Last Updated : 26 Nov, 2014 05:34 PM

 

Published : 26 Nov 2014 05:34 PM
Last Updated : 26 Nov 2014 05:34 PM

யூடியூபில் கலக்கும் ரீமிக்ஸ் மாமா- கோலிவுட்டுக்கு அழைத்த ஹாபி!

சமூக வலைதளங்களில் தமிழ் ரசிகர்களுக்கு ரீமிக்ஸ் விருந்து அளிப்பதுடன், தனது சினிமா கனவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறார் ஓர் இளம் திறமையாளர்.

தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் அனைத்து மொழிகளிலும் ரீமிக்ஸ் கலை வடிவம் ஓங்கி இருக்கிறது. பழைய பாடல் வரிகள், மெட்டு என தொடங்கிய இந்த ரீமிக்ஸ் கலாச்சாரம், ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இதில் புதிய சிந்தனைகள் எதுவும் இல்லை என்ற கருத்தும் நிலவியது. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி திரைப்படங்களில் ரீமிக்ஸ் பாடல்கள் தொடர்ந்து இடம்பெற்றன.

பாடல்கள் மட்டுமின்றி ட்ரெய்லர், டீஸர், சீன்கள் என சமூக வலைதளங்கள் மூலம் ரீமிக்ஸ் பல்வேறு வடிவங்களைப் பெறத் தொடங்கியிருக்கின்றன. படைப்பாற்றலும் தொழில்நுட்ப அறிவும் அவசியம் மிகுந்த இத்தைய ரீமிக்ஸ்களுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பும் காணப்படுகிறது.

அந்த வகையில், சமீப காலமாக தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, 'ரீமிக்ஸ் மாமா' என்ற யூடியூப் பக்கம். குறிப்பாக, அண்மையில் இந்தத் தளத்தில் வெளியிடப்பட்ட அனேகன் பாடல் ரீமிக்ஸ் செம ஹிட். | இணைப்பு கீழே |

சமூக வலைதளங்களில் வலம் வரும் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் நிச்சயம் கடந்த வந்திருக்கக் கூடிய இந்த யூடியூப் பக்கத்தை இதுவரை 11 ஆயிரம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். இந்த சேனல் தொடங்கப்பட்டு ஒரு வருடம்தான் ஆன நிலையில், ஒவ்வொரு வீடியோவுக்கும் பல்லாயிரக்கணக்கான பார்வைகள் என கோடியைத் தொடுகிறது ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை.

புதிய தமிழ்ப் படங்களின் ட்ரெய்லர்கள், பிரபல ஹாலிவுட் படக் காட்சிகளை வைத்து கச்சிதமாக ரீமிக்ஸ் செய்யப்படுவது இந்தச் சேனலின் சிறப்பு.

ஒவ்வொரு வீடியோவின் எடிட்டிங்கும் துல்லியமாக ரீமிக்ஸ் செய்திருப்பதால், நிச்சயம் ஒரு புரொபஷனல் எடிட்டர்தான் இந்தச் சேனலை நடத்தி வருவார் என்ற என் கணிப்பு முற்றிலும் தவறாகிப் போனது.

'ரீமிக்ஸ் மாமா' யூடியூப் சேனலை உருவாக்கி நடத்தி வருபவர், சென்னை - வேளச்சேரி குருநானக் கல்லூரியில் விஸ்காம் படித்து வரும் மாணவர் ஜெகன்.

தினசரி தேர்வுகள், வீட்டுப்பாடம் போன்ற பாடத் திட்டங்களால் களைப்புற்ற ஜெகன் பொறியியல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, தனது விருப்பம் மீடியா துறையில்தான் என்பதை தனது பெற்றோருக்கு உணர்த்தி, இப்போது விஸ்காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

எடிட்டிங்கில் ஆர்வம் கொண்ட ஜெகன், அதன் உத்திகளை யூடியூப் மூலமே அறிந்து, அதனைக் கொண்டு தனது திறமையை வளர்த்து கொண்டிருக்கிறார்.

ரிமீக்ஸ் மாமா உருவானதன் பின்னணி பற்றியும், அதன் மூலம் கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும் ஜெகனிடம் கேட்டேன்.

"சமூக வலைதளங்களில் எந்த மாதிரியான வீடியோ ஹிட் ஆகும் என அலசினேன். அப்போது உருவானதுதான் ரீமிக்ஸ் என்ற ஐடியா. நண்பர்களைச் செல்லமாக மாமா என்று அழைப்பார்கள். ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மாமா என்பது அம்மாவைக் குறிக்கும் சொல். எனவே 'ரீமிஸ் மாமா' என்று எனது யூடியூப் சேனலுக்கு பெயர் வைத்தேன்.

கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட்டில் நிறைய படங்களைப் பார்ப்பது ரீமிக்ஸ் செய்வதற்கு உதவியாக இருக்கிறது. அடிப்படையான திறமை இருந்தபோதும் யூடியூப் மூலம்தான் எடிட்டிங் உத்திகளை நிறைய கற்றேன்.

