் உடனுக்குடன் எதுவும் சரியாகவில்லை என்பதுதான் பிரச்சினை.

ஆட்குறைப்பு பூதம் அவனது வேலையையும் விழுங்கிவிடுகிறது. ஒரு ஸ்டீல் தொழிற்சாலையிலிருந்து வெளியே துப்பப்படும் சென் இசைக் கச்சேரி நடத்தி பிழைப்பை ஓட்டுகிறான். அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை வெறுங்கனவு என்பதை நன்குணர்ந்த சென்னின் ஆடம்பரப் பிரிய மனைவி, பணக்கார தொழிலதிபர் ஒருவருடன் வாழ நகருக்கு இடம்பெயர்கிறாள். அதுவரை ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை வண்டி சற்றே ஆட்டம் காண அதை எப்படியெல்லாம் சரி செய்கிறான் என்பதை படம் விரிவாகப் பேசுகிறது.

மனைவியைப் பிரிந்த நாட்களில் மனம்கெட்டுப்போன சென் தனது இசைக்குழுவோடும் தன் தோழி கின் ஹாய் லுவுடனும் அக்கார்டியன் வாசித்தபடி இசைக்குழுவை நடத்திக்கொண்டிருக்கிறான். வருமானம் இல்லாவிட்டாலும் தன் மகள் பியானோ கற்றுக்கொள்ள ஓரளவு செலவு செய்துவருகிறான்.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூட படிப்பு தவிர மாலைவேளைகளில் பியானோ படித்துவந்த மகளை அழைத்துவந்த மனைவி இனி இல்லை. மகள் பியானோ வகுப்பிலிருந்து கிளம்பவேண்டிய நேரத்தில் இவன் எங்காவது கச்சேரியில் இருப்பான். தான் சம்பாதித்தவந்த சொற்ப வருமானத்தை வைத்து குழந்தையின் இசை வகுப்பை எப்படியாவது தொடர வேண்டுமென்பதுதான் சென்னுக்கு ஆசை. ஆனால் சில நடைமுறைப் பிரச்சினைகளால் அவளது இசை வகுப்பு தொடர முடியாமல் போகிறது.

ஆனால் நேரங்கெட்ட நேரத்தில் வந்து குழந்தையை அழைத்துச்செல்லும் சென்-னை இசையாசிரியை திட்டினாலும்கூட ஒரு யோசனை சொல்கிறாள். ''உங்கள் மகளுக்கு இசைமீது அதிகம் ஆர்வம் உள்ளது. அவளுக்கு பியானோ வாங்கிக் கொடுத்தீர்களானால் அதுவே நீங்கள் அவளுக்கு செய்யும் மாபெரும் உதவி''யென்று.

வேறுவழியின்றி இசைவகுப்பிலிருந்து மகள் நிறுத்தப்பட வருத்தம் அவனை வாட்டுகிறது. மகளுக்கு சொந்தமாக பியானோ வாங்கித் தருமளவுக்கு அவனிடம் துளியும் பணம் இல்லை. விவாகரத்து வழக்கில் நீதிமன்ற பொறுப்பில் இருக்கும் அந்தக் குழந்தைக்கு யார் பியானோ வாங்கித் தருகிறார்களோ அவர்களிடம் குழந்தை செல்லமுடியும் என்கிற நீதிமன்ற வழிகாட்டுதலும்கூட அவனை விழிபிதுங்க வைக்கின்றன. இதைத் தாண்டி அவன் தன் மனைவியை நேசிக்கத்தான் செய்கிறான். ஆனால் அவள் பிரிந்துசெல்வதை இவனால் எப்படித் தடுக்கமுடியும்.

ஒரு இடத்தில் நிலைகொண்டபின் திரைப்படம் ஒரு அடுக்குத் தாமரையைப்போல அழகழகாக வெவ்வேறு இதழ்களை விரிக்கிறது. மனைவி பிரிந்துபோனபின் சென்னுக்கு நல்ல பல மனிதர்களின் வாசம் இருப்பதை பார்வையாளனின் மனமெங்கும் படரவிடுகிறது.

