Last Updated : 09 Dec, 2014 01:24 PM

 

Published : 09 Dec 2014 01:24 PM
Last Updated : 09 Dec 2014 01:24 PM

லிங்குசாமி பேட்டியால் நோக்கத்தை மாற்றிக்கொண்டது கிண்டல் ஃபேஸ்புக் பக்கம்

'லிங்குசாமி மீம்ஸ்' என்ற ஃபேஸ்புக் பக்கத்தை அகற்ற முன்வந்துள்ளனர் அந்தப் பக்கத்தை ஆரம்பித்தவர்கள்.

சமீபத்தில் இயக்குநர் லிங்குசாமி, 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அஞ்சான் படத்தைத் தொடர்ந்து அவர் சமூக வலைதளங்களில் சந்தித்த கிண்டல்களும், நையாண்டிகளும் தன் பிள்ளைகள் வரை சென்றதாகவும். அதனால் தான் காயப்பட்டு, தர்மசங்கடத்திற்கு ஆளானதாகவும் தெரிவித்திருந்தார். | விரிவாக படிக்க - > சமூக வலைதளங்கள் ஏற்படுத்திய காயங்களின் உச்சம்: லிங்குசாமி மனம் திறந்த பேட்டி |

இதைத் தொடர்ந்து, லிங்குசாமியை கிண்டல் அடிப்பதற்கென உருவாக்கப்பட்ட 'லிங்குசாமி மீம்ஸ்' என்ற பக்கத்தை உருவாக்கியவர்கள், தாங்கள் அந்த பக்கத்தை நீக்கவோ அல்லது வேறு விதங்களில் அந்தப் பக்கத்தை பெயர் மாற்றி பயன்படுத்தவோ முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து, 'தி இந்து'விற்கு அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், “எங்கள் கிண்டல் அவரை எப்படி பாதிக்கும் என்பது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இன்றைய காலத்தில் ஒவ்வொரு திரைப்படமும், வசனங்களும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகின்றன. அப்படி நினைத்துதான் நாங்களும் ஆரம்பித்தோம். ஆனால் யாரையும் புண்படுத்தும் நோக்கில் அதைச் செய்யவில்லை. அவரது பிள்ளைகள் வரை இது பாதித்துள்ளது என்பது தெரியவந்தபோது எங்கள் தவறை உணர்ந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் பெண் தொகுப்பாளர் செய்த தவறு ஒன்று சமூக வலைதளங்களில் பெரிதாக கிண்டலடிக்கப்பட்டது. இது பற்றி தெரிந்த பிறகு, தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தாக அந்த தொகுப்பாளர் தெரிவித்திருந்தார்.

மன அழுத்தத்தில் தவிப்பவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை மீட்க உதவும் ’ஸ்னேஹா’ அமைப்பின் தலைவரும், மனநல மருத்துவருமான லக்‌ஷ்மி விஜயகுமார் இது குறித்து கூறும்போது, “இணையத்தில் கிண்டலடிப்பது, திட்டித் தீர்ப்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இளைய தலைமுறையினர் இணையத்தில் அதிக நேரம் செலவு செய்கின்றனர். அவர்கள் கிண்டலடிக்கப்படும்போது காயமடைகின்றனர். நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட, இதுபோல ஆபாச, இன ரீதியான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்”என்றார்.

மேலும் “இதற்கெல்லாம் சரியான பதில், இவற்றை கண்டுகொள்ளாமல் விடுவதே. இத்தகைய கிண்டலுக்கெல்லாம் அடித்தளமே அவர்களுக்கு மற்றவர்களின் கவனம் வேண்டும் என்பதுதான். அதை அவர்களுக்குத் தராமல், நாமும் சிரித்துவிட்டு போவதே நல்லது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x