Last Updated : 28 Mar, 2015 06:36 PM

 

Published : 28 Mar 2015 06:36 PM
Last Updated : 28 Mar 2015 06:36 PM

"சினிமாவில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப முயல்கிறேன்" - ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பேட்டி

அல்லா ரக்கா ரஹ்மான், ஒரே நேரத்தில் அமைதியாகவும், ஆர்வமாகவும், கவலையுடனும் இருக்கிறார்.

ஒரு இசையமைப்பாளராக அவர் சந்தோஷமாக இருக்கிறார். 'ஓ காதல் கண்மணி' படத்தின் 'மென்டல் மனதில்' பாடல் ஹிட் ஆகியுள்ளது. ஒரு மகனாக கவலையுடன் இருக்கிறார். அவரது அம்மாவுக்கு உடல் நலம் குன்றி தற்போது தேறிவருகிறார். ஒரு தயாரிப்பாளராக ஆர்வத்துடன் இருக்கிறார். அவரது முதல் இந்திப் படம் தயாராகிவருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் வீழ்ந்த சில மணி நேரங்களில் அவரது கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. குர்தா, ஜீன்ஸ் என நிறைவாகக் காட்சியளித்த ரஹ்மானிடம் இரானியப் படம், இளையராஜா, அவரது எதிர்காலம் என அனைத்தையும் பேசினோம்.

சமீபத்தில் நீங்கள் எழுதி, இசையமைத்து பாடிய 'மென்டல் மனதில்' பாடலுக்கு அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

அது ஒரு மென்மையான, ஜாலியான பாடல். பாடலாசிரியர் வைரமுத்து அப்போது ஊரில் இல்லை. ஆனால் மணிரத்னத்துக்கு உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே இதற்கு முன்னர் 'அலைபாயுதே' படத்தில் 'என்றென்றும் புன்னகை' பாடலை சேர்ந்து எழுதியுள்ளோம். எனவே மீண்டும் அப்படி ஒரு சூழல் எங்களுக்கு அமைந்தது.

அது எப்படி மணிரத்னம் மட்டும் உங்களிடமிருந்து விசேஷமான இசையை பெறுகிறார்?

அவர் தான் என்னை திரைப்படங்களில் அறிமுகம் செய்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்போது மணி, வைரமுத்து, நான் என நாங்கள் மூவரும் தனியாக ஒரு பிராண்ட் (Brand) ஆகிவிட்டோம். நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு வேலை செய்யலாம் என்று நினைத்தால் கூட முடியாது. ஏனென்றால் மக்களின் எதிர்பார்ப்பு அப்படி. அது ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. கடந்த சில வருடங்களில் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன தேவையோ அதைத் தர நினைக்கிறோம்.



பாடல் உருவாக்கத்தின்போது உங்கள் மூவரிடையே நிறைய கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் ஏற்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ காதல் கண்மணியை பொருத்தவரை என்ன நடந்தது என்று கூறுங்கள்.

எனக்கு சில விஷயங்கள் பிடிக்காது. சில நேரங்களில் ஒலிக்காக வார்த்தைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டும். ஒலி மிக முக்கியம். அது வார்த்தைக் குவியலைத் தவிர்க்கும். மக்களின் கவனத்தை சட்டெனக் கவர வேண்டும். அவர்களுக்கு, முன் இருந்தது போல பொறுமை இருப்பதில்லை

'ஒகே கண்மணி' படத்தில், 'நானே வருவேன்' என்ற பாடலில் அந்தரா என்ற அழகான இசைக் கருவியை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். ஆனால் வார்த்தைகள் சிக்கலாக இருந்தன. எனவே ஒரே வார்த்தை (சின்னஞ்சிறு) திரும்ப திரும்ப வருமாறு மாற்றினோம். பாரம்பரிய கலைகளில் இருக்கும் முறைதான் அது. உதாரணத்துக்கு 'தும்ரிஸ்' என்ற பாடல் வகையை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் வரும். ஏனென்றால் இசை சிக்கலாக இருக்கும். எனவே வார்த்தைகள் சிக்கலாக இருக்கக் கூடாது. 'யாத் பியா', 'மோரே சஜ்னி' போன்ற தும்ரி பாடல்களை கேட்டீர்கள் என்றால், ஒரே வரி மீண்டும் மீண்டும் பாடப்படும். கேட்பவர்களுக்கு கவனம் செலுத்த அது எளிமையாக இருக்கும்.