ஒரு பக்கம் விவாகரத்து வழக்கு, இன்னொரு பக்கம் கல்யாணம், நைட்கிளப், இசைக் கச்சேரி, வேறொரு பக்கம் பியானோ வாங்க பணம்வாங்க யார்யாரிடமோ சென்று கேட்டுப் பார்ப்பது, பிரிதொரு பக்கமோ குழந்தையைப் பார்த்துக்கொள்வது. அடுத்து ஒரு பக்கமோ இசைக் கச்சேரி பாடகித் தோழியுடன் அடிக்கடி பிரிவும் நட்பும், இவ்வாறு படத்தின் மையப்பாத்திரமான சென்னின் செயல்கள் பரிதாபமாக இருந்தாலும் வேடிக்கையாகவும் உள்ளன.

பிரிந்துசென்ற மனைவி விண்ணப்பித்த விவாகரத்து வழக்கு நீண்டகாலம் கழித்து பிரச்சினையாக உருவெடுக்கிறது. அவர்களது மகளும் வலிந்து பிரிக்கப்படுகிறாள்.

அண்ணனது சொந்த ஃபேக்டரிக்கு சென்று அவரிடம் பியானோ வாங்கித்தர உதவி நாடி நிற்கிறான். ஆனால் அங்கே சம்பளம் உயர்த்தித் தர முடியாத நிலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்கத் தயாராகிக்கொண்டிருப்பார்கள். பேச்சுவார்த்தை பலனின்றி போராட்டமும் வலுக்க கடைசியில் தொழிற்சாலையை இழுத்து மூடும் நிலை உருவாகிவிடும். எல்லாவற்றையும் நேரில் பார்த்துவிட்டு மேற்கொண்டு அவரிடம் வற்புறுத்தமுடியாமல் வந்துவிடுகிறான்.

உண்மையான பியானோ வாங்கித்தர இயலாத நிலையில் குழந்தைக்கு ஏக்கம் வந்துவிடக் கூடாது என சென் நினைக்கும்போது, நீண்ட மேசையையே பியானாவாக மாற்றுகிறான். அதில் ஸ்வரக்கட்டைகளை ஓவியமாக வரைந்து வாசிக்கச் சொல்கிறார். சிலநாட்கள் அந்தமாதிரி கற்பனையாக விரல்கள் இசைக்க அதிலும் சலித்து மகள் அப்பாவைத் திட்டுகிறாள். ஒருநாள் சிலநாள் அதில் விளையாடலாம். அதையே தொடரவேண்டும் என்றால்? குழந்தை கடுமையாக தந்தையை முறைத்துவிட்டு எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு போகும் காட்சியில் சென் பரிதாபமாக பார்க்கும் பார்வை... - இனிய நகைச்சுவை.

பணம் கொடுத்து உதவ முடியாத நண்பர்கள் சில குறுக்கு யோசனை சொல்ல அதன்படி ஒரு நள்ளிரவில் பள்ளிக்கூட மதில்சுவர் ஏறி குதித்து வகுப்பறையிலிருந்து ஐந்தாறுபேர் சேர்ந்து பியானோவை திருடி இழுத்து வருவார்கள். செக்யூரிட்டியின் விஸில் சத்தம் கேட்க பியானோவை மைதானத்தில் பாதி தூரத்தில் விட்டுவிட்டு ஓட முயற்சித்து கடைசியில் ஜெயிலில் கம்பி எண்ணுவார்கள்.

சென்னின் சிறைவாசத் தருணத்திலும் கனவில் தன்குழந்தை பியானோ வாசிப்பதும் தேவதைகள் பூ தூவுவதும் வித்தியாசம். நல்லவேளையாக பெயிலில் வெளியே வந்தபிறகு மேலுமொரு யோசனை, பியானோவை நாமே செய்தால் என்ன?

