Last Updated : 25 Apr, 2017 12:42 PM

 

Published : 25 Apr 2017 12:42 PM
Last Updated : 25 Apr 2017 12:42 PM

தமிழக வெளியீட்டில் சிக்கல்- ஏப்.28-ல் வெளியாகுமா பாகுபலி 2?

தமிழக வெளியீட்டில் 'பாகுபலி 2' திரைப்படத்துக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

கர்நாடக வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. இறுதியாக சத்யராஜ் வருத்தம் தெரிவிக்கவே, சிக்கல் முடிவு வந்தது. தற்போது தமிழக வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 28ம் தேதி வெளிக் கொண்டுவர பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து பேச்சுவார்த்தையில் பங்கெடுத்து வரும் பிரபல விநியோகஸ்தரிடம் பேசிய போது, "ஏப்ரல் 28ம் தேதி வெளிக் கொண்டுவர தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 'பாகுபலி 2' தயாரிப்பாளார் ஆர்கா மீடியாவிடமிருந்து தமிழக உரிமையைக் கைப்பற்றினார் ராஜராஜன். அவரிடமிருந்து ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது.

47 கோடிக்கு ராஜராஜனிடமிருந்து ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியீட்டு உரிமையை வாங்கினார்கள். அதில் ஒரு பகுதி பணத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் ராஜராஜனிடம் வழங்கிவிட்டது. ஆனால், மீதமுள்ள தொகையை அவர்களால் வழங்க இயலவில்லை. ஏனென்றால் 'வைரவா', 'போகன்', 'கட்டப்பாவ காணோம்' ஆகிய படங்களில் ஏற்பட்ட நஷ்டம் தான் காரணம்.

மீதமுள்ள பணத்தை வழங்க முடியாததால், ராஜராஜன் மீண்டும் தன்னிடமே வெளியீட்டு உரிமையைக் கொடுத்துவிடுங்கள், நான் வெளியிட்டு கொள்கிறேன் என்று கேட்கிறார். ஆனால், ஸ்ரீக்ரீன் நிறுவனம் தங்களுடைய விநியோகஸ்தர்களிடம் முழுமையாக அனைத்து ஏரியாவையும் விற்றுவிட்டது.

இரண்டு தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசி வருகின்றனர். இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது உண்மைத் தான். தமிழக வெளியீட்டு உரிமையை விலையை, 'பாகுபலி 2' தயாரிப்பாளர்களான ஆர்கா மீடியா நிறுவனம் குறைத்தால் மட்டுமே இப்பிரச்சினை முடிவுக்கு வர சாத்தியமுள்ளது.

இதனால் சில திரையரங்குகளில் மட்டுமே முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள திரையரங்குகள் இப்பிரச்சினையின் முடிவைப் பொறுத்தே முன்பதிவு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் வெளியாகி, தமிழகத்தில் மட்டும் ஆகாமல் இருக்க சாத்தியமில்லை.

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிக்கப்பட்டு வெளியாகும். ஆனால் யார் விட்டுக் கொடுத்து, முடிவு வருகிறது என்பது தான் கேள்விக்குறியாகியுள்ளது" என்று தெரிவித்தார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x