Last Updated : 09 Dec, 2014 08:46 AM

 

Published : 09 Dec 2014 08:46 AM
Last Updated : 09 Dec 2014 08:46 AM

இயக்குநருக்கு உள்ள பொறுப்புகள் கேமராமேனுக்கு இல்லை: ஆர்.வேல்ராஜ் பேட்டி

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் நல்ல கமர்ஷியல் இயக்குநர் என்கிற லகானை பிடித்தவர், ஆர்.வேல்ராஜ். தற்போது மீண்டும் அதே வேகத்தோடு தனுஷ், அனிருத் இருவரையும் வைத்து புதிய படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார்.

படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் ‘வை ராஜா வை’, ‘கொம்பன்’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகிறார். ஒரு பக்கம் ஒளிப்பதிவாளர், மறுபக்கம் இயக்குநர் என்று பரபரப்பாக இயங்கிவரும் ஆர்.வேல்ராஜை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

‘கொம்பன்’, ‘வை ராஜா வை’ என்று அடுத்தடுத்து இரண்டு படங்களின் ஒளிப்பதிவு வேலையை முடித்திருக்கிறீர்கள். அவை எப்படி வந்திருக்கிறது?

‘கொம்பன்’ கிட்டத்தட்ட ‘தேவர் மகன்’ பார்ட் 2 மாதிரி தான். ராமநாதபுரம் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் படமாக்கினோம். இந்தப் படத்துக்கு நல்ல டீம் அமைந்தது சந்தோஷமான விஷயம். ‘வை ராஜா வை’ படத்தின் ஷூட்டிங், கோவா, சிங்கப்பூர், சென்னை என்று பல இடங்களில் மொத்தம் 57 நாட்கள் நடந்தது. வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு அதிகாலையிலேயே படப்பிடிப்புக்கு வந்துவிடுவார் ஐஸ்வர்யா தனுஷ். ரஜினி சாரின் மகள் என்கிற எந்த பந்தாவும் அவருக்கு இல்லை. நல்ல அனுபவமிக்க இயக்குநராகவே அவர் எனக்குத் தெரிந்தார்.

தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இருவரோடும் உங்களுக்கு நல்லதொரு புரிதல் உண்டாக காரணம் என்ன?

நமக்கு என்ன தெரியும், மற்றவர்களின் தேவை என்ன என்பதை ஒருவரை ஒருவர் புரிந்து வேலைகளை கொடுத்தும், பெற்றும் கொள்கிற வகை யில் எங்களோட கேரக்டர் செட் ஆகிடுச்சு. அதனாலேயே வேறு எதைப்பற்றியும் நாங்கள் யோசிப்பதில்லை. எங்கள் உதவியாளர்களுக்கும் இந்த புரிதல் இயல்பாக தொற்றிக்கொள்வதால் அதே கூட்டணியோடு தொடர்ந்து பயணம் செய்வது இனிமையாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் திருவிடம் நீண்ட காலம் பணியாற்றியவர் நீங்கள். அவரிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

சிறந்த கேமராமேன் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுபவர் திரு. எந்த மாதிரியான சூழலுக்கு எந்த மாதிரியான ‘லைட்டிங்’ வைக்க வேண்டும் என்கிற நுணுக்கத்தை அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். ‘மகளிர் மட்டும்’ படத்தில் அவரிடம் கடைசி உதவியாளராக சேர்ந்தேன். ‘காதலா காதலா’ படத்தில் அவரது முதல் அசிஸ்டென்ட்டாக முழு பொறுப்பும் என் கைக்கு வந்தது. அடுத்துதான் ‘ஹேராம்’. என் மீது நம்பிக்கை வைத்து அந்தப்படத்தில் முக்கியமான பொறுப்புகளை எல்லாம் என்னிடம் ஒப்படைத்தார். அடுத்து ‘ஆளவந்தான்’. பெரிய இரண்டு படங்களின் பல வேலைகளை என்னை நம்பி கொடுத்தார். அதை நானும் சரியாக பயன்படுத்திக்கொண்டதால் அவருக்கு பிடித்த மாணவனாக இருக்க முடிந்தது.