ரீமிக்ஸ்சில் குறிப்பிட்ட நடிகரின் பாடல் காட்சிகளைக் கொண்டு எடிட் செய்வது முதலில் எதிர்மறை விமர்சனத்தை தேடித் தந்தது. குறிப்பாக, அஜித் வரும் காட்சிகளை ரீமிக்ஸ் செய்தால், விஜய் ரசிகர்களும், விஜய் படக் காட்சிகளை ரீமிக்ஸ் செய்தால் அஜித் ரசிகர்களும் கருத்துப் பகுதியில் கழுவி ஊற்றுவர்.

பிறகு, என் சேனலின் நோக்கம் என்பது எல்லா தரப்பினரையும் ரசிக்கவும் மகிழ்விப்பதும் மட்டுமே என்பதை உணர்ந்து, அந்த எதிர்ப்பு அலைகள் ஆதரவு அலையாக மாறின" என்றார் ஜெகன்.

யூடியூப்பில் மற்ற அதிகாரப்பூர்வ வீடியோ, ஆடியோகளைப் பயன்படுத்தும்போது காப்பிரைட் பிரச்சினை இருப்பது குறித்து கேட்டபோது, "இதுவரை பெரிய அளவில் பிரச்சினை இல்லை. இதில், வணிக நோக்கம் இல்லை என்பதால் காப்பிரைட் இஷ்யூ பெரிய அளவில் வந்ததில்லை. இனியும் வராது என்று நம்புகிறேன்.

'கத்தி' படத்தின் "செல்ஃபி புள்ள" பாடலைக் கொண்டு ரீமிக்ஸ் செய்தபோது, அந்த வீடியோவுக்கு 'கத்தி' படக் குழுவிலிருந்து உரிமை கோரப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அந்த வீடியோ நீக்கப்பட்டது. பின்னர் "அந்தப் பாடலின் ஆடியோவை மட்டுமேதான் பயன்படுத்தி இருக்கிறேன். அதனால் பாடலுக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக, பாடல் மேலும் பிரபலமடையும்" என்று விளக்கம் அளித்தேன். இந்த விளக்கத்தை ஏற்று, அந்தப் பாடலுக்கு அனுமதி தந்தது கத்தி படக்குழு. தற்போது "செல்ஃபி புள்ள" ரீமிஸ் பாடல் யூடியூபில் படு ஹிட்" என்றார் மகிழ்ச்சியுடன்.

இந்த முயற்சிக்கு நட்சத்திர அளவில் வரவேற்பு கிடைத்ததா என்று கேட்டதற்கு, நடிகர் சிம்புவுடன் ஏற்பட்ட தொடர்பை விவரித்தார் மாணவர் ஜெகன்.

நடிகர் சிம்புவுடன் 'ரீமிக்ஸ் மாமா' நிறுவனரும் மாணவருமான ஜெகன்.

"நான் எதிர்பார்க்காத ஓர் அழைப்பு வந்தது. எனது வீடியோக்களைப் பார்த்த ‘வாலு’ படக்குழு என்னைத் தொடர்பு கொண்டு அவர்களது படத்துக்கு கான்செப்ட் அமைத்து தர வேண்டும். அதற்காக ஒரு மாதிரி ரீமிக்ஸ் செய்து காட்டச் வேண்டும் என்றனர்.

நான் வழங்கிய ரீமிக்ஸ் மாதிரி 'வாலு' படக்குழுவுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதன் மூலம் வாலு படத்தில் இடம்பெறும் 'தாறுமாறு' என்ற பாடலுக்கு கான்செப்ட் அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பாடலில் பழம்பெரும் நடிகர்கள் எம்.எஜி.ஆர், சிவாஜி முதல் அஜித் வரை பல நடிகர்களை வர்ணித்து வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது. என் திறமையை வெகுவாக பாராட்டிய சிம்பு, தமிழ் சினிமாவில் நிறைய சான்ஸ் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். என் திறமையை நடிகர் சிம்பு ஊக்குவித்த விதம் என்னை மிகவும் நெகிழவைத்துவிட்டது. பொழுதுபோக்காக ஆரம்பித்த விஷயம், என் கேரியருக்கே கைகொடுத்திருக்கிறது என்பதை நினைக்கும்போது எனக்கே வியப்பாக இருக்க்கிறது" என்றார்.

சரி... எதிர்காலத் திட்டம்?

"சமீபத்தில் நான் செய்த அநேகன் 'தங்க மாரி ஊதாரி' ரீமிக்ஸ் பாடல் செம ஹிட். இந்த மாதிரி தொடர்ந்து நேரம் கிடைக்கும்போது செய்து வெளியிடுவேன். இப்போதைக்குப் படிப்பை முடிக்க வேண்டும். அதன் பின், முழு நேர எடிட்டிங்கில் இறங்க வேண்டும். எனக்கு எதிர்காலத்தில் நிறைய வாய்ப்புகள் கிடைக்க, 'ரீமிக்ஸ் மாமா' யூடியூப் சேனலும், அதனை வரவேற்று பாராட்டிப் பகிரும் இணையவாசிகளின் ஆதரவும் உதவும் என்று நம்புகிறேன்" என்றார் "ரீமிக்ஸ் மாமா" ஜெகன்.

ரீமிக்ஸ் மாமா - அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் பக்கம்:>http://www.youtube.com/user/TheRemixMama

அனேகன் - ரீமிக்ஸ் பாடல்:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x