Last Updated : 23 Jul, 2016 04:43 PM

 

Published : 23 Jul 2016 04:43 PM
Last Updated : 23 Jul 2016 04:43 PM

குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்: ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

ரசிகர்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என தனது பிறந்த நாள் விழாவில் சூர்யா கேட்டுக்கொண்டார்.

ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சிங்கம் 3' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சூர்யா. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்று (ஜூன் 23) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சூர்யா தனது ரசிகர்களை 2 வருட இடைவேளைக்கு பிறகு சந்தித்து உரையாடினார். தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல ஊர்களில் சுமார் 10000 ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.

அவர்களிடையே சூர்யா உரையாற்றிய போது "என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு வருட இடைவேளைக்குப் பின் என்னுடைய ரசிகர்களாகிய உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் மிக சிறப்பான முறையில் நற்பணிகளை செய்து வருவது எனக்கு பெருமையையும் , சந்தோஷத்தையும் அளிக்கிறது. ஆனால் எல்லோரும் முதலில் உங்கள் தாய் , தந்தை , குடும்பம் மற்றும் நீங்கள் செய்யும் தொழிலுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் நற்பணி மன்ற பணிகளில் ஈடுபட்டால் போதும்.

இதுவரை 20,​000​ பேர் சூர்யா அரசு இரத்ததான வங்கிக்கு இரத்தம் வழங்கி உள்ளீர்கள் , இது மிகப்பெரிய சாதனை ஆகும். இதனை பாராட்டி சென்னை அரசு மருத்துவமனையில் இருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழை பார்த்தேன். நிஜமாகவே இது பெருமைக்குரிய ஒன்றாகும். இந்த முறையும் நீங்கள் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம், அன்ன தானம் மரக்கன்று நடுதல் , கோவிலில் சிறப்பு பூஜை ஆகிய நற்பணிகளில் ஈடுப்பட்டு வருகிறீர்கள், எல்லோருக்கும் நன்றி..

இதே போல் நீங்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும். ஒரு குழந்தையின் கல்வியால் ஒரு குடும்பம் மட்டும் அல்ல ஒரு நாடே பயனடையும். ஆகவே நீங்கள் அனைவரும் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும். மரக்கன்று நடும் பணிகளில் ஈடுபடுங்கள். மரக்கன்று நடுவது காலம் கடந்து நிற்கக்கூடிய ஒன்றாகும். ஆம் , இன்று நீங்கள் கன்றாக நடும் மரம் காலம் கடந்து மரமாக வளர்ந்து நின்று மழையைக் கொடுக்கும். அதே போல் நீங்கள் அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் , மிக கவனமாக அடுத்தவருக்கு இடையூறு தராமல் நீங்கள் வாகனங்களை ஓட்ட வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x