யாருடைய உதவியும் கிடைக்காத நிலையில் சொந்தமாக பியானோ செய்வதென்று அவன் முடிவெடுக்கிறான். அதற்குரிய விதிமுறைகளை அறிந்து அதன் நுணுக்கங்களைப் பின்பற்றி உண்மையிலே அவரது அண்ணனின் மூடப்பட்ட தொழிற்சாலையைத் திறந்து சில நண்பர்களை வரவழைத்து பியானோ உருவாக்கும் முயற்சி ஆரம்பமாகும்.

இவரது அண்ணன் தொழிற்சாலையில் பியானோ செய்யும் பணிநீண்டு செல்லும். பியானோ தயாராகி முடியும் தருவாயில் அண்ணன் மற்றும் நண்பர்களை போலீஸ் வந்து கைதுசெய்வது யாரும் எதிர்பாராதது. தன்னிடம் ஸ்டீல் பியானோ செய்ய ஸ்கிராப் மெட்டீரியல் இருப்பு இல்லாதநிலையில் தம்பிக்காக இவர் மூடப்பட்ட அரசு தொழிற்சாலையில் திருடச் சென்றதற்காகவே அவர் கைது செய்யப்படுகிறார்.

குடும்பம் எனும்போது ஆண்-பெண் உறவு மிக முக்கியம். அதன் நூலிழை அளவேயுள்ள விரிசல் நூறாயிரம் சிக்கல்களையும் ஏற்படுத்திவிடக்கூடிய சாத்தியங்களைப் பேசும் இப்படத்தின் திரைக்கதைப் போக்கு ஒருவிதத்தில் பைத்தியம் பிடித்த குதிரையின் பாய்ச்சலோ என்றும் தோன்றுகிறது. அதனாலேயே நகைச்சுவை எனும் நதியில் கதையோடம் மிதந்துசெல்ல வைத்துள்ளார்கள் போலிருக்கிறது.

ஆனால் கூர்ந்து கவனிக்கும்போது விஷயமே வேறாக இருக்கிறது. 1. உலகமயமாக்கலின் தாக்கம், 2. பியானோ எனும் மேற்கத்திய படிமம். 3. குடும்பம் எனும் கீழைதேசியங்களின் ஆதார உறவுகளின் பிணைப்பு.

இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிலையில் இப்படியொரு கதைப்போக்கு 90களின் உலகமயமாக்கலின் சாகசம் உலகமெங்குமே அதன் தாக்கம் கடுமையாக இருந்ததை உணர்த்துவதுதான் இப்படத்தின் நோக்கம். அந்த உலகமயமாக்கலோடு வீடு எனும் அற்புதமான கூட்டையும் கலைத்துவிட்டதுதான் அதன் உச்சபட்ச சாதனை. நம்மிடம் வந்து சேர்ந்துள்ள மேற்கத்திய கலாச்சாரத்தின் பக்கவிளைவு இது.

கதையில் திடீர் திருப்பங்கள் என்றெல்லாம் எதுவுமில்லை. தனது இசைக்கச்சேரியின் பாடகியான தோழியுடன் கூட அடிக்கடி மனத்தாங்கல். உலக அரசியலை ஒரு படைப்பில் தெரிந்த ஒன்றையே வறட்டுத்தனமாக நேரடியாக தந்துவிடாமல் தெரியாத ஒன்றான பியானோ எனும் படிமதைக்கொண்டு இட்டுநிரப்பி இன்னொன்றை உணர்த்தும் முயற்சியாக இப்படைப்பு அமைந்துள்ளது.

வாங் சந்தோசமும் குழப்பமுமான ஆனால் குழந்தையை விட மனமில்லாத தந்தையாகவே வாழ்ந்துகாட்டியிருக்கிறார். அதேபோல ஒரு அரவணைப்பு மற்றும் உண்மைத்தன்மை படைத்த காதலியாக கின் நடித்துள்ளார். ஒரு தோழியாக பிரிவதும் சேர்வதுமாக அவனது இசைக்குழுவின் பக்கபலமாகத் திகழும் பாடகியாக நடித்துள்ள கின் ஹாய்லுவின் நடிப்பு படத்தின் மெல்லிய நகைச்சுவைக்கு துணை நிற்கிறது.

