Last Updated : 06 Feb, 2016 03:37 PM

 

Published : 06 Feb 2016 03:37 PM
Last Updated : 06 Feb 2016 03:37 PM

வரிவிலக்கு விவகாரம்: ரஜினிமுருகனை முன்வைத்து உதயநிதி காட்டம்

தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படும் விவகாரத்தில், வணிக வரித்துறை செயலாளர் மீது விரைவில் சட்டப்படி வழக்கு தொடரவிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த விவகாரத்தில் ரஜினிமுருகன், கோச்சடையான் உள்ளிட்ட படங்களை முன்வைத்து அவர் காட்டமாக கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்துள்ள ‘கெத்து’ திரைப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம், இந்த நிறுவனம் விண்ணப்பித்தது. ஆனால் ‘கெத்து’ என்ற சொல் தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.

இதை எதிர்த்து ரெட் ஜெயண்ட் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, 'கெத்து' தமிழ் வார்த்தை எனவும் முதல் நாளில் இருந்து வரிச்சலுகை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் உத்தரவால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இந்த உத்தரவை முன்வைத்து ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "'கெத்து' என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று கூறி வரிச்சலுகை வழங்க மறுத்து தமிழக அரசு கடந்த ஜனவரி 14ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தோம்.

இந்த வழக்கு நீதியரசர் துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்த போது எங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சனும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சோமையாஜியும் வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதியரசர், 'கெத்து' என்பது தமிழ் வார்த்தை தான், அதனால் 'கெத்து' படத்துக்கு படம் வெளியான நாள் முதல் வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வரிச்சலுகை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம் எனது தந்தை தி.மு.கவில் பொருளாளராக உள்ள காரணத்தால் தமிழக அரசு வேண்டுமென்றே எங்கள் நிறுவனம் தயாரித்த, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை', 'வணக்கம் சென்னை', 'நண்பேன்டா' ஆகிய படங்களுக்கும் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கேளிக்கை வரி விலக்கு வழங்க மறுத்து அரசாணை வெளியிட்டு வந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.

கேளிக்கை வரிவிலக்கு பரிந்துரை குழுவினரில் ஏழு பேர் தமிழறிவு இல்லாதவர்கள் என்று கூறி, இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ள நிலையில், வேண்டுமென்றே அந்த ஏழு பேரிலிருந்து மூன்று பேரையும், தன்னுடைய உத்தரவுப்படி நடக்கும் தன்னுடன் பணியாற்றும் வணிக வரித்துறை இணை ஆணையாளர் டி.ரமாதேவி உள்ளிட்ட வேறு மூன்று பேரையும் தேர்ந்தெடுத்து, ஆக மொத்தம் ஆறு பேரை 'கெத்து' படத்தை பார்வையிட வணிகவரித்துறை ஆணையாளர் எஸ்.கே.பிரபாகர் நியமித்துள்ளார். இவர்கள் அவருடைய உத்தரவுக்கு, கீழ்ப்படிந்து 'கெத்து' தமிழ்ச்சொல் அல்ல என்று கூறி கேளிக்கை வரிவிலக்கு விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த எந்த படத்துக்கும் கேளிக்கை வரிவிலக்கு வழங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வணிக வரித்துறை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் 'கெத்து' என்பது தமிழ்ச் சொல் அல்ல என்று கூறி வரிவிலக்குக்கு பரிந்துரைக்க வேண்டாம் என அவசர கோலத்தில் கேளிக்கை வரிவிலக்கு பரிந்துரை குழுவினரிடம் அறிவுறுத்தியதன் விளைவாக இன்று நீதிமன்றத்திடம் குட்டுப்பட்டுள்ளனர்.

திருப்புகழில் உள்ள 'கெத்து' என்ற சொல் KETHU என்ற 'கெத்து' என்று GETHU என்ற 'கெத்து' அல்ல என்றும் வாதிடும் தமிழக அரசு, திருட்டு விசிடி, கோலி சோடா, கோச்சடையான் THE LEGEND 3D, சுன் சுன் தாத்தா, நாகராஜ சோழன் M.A, MLA, ரஜினி முருகன் போன்ற படங்கள் உட்பட பிற மொழிகளில் தலைப்பிடப்பட்ட எண்ணற்ற படங்களுக்கு வழக்கில் உள்ள சொல் என்றும், கதாபாத்திரங்களின் பெயர் என்றும் அரசாணைகளில் இல்லாத காரணங்களைக் கூறி வரிவிலக்கு வழங்கியுள்ளது என்பது கேளிக்கை வரிவிலக்கு வழங்குவதில் அரசு செய்துவரும் முறைகேட்டுக்கு சான்றாக அமைந்துள்ளது.

வணிகவரி ஆணையாளர் பரிந்துரை செய்து வாரங்களுக்குள் கேளிக்கை வரிவிலக்கு குறித்த அரசாணை வெளியிட வேண்டும் என்றும், விண்ணப்ப தேதி அடிப்படையில் கால வரிசைப்படி முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மதிக்காமல், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு ஆதாயம் பெற்றுக் கொண்டு சில படங்களுக்கு ஓரிரு நாட்களிலும், சில படங்களுக்கு வேண்டுமென்றே காலதாமதம் செய்தும் அரசாணை வெளியிட்டுவரும் வணிக வரித்துறை செயலாளர் மீது விரைவில் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேளிக்கைவரி விலக்கு பெற தேவையான எல்லா தகுதிகளும் இருந்தும் வேண்டுமென்றே எங்கள் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் பல்வேறு கற்பனையான காரணங்களைக் கூறி வரிவிலக்கு வழங்க மறுப்பதால் நாங்கள் மட்டுமன்றி எங்கள் படங்களை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சக தயாரிப்பாளராக எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், எங்கள் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கும், விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x