நீங்கள் திரைக்கதை எழுதுகிறீர்கள், இந்தி படம் ஒன்றை தயாரிக்கிறீர்கள். இசை அல்லாத மற்ற துறைகளுக்கு செல்வதன் காரணம் என்ன?

இந்திய சினிமாவில் ஒரு வெறுமை இருப்பதாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக என்னுடைய வளர்ச்சி அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியுமா எனப் பார்க்கிறேன். ஒன்று வெற்றி பெற்றால் அதையே அனைவரும் செய்கின்றனர். ஆனால கலைக்காக ஒரு சிலரே இருக்கின்றனர். என்னால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. மக்களுக்கு என்ன பிடிக்கும், நமது இசையில் தொலைந்து போன சுவை என இரண்டுக்குமான ஒரு சமநிலையை நான் தேடுகிறேன். அனைத்து அம்சங்களிலும் இந்த சமநிலை எட்ட முடியுமா என்று பார்க்க கடந்த 4 வருடங்களாக இதற்காக உழைத்து வருகிறேன்.



நீங்கள் இசையமைத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோது எவ்வளவு ஏமாற்றமா இருக்கும்? சென்ற வருடம் லிங்கா, காவியத் தலைவன் ஆகிய படங்கள் அப்படி அமைந்தன.

நான் நிறைய படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைத்து தவறு செய்துவிட்டேன். சிலருக்கு நான் முடியாது என சொல்லிருக்க வேண்டும். அதிகமான அழுத்தம், உறக்கமில்லாத இரவுகள் என ஒரு அணியாக எங்கள் முதுகு தேய நாங்கள் வேலை செய்தோம். அவற்றுக்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை என உணர்கிறேன். நான் இயற்கையாக விரும்பும் (கலையை) ஒன்றை வாழ்க்கை எனக்கு கொடுத்திருக்கிறது. அதிக வேலைப்பளுவில், அழுத்தங்களோடு வேலை செய்வது நல்லதல்ல.



லிங்கா அதில் ஒன்று என ஒப்புக்கொள்கிறீர்களா?

சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளன்று படத்தை வெளியிடவேண்டிய நிர்பந்தம். அந்தப் படத்தை பொருத்தவரையில் என்ன ஆனது என மக்களுக்குத் தெரியும். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவேண்டும். இசைக் கலைவை. பின்னணி இசைக் கோர்ப்பு என அனைத்தையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் காவியத் தலைவன் வேலையும் நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் ஒரே நேரத்தில் வந்தது. அது அசந்தர்ப்பமான சூழல்.



சில தரப்பு மக்கள், உங்கள் இசை 90-களில் இருந்தது போல இல்லை என கூறுகிறார்கள்

எனக்குப் பெருமையாக உள்ளது. என்னிடம் ஏதோ ஒன்று அவர்களுக்கு பிடித்துள்ளதே (சிரிக்கிறார்)



அத்தகைய கருத்துகளை கேட்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?

ஒரு படைப்பாளியாக நான் புதிதாக எதையாவது செய்ய வேண்டும். எனது அன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். நீங்கள் ரசித்த ஒரு முன்னாள் நடிகையிடம் இன்று சென்று, "எனக்கு உங்களை பிடிக்காமல் போய்விட்டது" எனக் கூறமுடியுமா?



வசந்தபாலனோடு இணைந்து வேலை செய்தீர்கள். இந்த வருடம் விக்ரம் குமாரோடு இணைந்துள்ளீர்கள். உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான இயக்குநர்களோடு எளிதாக வேலை செய்வதை விட்டு, உங்களுக்கு பரிச்சயமில்லாத இயக்குநர்களுடன் வேலை செய்வது ஏன்?