பியானோவுக்குள் நிறைய ஸ்வரங்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. அது தரும் இசையோ மனதை இசைவிக்கும் ஏதொ ஒரு பாடலைத்தான். பியானோவுக்குள் எண்பத்து ஏழு விசைகளுக்கான உள்ளடங்கிய உதிரிபாகங்கள் பின்னிப் பிணைந்துள்ளதும் மனித மனங்களில் உருவாகும் அன்புகொள்ளவேண்டும் எனும் இசை ராகங்களை வெளிப்படுத்த தான்.

ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பியானோ கீழ்திசை நாடுகளுக்கு சம்பந்தமில்லாத ஒன்று. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தின் முக்கிய குறியீடு. இத்தாலியில் தோன்றியிருக்கலாம். அதற்கான செவிக்கினிய சொனாட்டாக்களை உருவாக்கியதில் பிரான்ஸிற்கு முக்கிய பங்கு உண்டு.

தமிழ் உட்பட அக்கால படங்கள் பலவற்றிலும் பணக்கார குடும்பங்களைக் காட்ட பியானோ தவறாமல் இடம்பெறும். அப்படியான பணக்கார குடும்பங்களை அப்படங்களின் சாதாரணப் பார்வையாளன் எக்காலத்திலும் நேரில் பார்த்திருக்க வாய்ப்புமில்லை.

பணக்கார குடும்பங்களைக் காட்டும் அத்தகைய திரைப்படங்களில் மேற்கத்திய பாணியில் நடக்கும் பார்ட்டிகளில் கதாநாயகி அந்நியர் ஒருவரோடு நடனமாடுவார். அப்பெண்மணிக்கு உரிய கதாநாயகனோ அவளது போக்கை தடம்மாறுகிறது என்று சுட்டிக்காட்டும்விதமாக பியானோ இசைத்தபடி பாடுவதை நாம் பார்த்திருப்போம்.

'கண்போன போக்கிலே கால்போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?' மேற்கத்திய மோகத்தோடு வேறொரு இணையோடு சவுகார் ஜானகி நடனமாட, எம்ஜிஆர் ஒரு படத்தில் அக்கறையோடு பாடும் பாடல் இது.

'சங்கம்' இந்திப் படத்தில் கூட தனது காதலி இன்று வேறொருவனோடு என்பதை அறியும் ராஜ்கபூர், காதலி வைஜெந்திமாலாவையும் நண்பன் ராஜேந்திரகுமாரையும் அருகருகே அமர்ந்திருக்க தன் மனதை வெளிப்படுத்திப் பாடும் 'தோஸ்து தோஸ்து நாரஹா' பாடலும் கடந்துவந்து காதலின் நினைவலைகளைக் கோரி நிற்கிறது. 'பியானோ டீச்சர்' திரைப்படம் அதீத நேசத்தில் சிக்கிய மனித உறவுகளின் பிணக்குகளைப் பேசியது என்றால் 'பியானிஸ்ட்' உலக அரசியல் போக்கினால் ஒரு எளிய கலைஞனின் வாழ்வு சிதறுண்டுபோகும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.

ஒரு வகையில் பொழுதுபோக்குப் படம்தான் என்றாலும் அதைத் தரமிக்கதாக தரவேண்டுமென்ற இயக்குநர் Zhang Meng முனைப்பு பாராட்டப்படக் கூடியது. எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா கதாபாத்திரத்திற்காகவும், பிரச்சினையில் உள்ளவர்களை அரவணைத்துக்கொள்ளும் ஒரு மென்மையான தொனி The Piano in Factory திரைப்படத்தில் தென்படுகிறது.

