Last Updated : 30 Mar, 2017 12:04 PM

 

Published : 30 Mar 2017 12:04 PM
Last Updated : 30 Mar 2017 12:04 PM

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி: அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என மன்றத்தினர் தகவல்

ஏப்ரல் மாதத்தில் ரசிகர்களை சந்திக்கவுள்ளார் ரஜினி. அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என மன்றத்தினர் மறுப்பு.

ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் மக்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டு வீடுகளை வழங்குவதாக இருந்தது. ஆனால், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க அப்பயணத்தை ரத்துச் செய்துவிட்டார். இச்சர்ச்சையால் மீண்டும் அரசியல் தலைவர்களிடையே பேசப்படும் நபராக ரஜினி இருக்கிறார்.

'பாட்ஷா' படத்தின் போது ரஜினி பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அச்சமயத்தில் ரசிகர்களோடு கலந்துரையாடினார். அதற்குப் பிறகு ரசிகர்களைத் தனியாகச் சந்திப்பதில்லை. பண்டிகை தினத்தில் தனது வீட்டுக்கு வெளியே கூடும் ரசிகர்களை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றுவிடுவார். மேலும், மகள் திருமணத்தின் போது ரசிகர்களுக்குத் தனியாக விருந்து கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். அந்த நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை.

அவ்வப் போது வீட்டில் பல்வேறு நபர்களைச் சந்திப்பதால், நீண்ட காலமாக மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று மன்ற நிர்வாகிகளிடம் ரசிகர்கள் தெரிவித்தார்கள். இவ்விஷயம் ரஜினிக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினி மன்ற மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை ஏப்ரல் 2-ம் தேதி ரஜினி நேரில் சந்திக்கவுள்ளார். இது தொடர்பான கடிதம் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மன்ற நிர்வாகிகளிடம் விசாரித்த போது, "ஒவ்வொரு மன்றத்திலுமிருந்து சுமார் 250 பேர் வீதம் அழைத்து வரச் சொல்லியுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக சுமார் 7000 மேற்பட்டோர் வரும். அவர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்ளவுள்ளார். இதற்காக ஏப்ரல் 11-ம் தேதியிருந்து 16-ம் தேதி வரை நேரம் கொடுத்துள்ளார். இச்சந்திப்பில் அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தை பற்றியும் பேசமாட்டார்" என்று தெரிவித்தார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x