ஒரு கட்டத்துக்கு மேல் சிலரிடம் அதிகமான உரிமை எடுத்துக் கொள்வோம். அது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் கெட்டதும் கூட. மணிரத்னம், அஷுடோஷ், ஷங்கர் போன்றவர்களிடம் அது நல்ல விஷயம். ஏனென்றால் அவர்கள் எனக்கு புதிய சவால்களைத் தருகின்றனர். எப்படியும் இரண்டு வருடங்களுக்கு ஒரு திரைப்படம் தான் இயக்குகின்றனர். புதிய இயக்குநர்கள் புதிய விஷயங்களை கண்டறிய இடம் தருகிறார்கள்.



'முகம்மது' என்ற உங்கள் இரானிய படத்தின் நிலை என்ன் ? அதை நீங்கள் ஒப்புக் கொண்ட காரணம் என்ன?

வேலைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. படத்தொகுப்பு இன்னும் முடியவில்லை. இரானிய படங்களின் ரசிகன் நான். முக்கியமாக மஜித் மஜிதியின் படங்களுக்கு. ஒருநாள் இம்தியாஸ் அலி என்னைக் கூப்பிட்டார். யூடிவி நிறுவனத்திடம், மஜிதி, அவருடைய படத்தில் நான் வேலை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சினிமா வரலாற்றில் குறிப்பிட்டத்தக்க திரைப்படமாக அது இருக்கும்.



ஆனால் அந்தப் படத்துக்கு இசையமைப்பது எளிதாக இருந்திருக்காதே

அவரது எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகமாக இருந்தன. ஒருவகையில் அது நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் வேலை செய்யும் முறையை தெரிந்துகொள்ள விரும்பினேன். அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள், காட்சிகளை எப்படி எழுதுகிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். இரண்டு முறை இரானுக்கு பயணம் செய்துள்ளேன். இரண்டுமே அற்புதமான அனுபவமாக இருந்தன.



உலகம் முழுவதும் ஓய்வின்றி பயணம் மேற்கொள்ளுகிறீர்கள். உங்கள் மூன்று குழந்தைகளுடன் செலவிடம் நேரம் இருக்கிறதா?

நாங்கள் சேர்ந்து பல திரைப்படங்களை பார்ப்போம். குறிப்பாக 3டி அனிமேஷன் திரைப்படங்கள்.



உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்குமான பாசப் பிணைப்பைப் பற்றி சொல்லுங்கள்? அவரிடமிருந்து நீங்கள் கற்றதென்ன? ஆஸ்கர் மேடையிலேயே அவரைப் பற்றி நீங்கள் பேசினீர்கள்

அதுதான் வாழ்க்கையிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்வது. எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், எதற்காக குடும்பத்தில் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும் என தெரியும். அம்மா கடுமையாக உடல்நலம் குன்றி இருந்து, இப்போது தான் தேறி வருகிறார். அவர் உடல்நலம் தற்போது பரவாயில்லை. ஆனால் முன் இருந்தது போல இல்லை.



சென்னையின் அபிபுல்லா சாலையைச் சேர்ந்த ஒரு சாதாரண மாணவனான நீங்கள் தற்போது சர்வதேச அளவில் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளீர்கள். இதற்காக எப்படி உங்களை மாற்றிக் கொண்டீர்கள்?

வானிலையும், மண்டலமும் மாறும்போது அனைத்தும் மாறும். அங்கு 3 அடுக்கு உடைகள் அணிந்து கொள்வேன். ஸ்டூடியோக்களை பொருத்தவரை இங்கிருப்பது போன்ற வசதிகள் அங்கு எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. இசை குறிப்புகள் அனைத்தும் முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும். ஆனால் அதற்கேற்றார் போல சூழலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பழக்கப்பட எனக்கு 10 வருடங்கள் ஆனது.



நீங்கள் தனியாக இசையமைப்பதற்கு முன்னர் இளையராஜாவின் குழுவில் இசைக் கலைஞராக பணியாற்றியது அனைவருக்கும் தெரியும். இன்னமும் அவருடன் தொடர்பில் இருக்கிறீர்களா?