தொழிற்சாலையில் தயாரான பியானோவை இசைக்க வரும் குழந்தையைத் தேடிவரும் சென்னின் மனைவி குழந்தை பியானோவில் அமர்ந்து வாசித்த இசை லயத்தில் மனம் கரையவும், அதை சாதிக்க வைத்த கணவனின் அன்பில் இசைந்து நிற்கவும் வைத்த இயக்குநர் ஷாங் கிளைமாக்ஸில் உருகவைத்துவிட்டார்.

உலகமயமாக்கல் என்ற பெயரில் நடந்தது உலகம் முழுவதும் மேற்கத்திய கலாச்சார மயமாக்கலும். பொருளாதார சிக்கலும் தான். தவிர, சுய அடையாளங்களை இழந்ததையும் எதிர்கொள்ளமுடியாமல் உலகின் வேறுபட்ட பல்வேறு தேசிய இனங்களும் தவித்துநின்றதும்தான்.

திரைப்படம் 90களின் கதையை எடுத்துக்கொண்டு 2010-ல், எடுக்கப்படும்போது 20 வருடத்திற்கு முன்னிருந்த வாழ்நிலையோடு தொடர்புடைய படைப்பாளி எடுத்துத் தரும்போது ஒருவித நிதானமும் ஆகமொத்தமுள்ள பிரச்சினைகளையும் கலந்துபேசும் பரந்துபட்ட போக்கும் அமைந்துவிடுவதைப் பார்க்கமுடிகிறது.

அன்றிருந்த நெருக்கடியை இன்றும் மிக சரியாக பொருந்தும்விதமான சமூக வாழ்க்கை உலகமெங்கும் முற்றிலுமாக ஒரே போக்குதான் எனும்விதமாக பெரும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதன் விளைவான வேலை இழப்புகளும், தொழிலாளர்களின் சலுகைகள் ரத்து செய்யப்படுவதும், தொழிற்சாலைகள் மூடப்படுவதும், வேலையில்லா திண்டாட்டங்களையும் மக்கள் வறுமை நிலையையும் என தொடர்வதை இத்திரைப்படமும் மிகச் சரியாக சித்தரித்துள்ளது. அதனுடன் கலாச்சாரப் பிரச்சினையையும் பேசியுள்ளது.

உலகமயமாக்கலின் வழியே கலாச்சார சேதாரத்தை யார் உருவாக்கினார்களோ அவர்களின் உறவுகளின் மேன்மைக்கு உதவும் இசைக்கருவியைக் கொண்டே ஒரு முக்கியமான செய்தியை இப்படம் கூறுகிறது. உலகமயமாக்கல் எங்கள் வாழ்வை நிலைகுலையச் செய்தாலும் எங்களது குடும்பம் என்கிற விலைமதிப்பில்லாத கருவூலத்தை யாரும் அசைக்கமுடியாது என்பதுதான் அது.

அதுமட்டுமில்லை. குழந்தைகள் பெற்றோர்களின் அரவணைப்பில் இருந்தால் நல்ல திறமைசாலியாகவும் இருப்பார்கள். அதைவிட அன்புடைய எவர் மனங்களையும் வெல்லும் சக்தி பெறுவார்கள் என்பதையும் அழுத்தமாக பதிவுசெய்துள்ளது.

டோக்கியோ, மியாமி, பீஜிங், ஷாங்காய், தாய்பெய் என்று பெரும்பான்மை கீழ்திசை நாடுகளின் உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகைக்கான விருதுகளை மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் சிட்னி உலகப்பட விழாவிலும் இப்படம் பங்கேற்று சிறந்த திரைப்படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதை வென்றவகையில் கீழ்திசை படைப்பாவேசத்தின் விடிவெள்ளி என்பதை இத்திரைப்படம் பறைசாற்றி நிற்கிறது.

The Piano in a Factory/ Mandarin / Dir: Zhang Meng / 2010

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x