Last Updated : 20 Jan, 2017 01:38 PM

 

Published : 20 Jan 2017 01:38 PM
Last Updated : 20 Jan 2017 01:38 PM

பீட்டா அளித்த விருதை அவமானமாகக் கருதுகிறேன்: தனுஷ்

பீட்டா அளித்த விருதை பெரும் அவமானமாகக் கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனுஷ் விடுத்துள்ள அறிக்கையில், "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது. இதை உணர்ந்துதான் இந்திய அரசு, அரசு முத்திரையில் காளையை இடம் பெற செய்திருக்கிறது.

உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஆடு, மாடுகளை கால்நடை என்றழைத்த போது தமிழன் கால்நடைச் செல்வம் என்றழைத்து பெருமிதப்படுத்தினான். மாடு போல் உழைப்பான் தமிழன், மாட்டுக்காகவும் உழைப்பான் தமிழன். காளைகள் தமிழக மக்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். ஜல்லிகட்டுக்கு தடை என்பது ஒரு இனத்தின் அடையாளத்தை பண்பாட்டை அழிக்கும் செயல்.

ஜல்லிகட்டு இல்லாமல் பொங்கல் விழா நிறைவுறாது. உலகம் முழுக்க வாழ்கிற 12 கோடி தமிழர்களின் உணர்வை மதித்து பிரதமர் அவர்கள் ஜல்லிகட்டை நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்தைப் பற்றி படித்திருக்கிறேன். இப்போதுதான் தமிழ்நாட்டு இளைஞர்களின் வீரம்மிக்க போராட்டத்தைப் பார்க்க வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

எந்த அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், கொடி இல்லாமல், சாதி , மத வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் என்ற ஒற்றை உணர்வோடு மிகவும் கண்ணியமாகவும் கட்டுக்கோப்போடும் நடத்தும் அறவழிப் போராட்டத்தை பார்த்து, வியந்து தலை வணங்குகிறேன்.

தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். என்னை போன்ற நடிகர்களின் ரசிகனாக இருந்த இளைஞர்கள் இன்று தமிழ் இளைஞர்களின் ரசிகனாக என்னை மாற்றி இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பீட்டா அமைப்பு சைவ உணவு சாப்பிடுகிறவன் என்ற முறையில் என்னை சிறப்பித்தது. இப்போது அதை பெரும் அவமானமாகக் கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

நானோ, எனது குடும்பத்தாரோ யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை. இருக்கிறார்கள் என்று யாராவது கூறினால் வீண் வதந்தி. ஆகவே மத்திய அரசு காளையை வன விலங்கு பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். காளையை காட்சிப் படுத்தப்பட்ட விலங்கு என்ற பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். வாடிவாசல் மூலமாக ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x