அவரை கடைசியாக ஓர் இசை விழாவில் சந்தித்தேன். நான் வெளிநாடுகளில் இருக்கும்போது விழாக்கள், திரையிடல்கள் என எங்காவது பல்வேறு இசையமைப்பாளர்களை அடிக்கடி எதேச்சையாக சந்தித்து வருகிறேன். இங்கு சென்னையில் என்னால் அப்படி வெளியில் செல்ல முடிவதில்லை. வேலை அல்லது குடும்பம் அல்லது என் இசைப்பள்ளி என எப்போதுமே ஏதோ ஒன்றில் மூழ்கியிருப்பேன். எனவே வெளியில் செல்ல நேரம் இல்லை. எங்களுக்கிடையே பரஸ்பரம் மரியாதை உள்ளது.



நீங்கள் அதிகம் புத்தகம் வாசிப்பதுண்டா?

(சிறிது நேரம் யோசித்துவிட்டு) கடைசியாக நான் படித்த புத்தகம், ஹண்ட்ரட் ஃபுட் ஜர்னி (Hundred Foot Journey) மற்றும் பீலே (Pele) படங்களின் திரைக்கதை புத்தகம். அவையும் புத்தகங்கள்தானே!



இசையைப் பொருத்தவரை தற்போது தமிழில் பல புதிய இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். நீங்களே புகழ்ந்துள்ள சந்தோஷ் நாராயண், மேலும் அனிருத், ஜி.வி.பிரகாஷ், இந்தியிலும் பலர் உருவாகியுள்ளனர். திறமையானவர்கள் கையில்தான் இசை இப்போது இருக்கிறது என சொல்லமுடியுமா?

இசையில் கண்டறிய நிறைய உள்ளது. வெறும் ஹிட் பாடல்களை மட்டுமே தரவேண்டும் என கேட்கக் கூடாது. காலத்தைக் கடந்த இசையைத் தர ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவருக்கென ஒரு விதியை வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தின் இசையை நாம் ஏன் இன்னும் விரும்புகிறோம்? ஏனென்றால் அவை காலத்தை வென்றவை. ரசிகர்களுக்கு இன்னமும் அவற்றுடன் ஓர் இணைப்பு உள்ளது. நான் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன். அதேதான் இளம் இசையமைப்பாளர்களும் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.



உங்கள் இசைப்பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான எதிர்கால திட்டம் என்ன?

புதிதாக ஒரு கட்டிடம் வேண்டும் என்பது பெரிய பணியாக இருந்தது. தற்போது அது கிடைத்துள்ளது. இசையைப் பற்றி தெரிந்துகொள்ள அது அற்புதமான இடமாக இருக்கிறது. சில நேரங்களில் அங்கிருக்கும் மாணவர்களைக் கண்டால் பொறாமையாக உள்ளது. ஏனென்றால் நான் வளரும்போது அப்படி ஒரு இடம் எனக்குக் கிடைக்கவில்லை. தனிப்பட்ட அடையாளத்தோடு மாணவர்கள் பொழுதுபோக்குத் துறையில் வேலை செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். முக்கியமாக மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.



நேரம் கிடைக்கவில்லை என கூறுகிறீர்கள். தினசரி தொழுகை செய்ய நேரம் கிடைக்கிறதா?

அதுதான் எனக்கு உயிர்மூச்சு.



உங்கள் தினசரி வாழ்க்கை சமநிலையில் தானே இருக்கிறது?

நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து செய்து வரவேண்டும். நாளை செய்துகொள்ளலாம் என்பதற்கே இடமில்லை. அதைத்தான் நான் சமீப காலங்களில் உணர்ந்துள்ளேன். நாளை பிரார்த்தனை செய்து கொள்ளலாம், நாளை இசையமைக்கலாம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். எதாவது செய்யவேண்டுமென்றால், இன்றே செய்ய வேண்டும்.



©தி இந்து, ஆங்கிலம்
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x