Published : 27 Sep 2016 11:00 AM
Last Updated : 27 Sep 2016 11:00 AM

குறும்படத்துக்கும் திரைப் படங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை: இயக்குநர் நித்திலன் நேர்காணல்

குறும்பட இயக்குநர்கள் வெள்ளித்திரை இயக்குநராக அறிமுகமாகி வெற்றியடைவது தமிழ் திரையுலகில் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘நாளைய இயக்குநர்’ போட்டியில் வெற்றிபெற்ற நித்திலன், தற்போது ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அவரைச் சந்தித்தோம்.

இந்தப் படத்துக்கு ‘குரங்கு பொம்மை’ என்று எதற்காக தலைப்பு வைத்தீர்கள்?

இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனதும் மாறிக் கொண்டே இருக்கும். குரங்கு எப்படி மரத்துக்கு மரம் தாவிக் கொண்டே இருக்கிறதோ, அதே போன்று ஒவ்வொரு மனமும் மாறிக்கொண்டே இருக்கும். அதனால்தான் படத்துக்கு ‘குரங்கு பொம்மை’ என்று தலைப்பு வைத்தேன்.

அப்பா - மகன் இருவருக்கும் இடையில் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளேன். இதற்கு இடையில் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் போராட்டமும் இருக்கும்.

முதல் படத்திலேயே பாரதிராஜாவை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?

அவரிடம் கதை சொல்லப் போகும்போது மிகவும் பயமாக இருந்தது. ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற என்னு டைய குறும்படத்தைப் பார்த்த பிறகுதான் என்னிடம் கதை கேட்கவே ஒப்புக் கொண்டார். நான் கதை சொல்ல ஆரம்பிப்பதற்கு ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத் தார். நான் முழுக் கதையை சொல்லி முடித்ததும் அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. நடிப்ப தாக உடனே சம்மதம் தெரிவித்தார்.

பெரிய ஜாம்பவான்களை இயக் கியவரை நாம் இயக்குகிறோமே என்ற பயம் படப்பிடிப்பின் முதல் நாளில் இருந்தது. ஆனால் அவர், நான் புதுமுக இயக்குநர் என்பதை புரிந்துகொண்டு என்னிடம் எளிமையாக பழகி இயக்க வைத்தார்.

‘குரங்கு பொம்மை’ படத்தின் படப்பிடிப்பின்போது மறக்க முடியாத அனுபவங்கள் ஏதாவது ஏற்பட்டதா?

படத்துக்காக வில்லனின் வீடு ஒன்றைத் தேடினோம். இறுதியாக ஒரு வீட்டைத் தேர்ந்தெடுத்தோம். கடைசியாகத்தான் அது அயோத்தி குப்பம் வீரமணியின் வீடு என்று தெரிந்தது. இன்னொரு நாள் காலையிலேயே படப்பிடிப்பை வைத்திருந்தோம். பாரதிராஜா சார் அதிகாலையிலேயே படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். ஆனால், முந்தைய நாள் இரவு எடிட்டிங் பணிகள் இருந்ததால் நான் சற்று தாமதமாகத்தான் படப்பிடிப்புக்கு போனேன். அவரிடம் போய் மன்னிப்பு கேட்டு அதற்குப் பிறகுதான் படப்பிடிப்பே தொடங்கினேன்.

குறும்படத்துக்கும் திரைப்படத்துக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுக்கும் இடையில் 2 வித் தியாசங்கள்தான் உள்ளன. அவை தயாரிப்புச் செலவும், படம் ஓடும் நேரமும். மற்றபடி இரண்டுக்குமே கடுமையான உழைப்பு தேவை. திரையரங்குகளில் மக்கள் படத் தைப் பார்த்து வசூல் வர வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை திரைப்படங்களில் இணைப்போம். ஆனால், குறும்படத்தில் கதை எழுதி முடித்தவுடன் நேரடியாக படப்பிடிப்புக்கு சென்று விடு வோம்.

இப்போது குறும்படம் இயக்குபவர்கள் பெருகி விட்டார்களே. இது நல்லதா, கெட்டதா?

கண்டிப்பாக நல்லதுதான். நான் இப்போது பயப்படாமல் படம் இயக்கி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் இயக்கிய குறும்படம்தான். சிலர் ஐ-போனில் ஒரு படத்தையே இயக்கியிருக்கிறார்கள். எதில் படம் இயக்கினாலும், அதில் சொல்லும் விஷயம் மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம். நாம் பரிசோதனை பண்ணிப் பார்ப்பதற்கு எதில் வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால், அதனை படமாக்கும் போது சில விஷயங்களைச் சேர்த்து பண்ண வேண்டும்.

நித்திலன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x