Last Updated : 19 Oct, 2015 07:20 AM

 

Published : 19 Oct 2015 07:20 AM
Last Updated : 19 Oct 2015 07:20 AM

நடிகர் சங்கத்தை கைப்பற்றியது பாண்டவர் அணி: நாசர், விஷால், கார்த்தி வெற்றி

பரபரப்பான சூழ்நிலையில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி வெற்றி பெற்றனர். அவர்கள் அணியைச் சேர்ந்த மற்றவர்களும் வெற்றி பெற்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்திருந்தது.

சரத்குமார் தலைமையில் ஓர் அணியும், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிட்டன. சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரது அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணன் ஆகியோரும் விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோரும் போட்டியிட்டனர். இதுதவிர, இரு அணிகளிலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தலா 24 பேர் போட்டியிட்டனர்.

நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டு போட 3,139 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில், வெளியூர்களில் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களித்தனர். வேட்பாளர்கள் 61 பேருக்கு தனித்தனி எண்கள் தேர்தல் சின்னங்களாக ஒதுக்கப்பட்டு இருந்தன. வாக்களிப்பதற்காக 18 ஆயிரம் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், சிவகார்த்திகேயன், ஜீவா, சிபிராஜ் உள்ளிட்ட இளம் நடிகர்கள், கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா, வினு சக்ரவர்த்தி, சிவகுமார் போன்ற மூத்த கலைஞர்கள், நாடக நடிகர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

நடிகர் அஜித், நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா உட்பட சிலர் ஓட்டு போட வரவில்லை. வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தது. 1,824 பேர் நேரடியாக வந்து வாக்களித் தனர். 783 பேர் தபாலில் தங்கள் வாக்குகளை பதிவு செய் திருந்தனர். 532 பேர் வாக்களிக்கவில்லை. வாக்குப் பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தபால் வாக்குகள் எண்ணிக் கையில் சரத்குமார் அணியினர் முன்னிலை பெற்றிருந்தனர். ஆனால் நேரடியாக பதிவான வாக்குகளை எண்ணத்தொடங்கியதும் நிலைமை மாறியது.

விஷால் தலைமையிலான பாண் டவர் அணியினர் முன்னிலை பெற்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், தன்னை எதிர்த்த ராதாரவியை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். விஷாலுக்கு 1,445 வாக்குகளும், ராதாரவிக்கு 1,138 வாக்குகளும் கிடைத்தன.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரத்குமாருக்கும், நாசருக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் நாசர் 1,344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சரத்குமாருக்கு 1,231 வாக்குகள் கிடைத்தன.

மேலும் பாண்டவர் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றார். துணைத் தலைவருக்கு போட்டியிட்ட கருணாஸ், பொன் வண்ணன் ஆகியோரும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x