Last Updated : 28 Aug, 2016 12:44 PM

 

Published : 28 Aug 2016 12:44 PM
Last Updated : 28 Aug 2016 12:44 PM

நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: நடிகர் விஷால் அதிரடி

தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு, நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் நாளை (ஆகஸ்ட் 29) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவ முகாமை விஷால் துவக்கி வைத்தார். மருத்துவ முகாமில் ஒரு குழந்தைக்கு விஷால் தேவி என பெயரிட்டார்.

மருத்துவ முகாமை துவக்கி வைத்துவிட்டு விஷால் பேசியது, "இது குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம். தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறேன்.

நடிகர் சங்கத்தை பற்றி குறைக் கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும். பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம். வாராஹியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும். யார் வேண்டுமானாலும் என்ன குற்றசாட்டுகளை வேண்டுமானாலும் கூறலாம் அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.

நாங்கள் இன்னும் நடிகர் சங்கக் கட்டிடத்துக்கான டெண்டரை விடவில்லை. எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ அப்ரூவல் வரவில்லை. வாராஹி சொல்வதில் உண்மை இல்லை. மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைவேற்றிருக்கும் தீர்மானம் குறித்து எனக்கு எந்தவொரு கடிதமும் வரவில்லை. நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்தார் விஷால்.

முன்னதாக நடிகர் சங்க உறுப்பினர் வாராஹி, புதிய நிர்வாகிகள் இதுவரை 3 கோடி அளவில் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தயாரிப்பாளர் சங்கம் குறித்து விஷால் அளித்த பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக மன்னிப்புக் கோரவும் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x