Last Updated : 02 Mar, 2016 03:52 PM

 

Published : 02 Mar 2016 03:52 PM
Last Updated : 02 Mar 2016 03:52 PM

ரஹ்மான் அதிரடி.. சூர்யா அசத்தல்- இது 24 டீஸர் ஸ்பெஷல்!

ரசிகர்கள் எந்த மாதிரியான மனநிலையில் படத்துக்கு வரவேண்டும் என்ற முன்னேற்பாட்டை உணர்த்தும் விதத்தில் '24' டீஸர் இருந்தது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக தயாரித்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது.

இப்படத்துக்காக மும்பை, போலந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சூர்யா 3 வேடங்களில் நடித்திருப்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது மார்ச் 4ம் தேதி, மாலை 6 மணிக்கு யு-டியூப் தளத்தில் டீஸர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இந்தப் படத்தின் டீஸரை பார்த்தோம். அதன் சிறப்பு முன்னோட்டம் இதோ..

இப்படத்தின் கதைக்களம் என்ன என்று கூறும் வகையில் டீஸர் அமைந்திருக்கிறது. 'ஒரு கருவில் உதித்தோம், ஒரு சில நொடி இடைவெளியில் ஜனித்தோம்' என்று வசனத்துடன் தொடங்குகிறது டீஸர்.

இப்படம் பெரும் பொருட்செலவில் படமாகி இருப்பது தெரிகிறது. ஆத்ரேயா பாத்திரத்தில் வித்தியாசமான கெட்டப்பில் சூர்யாவை காண முடிகிறது. ஒரு புத்திசாலி சூர்யா, ஒரு ஆக்ரோஷமான சூர்யா என இரு பாத்திரங்களை டீஸரில் பார்க்கமுடிகிறது. வயதான கெட்டப்பிலும் சூர்யா தோன்றும் ஒரு காட்சி இருக்கிறது. முடிவில், "நான் எனது கடிகாரத்தைத் தேடி வந்திருக்கிறேன்" என்ற வசனத்தோடு டீஸர் முடிகிறது.

டைம் மிஷின் பயணம் என்ற வித்தியாசமான கதைக்களத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடி பின்னணி இசையும் டீஸருக்கு பெரிய பலத்தைச் சேர்த்துள்ளது. ஒரு ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் டீஸர் பார்த்த உணர்வை '24' டீஸர் தருகிறது.

'24' படத்தின் இசை வெளியீடு இம்மாத இறுதியில் சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் மாத இறுதி அல்லது மே முதல் வாரத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x