Last Updated : 27 Oct, 2016 12:19 PM

 

Published : 27 Oct 2016 12:19 PM
Last Updated : 27 Oct 2016 12:19 PM

படைப்பாளனை விட படைப்புகள்தான் முக்கியம்: சிவகுமார்

படைப்பாளனை விட படைப்புகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் படைப்புகள் தான் காலம் கடந்து நிற்கும் என்று சிவகுமார் கூறினார்.

நடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாளை யொட்டி சென்னையில் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. "Paintings Of Siva Kumar" என்ற புத்தக வெளியீட்டு விழா லலித் கலா அகாடமியில் நடைபெற்றது.

சூர்யா முன்னிலையில் தமிழருவி மணியன் புத்தகத்தை வெளியிட்டார். இவ்விழாவில் Alliance ஸ்ரீநிவாசன் , இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் / ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் , இயக்குநர் வசந்த், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசும் போது, "அப்பாவிற்கு எப்போதும் பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது. சென்ற வருடம் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர் பழநி முருகன் கோவிலுக்கு சாமியை தர்சிக்க சென்றுவிட்டார். இந்த வருடம் அவருடைய 75வது பிறந்த நாள். இந்த பிறந்த நாள் அவருக்கு மிகச்சிறப்பான பிறந்த நாள் ஆகும்.

இந்த நாளை நாங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் என்றும் நினைவிருக்கும் பிறந்தநாளாக மாற்ற வேண்டும் என்று யோசித்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தோம். கண்காட்சிக்கு இப்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்காட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு நாட்கள் கண்காட்சியைத் தொடர முடிவு செய்துள்ளோம். இந்த காபி டேபிள் புத்தகம் மிக முக்கியமான புத்தகம்.

அப்பா தற்போது இராமாயணம் , மகாபாரததுக்கு பிறகு இப்போது திருக்குறளை பேச தயாராகி வருகிறார். இனி வருடம் தோறும் அப்பாவின் பிறந்த நாள் அன்று ஓவியப் போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெறுபவருக்கு பரிசு வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் சிவகுமார் பேசும்போது, "எனக்கு என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில் விருப்பமே இல்லை. இவர்கள் தான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். படைப்பாளனை விட படைப்புகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் படைப்புகள் தான் காலம் கடந்து நிற்கும்.

இப்போது அனைவரும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் பல ஆயிரம் ருபாய் செலவழித்து சாப்பிடுகிறார்கள். நானெல்லாம் அக்காலத்தில் வெறும் ஏழாயிரம் ரூபாய் செலவில் திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரை பயணித்து வரைந்தேன். இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியாது. இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக நடத்திய என்னுடைய மகன்கள் மற்றும் இன்னொரு மகனான தனஞ்ஜெயனுக்கு நன்றி" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x