Last Updated : 22 Apr, 2016 06:39 PM

 

Published : 22 Apr 2016 06:39 PM
Last Updated : 22 Apr 2016 06:39 PM

முதல் பார்வை: வெற்றிவேல் - சசிகுமார் ஜானர் சினிமா!

'தாரை தப்பட்டை' படத்துக்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும், ட்ரெய்லர் தந்த எதிர்பார்ப்பும் 'வெற்றிவேல்' படத்தை பார்க்கத் தூண்டின.

டைட்டிலைப் போல் படமும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தியேட்டருக்குள் நுழைந்தோம்.

கதை: தம்பியின் காதலை சேர்த்து வைக்கப் போராடும் பாசமான அண்ணன் சசிகுமார். பெண் கேட்கும் படலத்தில் சம்மதம் கிடைக்காததால், வழக்கமான ரூட்டில் பயணிக்கிறார். அதனால் ஏற்படும் சங்கடங்கள், இழப்புகள், தடைகள், பாதிப்புகள்தான் படத்தின் மீதிக் கதை.

நான்கைந்து படங்களாக ஒரே மாதிரி கதாபாத்திரம் கிடைப்பதாலோ என்னவோ சசிகுமார் அந்த கேரக்டராகவே தெரிகிறார். பேச்சு, நடை, உடை, பாவனை, சண்டை, கோபம், கண்ணீர் என அத்தனையிலும் சசியின் டிரேட்மார்க் பளிச்சிடுகிறது. சசியின் துடிப்பும், உற்சாகமும் கவனிக்க வைக்கிறது.

ஆனால், சசியை மில்லிமீட்டர் அளவுக்கு வெட்கப்படச் சொன்னால் சென்டிமீட்டர் தாண்டி மீட்டர் கணக்காய் சிரிக்கிறார். காலரைத் தூக்குவதும், ஆகாசத்தைப் பார்ப்பதுமாக இன்னும் அதே ஃபார்மில் இருக்கிறார்.

'அவள் என் காலை மிதித்து காதலை பதித்து விட்டாள்' என்று கவித்துவம் பேசுவதாக நினைக்கிறீர்களா சசி? சில்வண்டுப் பசங்க மாதிரி சுற்றித் திரியும் செய்கைகளை இன்னும் எத்தனை படங்களுக்கு தொடர்வதாய் உத்தேசம்?

மலையாளத் தமிழ் பேசும் மியா ஜார்ஜ் வந்து போகிறார். எல்லாவற்றுக்கும் ஆமாம் போடும் ரேணுகா, மகன்களை கரித்துக் கொட்டும் இளவரசு, தோரணையாக பேசி கம்பீரம் காட்டும் பிரபு, வன்மத்தை கைவிடாத விஜி சந்திரசேகர், எதற்கும் அலட்டிக்கொள்ளாத ஆனந்த் நாக், ஒத்தாசைக்கு வரும் தம்பி ராமையா ஆகியோர் பொருத்தமான தேர்வு.

பரணி, சமுத்திரக்கனி, விஜய் வசந்த் உள்ளிட்ட நாடோடிகள் டீம் திடீரென களம் இறங்கும் போது தியேட்டர் அதிர்ந்தது.

இமான் இசையில் இரைச்சல் கூடியிருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். உன்னப் போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல பாடல் மறுமலர்ச்சி படத்தின் நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை பாடலை நினைவுபடுத்துகிறது. ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் பாடலில் சப்தமே மிஞ்சுகிறது. அடியே உன்னை பார்த்திட பார்த்திட பாடல் ரசிக்க வைக்கிறது.

எஸ்.ஆர்.கதிரின் கேமரா கிராமம், கோயில், வயல்கள் என்று எல்லாவற்றையும் யதார்த்தமாய் கடத்துகிறது. அதுவே படத்துக்கு கூடுதல் பலமாய் அமைகிறது.

ஏ.எல்.ரமேஷ் முதல் பாதியில் நிறைய இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.

இயக்குநர் வசந்தமணி கதைக்காக ரொம்ப மெனக்கெடல் செய்யவில்லை. 'சுந்தரபாண்டியன்', 'நாடோடிகள்', 'தேவர் மகன்' என்று பல படங்களின் சாயல் வெற்றிவேல் படத்தில் அப்பட்டமாக தெரிகிறது. இதை இத்தோடு நிறுத்தாவிட்டால் வசந்தமணி வருத்தப்படக்கூடும் என்பது நிதர்சனம்.

இதையெல்லாம் தாண்டிப் பார்த்தாலும், வழக்கமான சசிகுமார் படமாக இருப்பதால் கிராமங்களில் வரவேற்பு பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கதை வறட்சி,வழக்கமான பாணி என்று இருந்தாலும் ரசிகர்களை எங்கேஜ் செய்த விதத்திலும், அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த விதத்திலும் 'வெற்றிவேல்' சறுக்கவில்லை.

சசியின் தோற்றமும், கதாபாத்திர வடிவமைப்பும் அலுக்காமல், சோர்வடையாமல் படம் பார்க்க வைக்கிறது. ஆனால், அதை மட்டுமே நம்பி எல்லா படங்களிலும் ஃபார்முலா மாறாமல் நடிப்பதன் விளைவு எப்படி இருக்கும்?

தன் பாதையை மாற்றிக்கொள்ளவில்லை எனில், சசியை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் சலிப்பின் காரணமாக பின்னாளில் திரும்பிப் பார்க்காத ஆபத்தும் நேரலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x