Last Updated : 27 Oct, 2016 05:45 PM

 

Published : 27 Oct 2016 05:45 PM
Last Updated : 27 Oct 2016 05:45 PM

முன்னோட்டம்: கொடி-யில் கவனிக்கத்தக்க 10 அம்சங்கள்

தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது 'கொடி'. தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படத்தை துரை.செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். வெற்றிமாறன் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார்.

இப்படம் குறித்து 10 தகவல்கள்:

* முதன் முதலாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம். தாடி வைத்த அரசியல்வாதி, தாடி இல்லாத பேராசிரியர் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். அரசியல்வாதிக்கு ஜோடியாக த்ரிஷாவும், பேராசிரியருக்கு ஜோடியாக அனுபமாவும் நடித்திருக்கிறார்கள்.

* அரசியல்தான் கதைக்களம் என்றாலும், அதனை பகடி செய்யும் படம் கிடையாது. அரசியலில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் குணம், தாய், கட்சி, நண்பர்கள் என மனித உணர்வுகளைச் சொல்லும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் துரை.செந்தில்குமார்.

* இரட்டை வேடக் கதை என்றவுடன் புதிதாக இருக்க வேண்டும் என இரட்டையர்களைப் பற்றி சொல்ல தீர்மானித்திருக்கிறார்கள். இரட்டையர்களாக பிறப்பவர்களுக்குள் ஒருவித மருத்துவ குணாதிசயம் இருக்குமாம். அந்த ஒற்றுமையை வைத்து கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் துரை.செந்தில்குமார்.

* பொள்ளாச்சியில் 57 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறது படக்குழு. முதலில் தனுஷ் தாடி வைத்திருக்கும் காட்சிகளைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். பிறகு அக்காட்சிகள் படப்பிடிப்பு நடத்திய அதே இடத்தில் தாடி இல்லாத தனுஷை வைத்து படமாக்கி இணைத்திருக்கிறார்கள். முதலில் படப்பிடிப்பு நடத்தும் போது, மற்றொரு தனுஷ் எங்கு நிற்க வேண்டும் உள்ளிட்டவைகளை குறித்து வைத்திருந்திருக்கிறது படக்குழு.

* இரண்டு கதாபாத்திரங்களாக நடிப்பில் மட்டுமன்றி, டப்பிங்கில் கூட குரலில் வித்தியாசம் காட்டிப் பேசியிருக்கிறார் தனுஷ்.

* 'ஆடுகளம்' படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் முதலில் த்ரிஷா தான் நடித்தார். தேதிகள் பிரச்சினையால் விலகிவிட்டார். அதனைத் தொடர்ந்து தனுஷ் - த்ரிஷா இருவரும் இணைந்து நடித்திருக்கும் முதல் படமாக 'கொடி' அமைந்திருக்கிறது. இப்படத்தில் ருத்ரா என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. வழக்கமான பாடல் காட்சிகளுக்கு வரும் நாயகியாக இல்லாமல் எதிர்மறை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா.

* இப்படத்தில் தாய் - மகன் இருவருக்கும் இடையே ஒரு புதுவிதமான பாடல் காட்சி இருக்கிறது. அப்பாடலை சித்ரா பாடியிருக்கிறார். அதே போன்றதொரு பாடல் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததே இல்லை என்கிறது படக்குழு.

* இப்படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். முதலில் வேண்டாம் என்று நிராகரிக்க, விஜய் குடும்பத்தினர் அனைவருமே தனுஷுக்குகு நாங்கள் ரசிகர்கள், நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூற, பிறகு தான் ஒப்பந்தமானார். அவரும் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். தனுஷ் - எஸ்.ஏ.சி வரும் காட்சிகள் புதுமையாக இருக்கும் என்கிறது படக்குழு.

* முதன் முதலாக இப்படத்தின் இசைக்காக சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் தனுஷ். முதலில் அனிருத்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், ஒரே ஷெட்யூல் உடனடியாக பாடல்கள் வேண்டும் என்றதால் அனிருத் விலக, சந்தோஷ் நாராயணனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தது படக்குழு.

* இப்படத்தின் பணிகள் முடிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. 'தொடரி' வெளியீடு தாமதமானதால் இப்படமும் தாமதமாகி வந்தது. அப்படம் வெளியானவுடன் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டு, தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x