ஒன்றிரண்டு பாலிவுட் படங் களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியதோடு நிறுத்திக் கொண்டது ஏன்?

மொழிப் பிரச்சினைதான் கார ணம். ஒரு படத்தின் கதையையும், காட்சியையும் ரசிக்காமல் நாம் படம் பண்ணமுடியாது. அப்படிச் செய்தால் எரிச்சல்தான் மிஞ்சும். பணத்துக்காக மட்டும் பணியாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் தமிழிலேயே முழு கவனம் செலுத்த முடிவெடுத்துவிட்டேன்.

‘பொல்லாதவன்’ படத்தின் ஒளிப்பதிவில் ‘நேச்சுரல்’, ‘கிளாமர்’ இரண்டையும் வித்தியாசமாக பிரித்து காட்சிப்படுத்திய விதம் பெரிதாக கவனிக்கப்பட்டதே?

அதற்கு கதைதான் கார ணம். ஒளிப்பதிவு பற்றி தெரிந்த இயக்குநரிடம் வேலை பார்ப்பது எப்போதும் பேர் வாங்கிக்கொடுக்கும். எனக்கு இந்த ஃபீல்தான் வேண்டும் என்று இணையும் இயக்குநர் அருகில் இருந்தால் நாம் எங்கோ போய்விடலாம். அப்படியான இயக்குநர்களில் ஒருவர்தான் வெற்றிமாறன். மீண்டும் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் அடுத்த படத்தை ஜூலையில் தொடங்குகிறோம்.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை இந்தியில் இயக்கப் போகிறீர்களா?

இல்லை. தனுஷ் அப்படி செய்ய மாட்டார். ஒரு படத்தை இரண்டாவது தடவை செய்ய அவருக்கு பிடிக்காது. அதே நடிப்பை மீண்டும் நடிப்பதை அவர் விரும்புவதில்லை. அதனால் நிச்சயம் அப்படி ஒரு யோசனை இல்லவே இல்லை.

ஒளிப்பதிவில் உங்களைக் கவர்ந்த சமீபத்திய படங்கள்?

‘மதயானைக் கூட்டம்’, ‘சூது கவ்வும்’, ‘ஜிகர்தண்டா’.

ஒளிப்பதிவாளரான நீங்கள் இயக்குநர் வேல்ராஜாக ஆனதும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

ஒரு இயக்குநருக்கு உள்ள பொறுப்புகள் மாதிரி கேமராமேனுக்கு இருப்பதில்லை. முக்கியமான நடிகர் ஒருவருக்கு காலை 11 மணிக்கு ‘ஷாட்’ என்று வரவழைத்து மாலை 4 மணிக்கு ‘ஷூட்’ செய்கிற சூழல் உருவாகிறது. இந்த டென்ஷன் கேமராமேனுக்கு இருப்பதில்லை. நடிகர்களிடம் தொடங்கி புரொடக் ஷன் வரைக்கும் இயக்குநர் பொறுப்பாக, கவனமாக இருக்க வேண்டும். படத்தின் வெற்றியும், தோல்வியும் இயக்குநரைத்தான் அதிகம் பாதிக்கிறது.

உங்கள் கனவுப் படம் என்ன?

எல்லோருக்குமே ஒரு கனவு படம் உண்டு. கண்டிப்பாக அது கமர்ஷியல் படமாக இருக்காது. என்னோட கனவு படமும் கமர்ஷி யல் படமல்ல. அதற்கு சரியான காலம் வேண்டும். அதை பொறுமையாகத்தான் செய்ய முடியும்.

குடும்பம்?

அம்மா, அப்பா மதுரையில் விவசாயம் பார்க்கிறார்கள். சென்னையில் என்னுடன் மனைவி கீதா, இரண்டு மகன் கள் இருக்கிறார்கள். படங்கள் செய்வதே கடினமான வேலை. அதற்கு எந்த ஒரு கட்டாயப் படுத்தலும் இருக்கக் கூடாது. அந்த வகையில் என் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாகவே என் குடும்பம் உள்ளது. அது எனக்கு கிடைத்த வரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x